கிணற்றுக்குள் தவறுதலாக விழுந்து உயிரிழந்த 16 வயது மணப்பெண் மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Fauziyya Kabir Tukur/BBC
வடக்கு நைஜீரியாவில் உள்ள டன்பட்டா பகுதியில் திருமணம் நடக்கவிருந்த பெண் ஒருவர் தவறுதலாக கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்தார்.
16 வயதுடைய ஃபாத்திமா அபுபக்கருக்கு, டிசம்பர் 19ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது.
மணப்பெண் அவரது அத்தை வீட்டில், நண்பர்களுடன் கொண்டாடி இருந்திருக்கிறார். அப்போது கிணற்றுக்கு மிக அருகில் அவர் நின்று கொண்டிருந்தபோது, தவறுதலாக உள்ளே விழுந்துவிட்டதாக, உயிரிழந்த பெண்ணின் தந்தை பிபிசியிடம் தெரிவித்தார்.
திருமணத்திற்கு ஃபாத்திமா மிகுந்த ஆவலுடன் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதிர்ச்சியில் உறைந்து போயுள்ள மணமகனால், தொலைப்பேசியில்கூட பேச முடியவில்லை.
திருமணத்திற்காக அழைக்கப்பட்ட விருந்தினர்கள், தற்போது இறுதி சடங்கிற்காக தங்கள் வீட்டில் காத்திருப்பதாக, உயிரிழந்த மணப்பெண்ணின் தந்தை தெரிவித்தார்.

பிரிட்டன் பொதுத் தேர்தல் 2019: ஆட்சியமைக்க உரிமை கோரினார் போரிஸ் ஜான்சன்

பட மூலாதாரம், Getty Images
பிரிட்டனில் டிசம்பர் 12 அன்று நடைபெற்ற பொதுத் தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மொத்தமுள்ள 650 இடங்களில், 365 இடங்களில் கன்சர்வேடிவ் கட்சியும், 203 இடங்களில் தொழிலாளர் கட்சியும், ஸ்காடிஷ் தேசிய கட்சி 48 இடங்களிலும், தாராளவாத ஜனநாயகவாதிகள் அமைப்பு 11 இடங்களிலும்,டெமாக்ரடிக் யூனியனிஸ்ட் கட்சி 8 இடங்களிலும் பிற கட்சிகள் 15 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் போரிஸ் ஜான்சன் இங்கிலாந்து ராணியிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

அதிகரிக்கும் வங்கி மோசடிகள்

பட மூலாதாரம், PTI
சில காலத்திற்கு முன்பு வரை, இந்தியாவின் பொருளாதாரம் எவ்வளவு சிறப்பாக இயங்குகிறது என்பதன் அடிப்படையில், அரசாங்கத்திற்கு 10இல் எட்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.
சிலர் 10க்கு 10 என மதிப்பெண்ணளை தாராளமாக கொடுத்துக் கொண்டிருந்தார்கள். உலகெங்கிலும் உள்ள பொருளாதார வல்லுநர்கள் அரசாங்கத்தின் கொள்கைகளைப் புகழ்வதில் சோர்வடையவில்லை. ஆனால், இப்போது பலரின் நம்பிக்கை சற்று ஆட்டம் கண்டுள்ளது. கடந்த ஆறு காலாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி விகிதம் படிப்படியாக வீழ்ந்துவிட்டது.
வங்கிகளில் நடக்கும் மோசடிகள் தொடர்பான இந்திய ரிசர்வ் வங்கியின் தகவல்கள் பொது மக்களின் நம்பிக்கைக்கு மேலும் ஓர் அடியாக இருக்கிறது.
மேலும் படிக்க:மந்தமாகும் பொருளாதாரம்: வேகம் பிடிக்கும் வங்கி மோசடிகள்

பாலியல் வல்லுறவுக்கு 21 நாளில் மரண தண்டனை

பட மூலாதாரம், Getty Images
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வல்லுறவு மற்றும் அமில வீச்சு போன்ற கொடூரமான குற்றச் செயல்களில், அசைக்க முடியாத ஆதாரங்கள் இருந்தால் குற்றவாளிகளுக்கு 21 நாட்களுக்குள் மரண தண்டனை விதிக்க வகை செய்யும் புதிய சட்டம் ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசம் திஷா சட்ட மசோதா 2019 (ஆந்திரா குற்றவியல் சட்டத் திருத்த மசோதா 2019) என்றழைக்கப்படும் இந்த சட்டத்துக்கு ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் `திஷா' எனும் புனை பெயரால் அழைக்கப்படும் பெண் கால்நடை மருத்துவர் கடந்த மாதம், பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு, எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியிருந்தது.

இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை அளித்ததாக அமித் ஷா சொன்னது சரியா?

பட மூலாதாரம், Getty Images
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து மாநிலங்களவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதுவரை நான்கு லட்சத்து 61 ஆயிரம் இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய அரசு குடியுரிமை அளித்திருப்பதாகக் கூறினார். இந்தக் கருத்து சரியானதுதானா?
உள்துறை அமைச்சர் சொல்வதைப்போல உண்மையில் இலங்கைத் தமிழர்கள் சுமார் ஐந்து லட்சம் பேருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டிருக்கிறதா? இல்லை என்பதுதான் பதில்.
அமித் ஷா இலங்கையின் பூர்வீகக் குடிகளான தமிழர்களையும் தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றச் சென்ற இந்திய வம்சாவளித் தமிழர்களையும் குழப்பிக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












