You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னை மட்டுமல்ல ஆஸ்திரேலியா நாட்டையும் ஆட்டிப்படைக்கிறது தண்ணீர் பஞ்சம் மற்றும் பிற செய்திகள்
'ஆஸ்திரேலியாவை ஆட்டிப்படைக்கும் தண்ணீர் பஞ்சம்'
சில மாதங்களுக்கு முன்பு சென்னை தண்ணீர் பஞ்சம் சர்வதேச தலைப்பு செய்தி ஆனது. ஹாலிவுட் நடிகர் லியானர்டோ டி கேப்ரியோ சென்னை தண்ணீர் பஞ்சம் குறித்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இப்போது நிலைமை சரியாகிவிட்டதாக அரசு அறிவித்துவிட்டது. ஆனால், இப்போது ஆஸ்திரேலியாவைக் கடுமையாக ஆட்டிப்படைக்கிறது தண்ணீர் பஞ்சம்.
தண்ணீரைப் பயன்படுத்தப் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது ஆஸ்திரேலியா அரசு. கிரேட்டர் சிட்னி, ப்ளூ மவுண்டன்ஸ் மற்றும் இல்லாவாரா பகுதி மக்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்சக் கூடாது, இரு பக்கெட் தண்ணீர் கொண்டுதான் வாகனங்களைக் கழுவ வேண்டும், நீச்சல் குளத்தில் தண்ணீர் நிரப்பச் சிறப்பு அனுமதி பெற வேண்டும்.
இதனை மீறும் தனி நபர்களுக்கு 150 அமெரிக்க டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும், வணிக நிறுவனங்களுக்கு 550 டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என்கிறது ஆஸ்திரேலிய அரசு.
அதே நேரம் வெப்பமும் கடுமையாக அங்கு அதிகரித்து வருகிறது. 40 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ள வெப்பத்தின் காரணமாகக் காட்டுத்தீ சம்பவங்களும் ஏற்பட்டுள்ளன. நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் மட்டும் 100 காட்டுத்தீ சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன.
இதற்குக் காலநிலை மாற்றமும் முக்கிய காரணம் என்கிறார்கள் அறிவியலாளர்கள். காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள அதிக வெப்பத்தின் காரணமாக வறட்சி ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள் அவர்கள்.
கர்நாடகா தேர்தல்: காங்கிரஸ் சறுக்கியது எப்படி?
கர்நாடகா மாநில சட்டமன்ற இடைத்தேர்தலில் 15 தொகுதிகளில் 12 இடங்களில் வென்றதை அடுத்து, அம்மாநிலத்தில் எந்த இடரும் இல்லாமல் ஆட்சியைத் தொடர்கிறது பா.ஜ.க. இந்த வெற்றிக்குக் காரணம் எடியூரப்பா எனப் பரவலாகக் கூறப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு, கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் 15 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தார்கள். இதனால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்தது.
விரிவாகப் படிக்க:கர்நாடகா இடைத்தேர்தல்: பா.ஜ.க வென்றது எப்படி? - ஓர் அலசல்
சுற்றுச் சூழலை அழகுபடுத்தும் சுவரோவியம்; இனவாதத்தை உயர்த்திப் பிடிக்கின்றனவா?
இலங்கையில் சுற்றுச் சூழலை அழகுபடுத்தும் வகையில் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படும் வீதியோரச் சுவர்களில் வரையப்படும் ஓவியங்களில் அதிகமானவை சிங்கள, பௌத்த பேரினவாதத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
மேலும் தமிழர் மற்றும் முஸ்லிம் சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் வகையில் இந்தச் சுவரோவியங்கள் காணப்படுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
குடியுரிமை சட்ட திருத்த மசோதா: முழுமையான விளக்கம் 500 வார்த்தைகளில்
சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா திங்கள்கிழமை நள்ளிரவு மக்களவையில் நிறைவேறியது. இது தொடர்பாக நடந்த நீண்ட விவாதத்துக்கு பிறகு திங்கள்கிழமை நள்ளிரவு வாக்கெடுப்பு நடந்தது. மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
விரிவாகப் படிக்க:குடியுரிமை சட்ட திருத்த மசோதா: முழுமையான விளக்கம் 500 வார்த்தைகளில்
இலங்கை: சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரி பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டாரா?
இலங்கை ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரியான கானியா வெனிஸ்டர் பிரான்சிஸிடம் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்கள அலுவலகத்தில் நேற்று மாலை முதல் இரவு வரையும், இன்றைய தினமும் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: