கர்நாடகா தேர்தல்: காங்கிரஸ் சறுக்கியது எப்படி? பா.ஜ.க வென்றது எதனால்? - ஓர் அலசல்

    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசி இந்திக்காக

கர்நாடகா மாநில சட்டமன்ற இடைத்தேர்தலில் 15 தொகுதிகளில் 12 இடங்களில் வென்றதை அடுத்து, அம்மாநிலத்தில் எந்த இடரும் இல்லாமல் ஆட்சியைத் தொடர்கிறது பா.ஜ.க. இந்த வெற்றிக்குக் காரணம் எடியூரப்பா எனப் பரவலாகக் கூறப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு, கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் 15 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தார்கள். இதனால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்தது.

அதே நேரத்தில் கூட்டணி அரசுக்கு எதிராகச் செயல்பட்டதாலும், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி 17 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதில் 15 இடங்களில் மறுதேர்தல் நடந்தது.

மறுதேர்தல் நடந்த தொகுதிகளில் 7 தொகுதிகள் வடக்கு கர்நாடகத்தைச் சேர்ந்தவை. இவை லிங்காயத்துகள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதி, எடியூரப்பா லிங்காயத்து சாதியைச் சார்ந்தவர்.

காங்கிரஸ் சறுக்கியது எப்படி?

காங்கிரஸ் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது, அதுவும் 13,521 மற்றும் 39,727 வாக்கு வித்தியாசத்தில்.

முன்னதாக, தேர்தல் முடிவுகள் வெளியானதும் இன்று (திங்கள்கிழமை) மதியம் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான, சித்தராமையா சட்டசபை குழு தலைவர் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார். இதனால் எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்த்தையும் சித்தராமையா இழக்கிறார்.

காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை அடுத்து கர்நாடக காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை தினேஷ் குண்டுராவும் தம் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மதச்சார்பற்ற ஜனதா தளம் ஒரு தொகுதியில்கூட வெல்லவில்லை.

"இது எடியூரப்பாவின் தேர்தல். சாதி, பணம், மற்றும் மதம் ஆகியவற்றின் அடிப்படையில் வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளது," என மூத்த காங்கிரஸ் தலைவர் பி.எல். சங்கர் பிபிசியிடம் தெரிவித்தார்.

மேலும் காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையே நிலவிய குழப்பம்தான் இந்த தோல்விக்குக் காரணம் என்றும் பி.எல். சங்கர் ஒப்புக் கொண்டுள்ளார்.

அவர், "டிசம்பர் 9ஆம் தேதி புதிய அரசாங்கம் பொறுப்பேற்கும் எனக் காங்கிரஸ் கூறியது. மீண்டும் ஒரு தேர்தலை அனுமதிக்க மாட்டோமென மதச்சார்பற்ற ஜனதா தளம் கூறியது. வாக்குகள் எண்ணப்படுவதற்கு சில நாட்கள் முன் மீண்டும் ஒரு கூட்டணி ஆட்சிக்கு இரண்டு கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தின. இதுதான் குழப்பத்திற்குக் காரணம்" என்கிறார்.

மாறிய வாக்குகள்

பொதுவாக ஒக்கலிகர்கள் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிக்குத்தான் வாக்களிப்பார்கள்.

இவர்கள் தெற்கு கர்நாடகாவில் உள்ள மாண்டியா மாவட்டத்தில்தான் அதிகமாக வசிக்கிறார்கள்.

ஆனால், இந்த முறை அந்த பகுதியில் உள்ள இரண்டு தொகுதிகளில் பா.ஜ.க வென்றுள்ளது.

மாண்டியாவில் வலுவாக பா.ஜ.க காலூன்றிவிட்டது என்பதை மறுக்கிறது காங்கிரஸ்.

"இந்த தொகுதிகளில் தேர்தல் வேலை செய்ய ஆட்கள் இல்லாமல் பா.ஜ.க திணறியது. குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில்தான் அவர்கள் இங்கு வென்று இருக்கிறார்கள்" என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த காங்கிரஸ் நிர்வாகி.

மாண்டியா பகுதியில் உள்ள சிக்கபல்லபூர் எனும் தொகுதியில் 34,801 வாக்குகள் வித்தியாசத்திலும், கே ஆர் பெட்டா தொகுதியில் 9000 வாக்குகள் வித்தியாசத்திலும் பா.ஜ.க வென்றுள்ளது.

தொடர்வாரா எடியூரப்பா?

எடியூரப்பாவே பா.ஜ.க தலைவராகத் தொடர்வாரா? என பல்வேறு தரப்புகளால் விவாதிக்கப்பட்டது.

ஏனெனில், அக்கட்சி, 75 வயதான கட்சியின் மூத்த தலைவர்களை, `மார்க் தர்ஷக் மண்டல்` (வழிகாட்டி குழு)-க்கு அனுப்ப முன்பு முடிவு செய்து இருந்தது.

எடியூரப்பாவுக்கு 75 வயதுக்கு மேல்.

"மகாராஷ்டிரா பா.ஜ.கவுக்கு பாடமாக அமைந்துவிட்டது. எடியூரப்பாவுக்கு எந்த சங்கடத்தையும் தர பா.ஜ.க தலைமை விரும்பாது. அவரே தொடர்வார்," என்கிறார் மூத்த அரசியல் ஆய்வாளர் சந்தீப் சாஸ்திரி.

மேலும் அவர், "பா.ஜ.கவின் வெற்றிக்குக் காரணம் மக்களின் மனநிலைதான். இடைத்தேர்தல் பெரும்பாலும் ஆளுங்கட்சிக்கு சாதகமாகத்தான் இருக்கும். எடியூரப்பாவின் செல்வாக்கும் இந்த தேர்தல் வெற்றிக்கு ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது," என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: