You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
’சீஸின் துர்நாற்றம் தாங்க முடியவில்லை’ - நீதிமன்றத்துக்கு வந்த வினோத வழக்கு மற்றும் பிற செய்திகள்
தெற்கு ஜெர்மனியில் ஒரு சீஸ் கடையிலிருந்து துர்நாற்றம் வருகிறது என்பதை குறிக்கும் வகையில் அபாய பலகை வைக்க அனுமதி கோரி ஒரு பெண் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
மனுவேலா க்ரேக்லெர் என்னும் அப்பெண் முனிச்சின் தெற்கு பகுதியில், ஒரு சீஸ் கடையின் மேல் வசித்து வருகிறார்.
சீஸ் கடைக்காரருக்கும் அண்டை வீட்டுக்காரர்களுக்கும் 2016ஆம் ஆண்டு தொடங்கி இது தொடர்பாக பிரச்சனை நிலவி வந்தது.
"அந்த சீஸ் கடையின் துர்நாற்றம் தொந்தரவாக உள்ளது என்றும், அங்கிருந்து துர்நாற்றம் வீசுகிறது என்றும், க்ரேக் தொடர்ந்து தெரிவிக்கலாம் அது அவரின் உரிமை," என நீதிமன்றம் தெரிவித்தது.
இருப்பினும் அபாய பலகை வைக்க தடை விதித்துள்ளது நீதிமன்றம்.
தான் தொடர்ந்து அந்த சீஸ் கடையின் துர்நாற்றம் குறித்து குரல் கொடுக்கலாம் என நீதிமன்றம் தீர்ப்பளித்த்து தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என க்ரேக்லெர் தெரிவித்தார்.
அந்த சீஸ் கடையின் துர்நாற்றம் ஜன்னல்களின் வழியாகவும், படிகட்டுகளின் வழியாகவும், ப்ளக் பாயிண்டுகள் மூலமாகவும் வருவதாக அவர் தெரிவித்தார்.
ஆனால் அந்த கடையின் உரிமையாளர், மூக்கு போன்ற ஸ்டிக்கரும் அபாய குறி போன்ற ஸ்டிக்கரும் கடையின் வியாபாரத்தை கெடுப்பதாக தெரிவித்தார்.
அந்த கடையில் 200க்கும் அதிகமான சீஸ்கள் சேமித்து வைக்கப்படும்.
அந்த கடையின் உரிமையாளர் அக்கம்பக்கத்தில் விவசாயம் செய்வதால் வருவதாக இந்த துர்நாற்றம் தெரிவித்தார்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் ராணுவ சர்வாதிகாரி - யார் இவர்?
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் மற்றும் முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் பர்வேஸ் முஷாரஃபுக்கு ராஜதுரோக வழக்கு ஒன்றில் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது இஸ்லாமாபாத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம்.
2001 - 2008 காலகட்டத்தில் நாட்டின் அதிபராக இருந்த பர்வேஸ் முஷாரஃப், 2007ஆம் ஆண்டு அவசர நிலையை பிரகடனப்படுத்தி அரசமைப்பை மீறி ராஜதுரோகம் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முன்னாள் ராணுவ ஜெனரல் முஷாரஃப் 2016ஆம் ஆண்டு முதல் துபாயில் வசித்து வருகிறார்.
இந்த மாத தொடக்கத்தில் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த இரு தசாப்தங்களாக முஷாரப்பின் வாழ்வானது நிச்சயமற்ற ஒன்றாக இருக்கிறது.
1999ஆம் ஆண்டு ஆட்சி கவிழ்ப்பின் மூலம் ஆட்சியைப் பிடித்த முஷாரஃபை படுகொலை செய்ய பல்வேறு முறை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அவற்றில் இருந்து தப்பிப் பிழைத்தவர் முஷாரஃப்.
மலேசிய உச்சி மாநாட்டில் பங்கேற்காத இம்ரான்கான்
இஸ்லாமிய நாடுகளை ஒருங்கிணைக்கும் வகையில் மலேசிய அரசு ஏற்பாடு செய்துள்ள உச்சி மாநாட்டில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பங்கேற்காதது பரபரப்பையும் புது விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
கடைசி நேரத்தில் சௌதி அரேபியா கொடுத்த அழுத்தம் காரணமாகவே பிரதமர் இம்ரான்கான் மலேசிய பயணத்தைக் கைவிட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இது தவறான தகவல் என மறுத்துள்ளார் மலேசிய பிரதமர் துன் மகாதீர்.
கோலாலம்பூரில் நடைபெறும் 'கேஎல் உச்சி மாநாடு 2019', இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு (ஓஐசி - OIC)மாற்றாக உருவாக்கப்பட்டுள்ள புதிய ஏற்பாடு அல்ல என்றும், இது தொடர்பாக சௌதி அரேபிய மன்னர் சல்மான் அப்துல்அசிஸ் அல் சவுத்திடம் தாம் விளக்கமளித்து இருப்பதாகவும் மலேசிய பிரதமர் மகாதீர் தெரிவித்துள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்தில் வலுக்கும் போராட்டம்
டெல்லி மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராகவும் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் இரவு முழுவதும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்துக்கு திட்டமிட்டதாக சந்தேகத்தின் பேரில் சென்னை பல்கலைக்கழகத்தை சேர்ந்த கார்த்திகேயன், சுப்பையா என்ற இந்த இரு மாணவர்களை போலீசார் கைது செய்ததாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
அவர்களை விடுவிக்கக்கோரியும் போராட்டத்தை ஒடுக்கும் செயலில் ஈடுபடும் போலீசாரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க: குடியுரிமை சட்டத் திருத்தம்: சென்னை பல்கலைக்கழகத்தில் வலுக்கும் போராட்டம் - நடப்பது என்ன?
அண்ணா பல்கலைக்கழகம்: இரண்டாகப் பிரிக்கப்படுவது ஏன்?
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பது குறித்து ஆராய்வதற்காக ஐந்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டின் மிக முக்கியமான பல்கலைக்கழகங்களில் ஒன்று. 1978ஆம் ஆண்டில் சென்னையில் உருவாக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் உயர்கல்வி பட்டப்படிப்புகளை வழங்குவதுடன் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பொறியியல் கல்லூரிகள், இந்தப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், உயர் கல்வியில் சிறந்து விளங்கும் 20 கல்வி நிறுவனங்களை இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் எமினன்ஸ் ஆக அறிவிக்கும் திட்டத்தை முன்வைத்த மத்திய அரசு, அண்ணா பல்கலைக்கழகத்தையும் அதில் சேர்க்கப் பரிந்துரைத்தது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: