You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வெங்காயம்: மலேசியாவிலும் கிடுகிடு விலை உயர்வு - ஒரு கிலோ 260 ரூபாய்க்கு விற்பனை
இந்தியாவை அடுத்து மலேசியாவிலும் உரிப்பதற்கு முன்பே கண்ணீர் சிந்த வைத்திருக்கிறது வெங்காயம். அங்கு கடந்த சில தினங்களாக ஒரு கிலோ இந்திய சிவப்பு வெங்காயம் 15 மலேசிய ரிங்கிட், அதாவது இந்திய மதிப்பில் 260 ரூபாய்க்கு விற்பனையாவதாக கூறப்படுகிறது.
மலேசியாவில் வெளியாகும் தமிழ் மற்றும் இதர மொழி ஊடகங்கள் இதுகுறித்து விரிவாக செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவில் இருந்து சிவப்பு மற்றும் பெரிய வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டதே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என மலேசிய உள்நாட்டு வர்த்தகப் பயனீட்டாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் இந்தியாவில் இருந்து 3,131 டன் சிவப்பு வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், டிசம்பரில் இது 1,399 டன்னாக குறைந்துவிட்டது என மலேசிய மத்திய விவசாய சந்தை வாரியம் சுட்டிக்காட்டுவதாக ஊடகச் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
வெங்காய தட்டுப்பாடு பிப்ரவரி மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த வாரியம் கூறியுள்ளது.
மலேசியாவின் சில மாநிலங்களில் தற்போது ஒரு கிலோ இந்திய சிவப்பு வெங்காயம் 10 முதல் 15 ரிங்கிட், அதாவது இந்திய மதிப்பில் 170 - 260 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. விலை உயர்வுக்கு முன் சிவப்பு வெங்காயத்தின் விலை குறைந்தபட்சம் 5 ரிங்கிட் - அதாவது 87 ரூபாய் மட்டுமே இருந்ததாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
இதையடுத்து இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிவப்பு வெங்காயத்தின் அளவு அதிகரிக்கும் வரை, பாகிஸ்தான், சீனா, தாய்லாந்து மற்றும் மியான்மரில் இருந்து இறக்குமதியாகும் வெங்காயத்தைப் பயன்படுத்துமாறு மலேசிய உள்நாட்டு வர்த்தகப் பயனீட்டாளர் நலத்துறை பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தியாவில் குறைந்து வரும் வெங்காயம் விலை
மகாராஷ்டிரா உள்ளிட்ட இந்தியாவில் வெங்காய உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் பல்வேறு மாநிலங்களில் பருவமழையின் காரணமாக, இந்த மாதத்தின் தொடக்கம் முதலே நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்தது.
ஒருகட்டத்தில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஒரு கிலோ வெங்காயம் 200 ரூபாய் வரை விற்கப்பட்டது. இதையடுத்து வெங்காயத்தின் விலையை குறைக்க வேண்டுமென்ற குரல் எழவே, மத்திய - மாநில அரசுகள் எகிப்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்து தற்போது விநியோகித்து வருகின்றன.
இந்நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வெங்காயத்தின் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதன் விலை கிட்டத்தட்ட பாதியாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதேபோன்று, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் வரத்து குறைந்ததால், இலங்கையிலும் வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி, வெங்காயத்தின் விலை உயர்வை பயன்படுத்தி கொண்ட சில வியாபாரிகள் திறன்பேசிகள், ஹெல்மெட் போன்றவற்றை வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் போன்ற அறிவிப்புகளை வெளியிட்டன. தமிழகத்தின் சில இடங்களில் வெங்காயம் திருமண பரிசாகவும் கொடுக்கப்பட்டது சமூக ஊடகங்களில் பேசுப்பொருளானது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: