You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உள்ளாட்சித் தேர்தல்: எம்.ஜி.ஆர் இருந்த போது அதிமுக ஏன் தோற்றது? - ஒரு ஃப்ளாஷ்பேக்
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்களை மாநகராட்சிப் பகுதிகளுக்கு நடத்தாமல் ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் நடத்துவது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருக்கின்றன. ஆனால், இதற்கு முன்பாக கிட்டத்தட்ட இதேபோல ஒரு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவுகள் என்ன, அதற்குப் பிறகு மாநகராட்சித் தேர்தல் நடைபெற்றதா?
1970களின் துவக்கத்தில் மாநகராட்சி அமைப்புகளில் நடந்ததாகச் சொல்லப்பட்ட 'மஸ்டர் ரோல் ஊழல்' விவகாரத்தையடுத்து தமிழ்நாட்டில் இருந்த உள்ளாட்சி அமைப்புகள் அனைத்தும் தி.மு.க. அரசால் கலைக்கப்பட்டன. இதற்குப் பிறகு, பல ஆண்டுகள் உள்ளாட்சித் தேர்தலே நடக்காமல் இருந்த நிலையில், 1986 பிப்ரவரியில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடக்குமென அறிவிக்கப்பட்டது.
மாநகராட்சிப் பகுதிகள் தவிர்த்த பிற பகுதிகளில் இந்தத் தேர்தல் நடக்குமென்று அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் அப்போது சென்னை, மதுரை, கோயம்புத்தூர் என மூன்று மாநகராட்சிகள் மட்டுமே இருந்தன.
1986 பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டிருந்த அந்தத் தேர்தலுக்கும் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கும் இடையில் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. 1986லும் மாநகராட்சிப் பகுதிகளுக்குத் தேர்தல் நடைபெறவில்லை. நகராட்சிப் பகுதிகள் வரை மட்டுமே தேர்தல்கள் நடைபெற்றன (இந்த முறை நகராட்சிப் பகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்படவில்லை).
இப்போதைப் போலவே பல முறை உள்ளாட்சித் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு, நிறுத்தப்பட்டு இறுதியாக 1986 பிப்ரவரி 23ஆம் தேதியன்று தேர்தல்கள் நடைபெற்றன. கிட்டத்தட்ட எட்டு முறை அறிவிக்கப்பட்டு, நிறுத்தப்பட்டு தேர்தல்கள் நடைபெற்றன.
இப்போதைப் போலவே அப்போதும் பலர் பெண்கள், தாழ்த்தப்பட்டோர் இடஒதுக்கீடு கோரி நீதிமன்றங்களை அணுகினர். அதனால், பிப்ரவரி 23ல் தேர்தல் நடக்குமா என்பதே கேள்விக்குறியாக இருந்தது.
இது குறித்து தஞ்சையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி, "அவருடைய (எம்.ஜி.ஆருடைய) எண்ணமெல்லாம் தேர்தல் வருவதாக அறிவிக்க வேண்டும். இது நீதிமன்றங்களில் இடைக்காலத் தடை பெற்று நின்றுபோகவும் வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
இருந்தபோதும் திட்டமிட்டபடி பிப்ரவரி 23ஆம் தேதியன்று ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிப் பகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. அன்றைய தினம் 7.30 மணிக்கு வாக்குப் பதிவு துவங்கியது. மாநிலம் முழுவதும் 65 சதவீத வாக்குகள் பதிவாயின. தென்னாற்காடு மாவட்டத்தில் மாநிலத்திலேயே அதிகபட்சமாக 75 சதவீத வாக்குகள் பதிவாயின.
ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி, நகராட்சி ஆகியவற்றின் தலைவர்கள் அந்தத் தேர்தலில் நேரடியாகத் தேர்வு செய்யப்பட்டனர். சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க அப்போது வயது வரம்பு 21 என நிர்ணியிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க வயது வரம்பு 18ஆகக் குறைக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் முதன் முறையாக 18 வயதினர் வாக்களித்தது அந்தத் தேர்தலில்தான்.
தேர்தல் முடிவுகள் தி.மு.கவுக்குச் சாதகமாக இருந்தன. மொத்தமுள்ள 97 நகராட்சிகளில்70 நகராட்சிகளை தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது. அ.தி.மு.க. கூட்டணியில் அ.தி.மு.கவும் காங்கிரசும் தலா 11 நகராட்சிகளை கைப்பற்றி ஒட்டுமொத்தமாக 22 இடங்களையே பெற்றன.
ஆனால், ஊராட்சி ஒன்றியத் தலைவர்களுக்கான தேர்தலில் மொத்தமுள்ள 380 இடங்களில் தி.மு.க. 138 இடங்களையும் அ.தி.மு.க. 129 இடங்களையும் கைப்பற்றின. அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் 68 இடங்களைக் கைப்பற்றியது.
அ.தி.மு.கவின் கோட்டையாக இருந்த மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமாரி மாவட்டங்களில் பெரும்பான்மையான இடங்கள் அக்கட்சியின் கையைவிட்டுப் போயின. மதுரை மாவட்டத்தில் இருந்த ஏழு நகராட்சிகளில் ஐந்து நகராட்சிகளை தி.மு.க. கைப்பற்ற, அ.தி.மு.கவும் காங்கிரசும் தலா ஒரு நகராட்சியையே கைப்பற்றின.
கன்னியாகுமரியில் இருந்த நான்கு நகராட்சிகளில் இரண்டை தி.மு.கவும் இரண்டை சிபிஎம்மும் கைப்பற்றின. வட ஆற்காடு மாவட்டத்தில் 12 நகராட்சிகளையும் தி.மு.க. பிடித்தது.
இந்தத் தேர்தல் பிரசாரத்திற்கு எம்.ஜி.ஆர். வராதது ஒரு காரணமாகச் சொல்லப்பட்டது. ஆனால், அதற்கு சற்று முன்பு நடந்து முடிந்திருந்த செய்யாறு தொகுதியின் இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதாவோ பிரசாரத்திற்குச் செல்லவில்லை. இருந்தபோதும் அந்தத் தொகுதியை அ.தி.மு.க. கைப்பற்றியது.
இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. அடைந்த பின்னடைவுக்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டன. முக்கியமான காரணமாக, அ.தி.மு.கவிற்குள் இருந்த உட்கட்சிப் பூசல். அதேபோல, காங்கிரசிற்குள்ளும் கடுமையான மோதல்கள் இருந்தன. தவிர, இந்தத் தேர்தலுக்கான பிரசாரத்தில் உடல் நலம் குன்றியிருந்த எம்.ஜி.ஆர். ஈடுபடவில்லை. தன்னுடைய ஆதரவாளர்கள் நீக்கப்பட்டதால் அதிருப்தியில் இருந்த ஜெயலலிதாவும் ஈடுபடவில்லை.
"இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்ததற்கு அக்கட்சிக்குள் இருந்த உட்கட்சி மோதல் மிக முக்கியமான காரணம். ஏற்கனவே உடல் நலம் குன்றியிருந்த எம்.ஜி.ஆர். இந்தத் தோல்விக்குப் பிறகு மாநகராட்சித் தேர்தலை நடத்தவிரும்பவில்லை" என நினைவுகூர்கிறார் அந்த காலகட்டத்தில் தராசு பத்திரிகையை ஆசிரியராக இருந்து நடத்திவந்த ஷ்யாம்.
இந்தத் தேர்தல் முடிவுகளை ரத்துசெய்ய வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் சிலர் முறையிட்டனர். ஆனால், அதில் ஏதும் நடக்கவில்லை.
மதுரை, சென்னை, கோயம்புத்தூர் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் இதற்குப் பிறகு நடத்தப்படவில்லை. பஞ்சாயத்து ராஜ் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, பத்தாண்டுகள் கழித்து 1996ல்தான் தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தல்கள் மீண்டும் நடத்தப்பட்டன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: