You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை: சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரி பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டாரா?
இலங்கை ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரியான கானியா வெனிஸ்டர் பிரான்சிஸிடம் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்கள அலுவலகத்தில் நேற்று மாலை முதல் இரவு வரையும், இன்றைய தினமும் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரிகள் மற்றும் சட்டத்தரணிகளுடன் குறித்த பெண் அதிகாரி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகைத் தந்துள்ளார்.
சுவிட்சர்லாந்து அதிகாரி கடத்தப்பட்டதாக முறைப்பாடு
இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பணியாற்றும் பெண் அதிகாரியொருவர் கடந்த மாதம் 25ஆம் தேதி வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த சம்பவம் தொடர்பில் சுவிட்சர்லாந்து தூதரகம் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளிக்க முன்வராத பின்னணியில், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸார் இணைந்து இந்த விசாரணைகளை ஆரம்பித்ததாக வெளிவிவகார அமைச்சு கடந்த மாத இறுதியில் அறிவித்திருந்தது.
சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பணியாற்றும் இலங்கையைச் சேர்ந்த பெண் அதிகாரி அடையாளம் தெரியாத சிலரால் கடத்தப்பட்டு, தடுத்து வைத்து சுவிட்சர்லாந்து தூதரகம் தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்ளும் நோக்குடன் விசாரணை நடத்தியதாக கூறப்பட்டது.
இந்த விடயம் தொடர்பில் சுவிஸர்லாந்து, இலங்கை அரசாங்கத்திற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவத்தை முக்கிய விடயமாக தாம் கருத்திற்கொள்ளுவதாக சுவிஸர்லாந்து வெளிவிவகார அமைச்சு கடந்த மாதம் அறிக்கையொன்றை வெளியிட்டு கூறியிருந்தது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் விரைவில் அடையாளம் காணப்பட்டு, அவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமது தூதரகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் இலங்கை அரசாங்கத்திடம் சுவிஸர்லாந்து அரசாங்கம் கோரிக்கை விடுத்தது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சிறப்பு அதிகாரி நிஷாந்த சில்வா பாதுகாப்பு அமைச்சின் உரிய அனுமதியை பெறாது, கடந்த 24ஆம் தேதி சுவிட்சர்லாந்துக்கு தப்பிச் சென்றிருந்தார்.
இலங்கையில் கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பல முக்கிய குற்றச் சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளை நடத்திய அதிகாரியே இவ்வாறு சுவிட்சர்லாந்துக்கு தப்பிச் சென்றிருந்தார்.
இந்த சம்பவம் நடைபெற்ற மறுதினமே சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரி பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடு பதிவாகியிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை உரிய முறையில் நடத்துவதற்காக முறைப்பாடொன்றை பதிவு செய்யுமாறு சுவிஸர்லாந்து தூதரகத்திடம் அரசாங்கம் பல்வேறு சந்தர்ப்பங்களில் கோரியிருந்த நிலையிலேயே, கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண் அதிகாரி நேற்றைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் முன்னிலையாகியிருந்தார்.
வெளிநாடு செல்ல தொடர்ந்து தடை
கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூரகத்தின் பெண் அதிகாரிக்கு நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் இடம்பெற்ற போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் அதிகாரியிடம் தொடர்ந்தும் குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலத்தை பதிவு செய்துக் கொள்ளும் நோக்குடனேயே நீதிமன்றத்திடமிருந்த இந்த உத்தரவு பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டுள்ளாரா?
கடத்தப்பட்டு அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் பெண் அதிகாரி பாலியல் ரீதியில் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளாரா அல்லது தாக்குதலுக்கு இலக்காகியுள்ளாரா என்பது தொடர்பில் ஆராயுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையை பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த அதிகாரியின் மனநிலை குறித்தும் ஆராய்ந்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சுவிட்சர்லாந்து பெண் அதிகாரியிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்கு முன்னர் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்த குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று நடவடிக்கை எடுத்திருந்தனர்.
எனினும், பெண் வைத்தியர் இல்லாமையினால், கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண் அதிகாரி வைத்திய பரிசோதனைகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், குறித்த அதிகாரியை விரைவில் பெண் வைத்தியர் ஒருவரிடம் முன்னிலைப்படுத்தி அறிக்கையை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: