You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பருவநிலை மாற்றம்: கிரீன்லாந்தில் உருகிவரும் பனிக்கட்டிகள் - உலக அளவில் என்ன ஆபத்து ? மற்றும் பிற செய்திகள்
கிரீன்லாந்து தீவில் பனிக்கட்டிகள் நாளுக்குநாள் வேகமாக உருகி வருகின்றன.
கடந்த 19990-களில் இருந்ததைவிட அங்கு தற்போது 7 முறை அதிகமாக பனிக்கட்டிகள் உருகி வருகின்றன.
கடந்த 26 ஆண்டுகளை கொண்ட செயற்கைக்கோள் பதிவுகளை ஆய்வு செய்த சர்வதேச அளவிலான துருவ பகுதிகளில் ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளும் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பில் இந்த தகவல் வெளிவந்துள்ளது.
இந்த உலகத்துக்கு சவாலாக அமைய போகும் விஷயங்களில் ஒன்றான அதிகரித்துவரும் கடல் மட்டத்தின் அளவு பிரச்சனை கிரீன்லாந்து தீவினாலும் இனி அதிகரிக்கும் என்று அவர்களின் ஆய்வு தகவல் கூறுகிறது.
இந்த நூற்றாண்டின் இறுதியில் உலக அளவில் கிரீன்லாந்தில் உருகும் பனிக்கட்டிகளால் மட்டும் கிட்டத்தட்ட 7 செ.மீ. அளவுக்கு கடல் மட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் உலகமெங்கும் கடலோர பகுதிகளில் வாழும் பல மில்லியன் மக்களின் வாழ்வுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா: இலங்கை தமிழர்களை மோதி அரசு ஒதுக்குகிறதா?
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத துன்புறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு வந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இந்திய குடியுரிமை கிடைக்க வழி செய்யும் இந்திய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் திங்கள்கிழமை இரவு நிறைவேறியது.
இந்திய அரசமைப்புச் சட்டம் தனது குடிமக்களிடையே மதப் பாகுபாடு காட்டுவதில்லை. அப்படி இருக்கும்போது மத அடிப்படையில் சிலருக்கு குடியுரிமை கிடைக்கவோ, மறுக்கவோ வகை செய்யும் சட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று கூறி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் மக்களவையில் தங்கள் எதிர்ப்பை கடுமையாகப் பதிவு செய்துள்ளன.
மத அடிப்படையில் குடியுரிமையில் முன்னுரிமையோ, பாகுபாடோ காட்டப்படுவது குறித்த விவாதம் ஒருபுறம் இருந்தாலும், அண்டை நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி இடம் பெயர்ந்தவர்கள் என்ற பட்டியலில், இலங்கையின் சிங்கள - பௌத்த பேரின வாதத்தால் பாதிக்கப்பட்டு வெளியேறி அகதிகளாக இந்தியாவில் இருக்கும், இந்துக்களாக அடையாளம் காணப்படும் இலங்கைத் தமிழர்கள் ஏன் சேர்க்கப்படவில்லை என்ற கேள்வி பலராலும் முன்வைக்கப்படுகிறது.
விரிவாகப் படிக்க: குடியுரிமை சட்டத் திருத்தம்: இந்திய வம்சாவழி தமிழ் அகதிகளின் நிலை என்ன?
உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்க காரணம் என்ன? - ஆனந்த் ஸ்ரீனிவாசன்
வெங்காய விலை அதிகரிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், அடுத்து முருங்கைக்காய், உளுந்து பருப்பு என பல உணவுப் பொருட்களின் விலை அதிகரித்தவண்ணம் உள்ளது. விலைவாசி பிரச்சனையை பேசும் நேரத்தில், அடுத்துவரவுள்ள ஜிஎஸ்டி கூட்டத்தில் வரி இல்லாத பொருட்களுக்கு அரசு வரி விதிக்கப்போகிறது என தகவல்கள் பரவியுள்ளன.
உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்க முக்கிய காரணங்கள் என்ன என்றும் எந்தெந்தப் பொருட்களுக்கு வரிவிதிக்க வாய்ப்புள்ளது எனவும் பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசனிடம் கேட்டோம்.
கேள்வி: கடந்த இரண்டு மாதங்களாக அதிகரித்துள்ள வெங்காய விலை குறைய வாய்ப்பு உள்ளதா? எப்போது வெங்காய விலை குறையும்?
பதில்: இது 25 ஆண்டுகளாக தொடரும் சிக்கல். வெங்காய விலையை எப்படி ஆளும் அரசு எதிர்கொள்கிறது என்பதுதான் முக்கியம். வெங்காய விளைச்சலில் பெரு முதலாளிகளை விட, சிறு,குறு விவசாயிகள்தான் ஈடுபடுகிறார்கள். கடந்த ஆண்டு, ரூ.5 வரை வெங்காய விலை குறைந்ததால், பல சிறு விவசாயிகள் வெங்காய விளைச்சலைத் தவிர்த்தார்கள். அதோடு வெங்காய பயிருக்கு மழை சரியான நேரத்தில் வரவில்லை.
விரிவாகப் படிக்க: உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்க காரணம் என்ன? - ஆனந்த் ஸ்ரீனிவாசன்
இலங்கை தமிழ் பெண்கள் பொட்டு வைக்க தடையா?
புதிய கடவுச்சீட்டு விண்ணப்பிக்கும் சந்தர்ப்பத்தில் தமிழ் பெண்கள் நெற்றியில் பொட்டு வைத்து புகைப்படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என குடிவரவு குடிஅகல்வு திணைக்களம் அறிவித்துள்ளதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
இந்த விடயம் இலங்கையில் தமிழ் பெண்கள் மத்தியில் ஒரு சர்ச்சையை தோற்றுவித்துள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் கயான் மிலிந்தவிடம் பிபிசி தமிழ் வினவியது.
சர்வதேச நியமங்களுக்கு அமைய சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் விதிமுறையின் பிரகாரம், 2015ஆம் ஆண்டு புதிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்படி, கடவுச்சீட்டுக்கான புகைப்படத்தை எடுக்கும் போது முகத்தில் ஒப்பனைகளோ அல்லது வேறு எந்தவித மாற்றங்களும் இல்லாது புகைப்படத்தை எடுக்க வேண்டும் என சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பின் விதிமுறைகளில் உள்ளதாகவும் அவர் கூறினார்.
விரிவாகப் படிக்க: இலங்கை தமிழ் பெண்கள் பொட்டு வைக்க தடையா? என்ன நடக்கிறது அங்கே?
உள்ளாட்சித் தேர்தல்: எம்.ஜி.ஆர் இருந்த போது அதிமுக ஏன் தோற்றது?
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்களை மாநகராட்சிப் பகுதிகளுக்கு நடத்தாமல் ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் நடத்துவது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருக்கின்றன. ஆனால், இதற்கு முன்பாக கிட்டத்தட்ட இதேபோல ஒரு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவுகள் என்ன, அதற்குப் பிறகு மாநகராட்சித் தேர்தல் நடைபெற்றதா?
1970களின் துவக்கத்தில் மாநகராட்சி அமைப்புகளில் நடந்ததாகச் சொல்லப்பட்ட 'மஸ்டர் ரோல் ஊழல்' விவகாரத்தையடுத்து தமிழ்நாட்டில் இருந்த உள்ளாட்சி அமைப்புகள் அனைத்தும் தி.மு.க. அரசால் கலைக்கப்பட்டன. இதற்குப் பிறகு, பல ஆண்டுகள் உள்ளாட்சித் தேர்தலே நடக்காமல் இருந்த நிலையில், 1986 பிப்ரவரியில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடக்குமென அறிவிக்கப்பட்டது.
மாநகராட்சிப் பகுதிகள் தவிர்த்த பிற பகுதிகளில் இந்தத் தேர்தல் நடக்குமென்று அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் அப்போது சென்னை, மதுரை, கோயம்புத்தூர் என மூன்று மாநகராட்சிகள் மட்டுமே இருந்தன.
விரிவாகப் படிக்க:உள்ளாட்சித் தேர்தல்: 1986இல் அதிமுக ஏன் தோற்றது? - ஒரு ஃப்ளாஷ்பேக்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: