ஜப்பான் தொலைபேசி நிறுவனத்தை 24,000 முறை அழைத்து புகார் செய்த முதியவர் கைது மற்றும் பிற செய்திகள்

அலைப்பேசி அழைப்பு

பட மூலாதாரம், Getty Images

தொலைபேசி சேவை நிறுவனத்திதை 24,000 முறை அழைத்த 71 வயது முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அகிடோஷி ஒகாடாமோ என்னும் அந்த முதியவர் வெறும் எட்டு நாட்களில் மட்டும் கேடிடிஐ என்னும் அந்நிறுவனத்தின் இலவச சேவை எண்ணை ஆயிரம் முறைக்கு மேல் தொடர்பு கொண்டுள்ளார்.

இரண்டரை வருடங்களாக தொடர்ந்து அந்த முதியவர் தங்களை அழைத்ததாக அந்த நிறுவனம் உள்ளூர் ஊடகத்திடம தெரிவித்துள்ளது.

ஒகாடாமோ, தான் அந்த நிறுவனத்திடம் தவறாக நடந்து கொள்ளவில்லை என்றும், தான் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரிவித்தார்.

மேலும் கேடிடிஐ என்ற அந்த தொலைத்தொடர்பு சேவை நிறுவனம் தனது ஒப்பந்தத்தை மீறியதாக ஒகாடாமோ குற்றஞ்சாட்டியுள்ளார் என ஜப்பானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

டோக்கியோ மெட்ரோபாலிடன் போலீஸ், "ஒகாடாமோ அந்த நிறுவனத்தை அழைத்து வாடிக்கையாளர் சேவையின் ஊழியரை தவறாக பேசுவார் அல்லது அந்நிறுவனத்தின் பிரதிநிதி தன்னை சந்தித்து மன்னிப்பு கோர வேண்டும் என்று கூறுவார்," என தெரிவித்துள்ளது.

சில நேரங்களில் கால் செய்து உடனடியாக துண்டிக்கவே அவர் அந்நிறுவனத்தை அழைப்பார் என்றும் கூறப்படுகிறது.

முதலில் தாங்கள் இதுகுறித்து புகார் ஏதும் தெரிவிக்க வேண்டாம் என்று நினைத்ததாகவும் ஆனால் அந்த முதியவர் அடிக்கடி அழைப்பதால் பிற வாடிக்கையாளர்களின் அழைப்பை ஏற்க முடியவில்லை என்றும் கேடிடிஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த முதியவர் மீது ஒரு வர்த்தகத்தை `இயல்பாக இயங்கவிடாமல் தடுத்ததாக` குற்றம் பதியப்பட்டுள்ளது.

Presentational grey line

டிக்டாக் செயலி: அமெரிக்கப் பயனர்களின் தகவல்களைத் திருடி சீனாவுக்குத் தருகிறதா?

டிக் டாக்

பட மூலாதாரம், Getty Images

டிக் டாக் செயலி தன்னுடைய பயனாளர்களின் பெரும்பாலான தகவல்களைச் சீனாவிடம் கொடுக்கிறது என அமெரிக்காவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் பயனாளர்களின் அனுமதியின்றி ரகசியமாகத் தகவல்களை எடுக்கிறது என வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பைட்டான்ஸ் என்ற சீன நிறுவனத்தைத் தாய் நிறுவனமாகக் கொண்ட டிக்டாக் அமெரிக்காவில் நிறையப் பயனாளர்களைக் கொண்டுள்ளது.

உலகம் முழுதும் அரை பில்லியன் பயனாளர்களைக் கொண்ட டிக்டாக் செயலி ஏற்கனவே அமெரிக்கத் தகவல்களைச் சீன சர்வர்களில் சேகரித்து வைப்பதை மறுத்துள்ளது.

இந்த செயலியின் தகவல் சேகரிப்பு மற்றும் தணிக்கை முறையைக் கொண்டு வட அமெரிக்காவில் பல்வேறு அழுத்தங்களைச் சந்தித்து வருகிறது.

Presentational grey line

மேட்டுப்பாளையம் விபத்து: 17 பேரையும் கொன்றது தீண்டாமை சுவர்தான் - ஊர் மக்கள் குற்றச்சாட்டு

ராமசாமி

மேட்டுப்பாளையம் நடூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் காலனியில் கனமழையால் கருங்கல் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு காரணமான 25 அடி உயர் சுவர் தீண்டாமையின் குறியீடு என இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

''பல ஆண்டுகளாக சமமான நிலப்பரப்பில்தான் இங்கே வீடுகளும், காடுகளும் இருந்தன. 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதிதிராவிடர் காலனிக்கு அருகே தனியார் வீடுகள் கட்டப்பட்டன. பல மடங்கு மண்னை கொண்டுவந்து கொட்டி, நாங்கள் வாழும் நிலப்பரப்பை விட மேடான பகுதியை உருவாக்கி, விபத்துக்குள்ளான வீட்டின் மிக அருகே, சொகுசு குடியிருப்பு ஒன்று கட்டப்பட்டது. அப்போது கட்டப்பட்டது தான் இந்த கருங்கல் சுவரும்.'' என உள்ளூர் மக்கள் இந்த சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டுகளை நம்முடன் பகிர்ந்து கொண்டனர்.

Presentational grey line

விக்ரம் லேண்டர் உடைந்த பாகத்தை கண்டுபிடித்தது எப்படி?

சண்முக சுப்ரமணியம்

பட மூலாதாரம், Facebook

மதுரையை பூர்வீகமாகக் கொண்ட சென்னையைச் சேர்ந்த 33 வயது சண்முக சுப்ரமணியம் நாசா விண்கலன் எடுத்த புகைப்படங்களின் உதவியோடு நிலவின் பரப்பில் விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்களை அடையாளம் கண்டுள்ளார்.

நிலவை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-2 விண்கலனை செலுத்தியது. இதில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் என்ற தரையிறங்கும் கலன், கடந்த செப்டம்பர் 7-ம் தேதி நிலவில் மென்மையாக தரையிறங்குவதற்கான ஏற்பாடுகளை இஸ்ரோ செய்திருந்தது.

ஆனால், சவாலான இந்த பணி தோல்வியில் முடிந்தது. நிலவில் தரையிறங்குவதற்கு சற்று முன்பாக விக்ரம் லேண்டருன் தொடர்பை இழந்தது இஸ்ரோ கட்டுப்பாட்டு நிலையம். காணாமல் போன விக்ரம் லேண்டருக்கு என்ன ஆனது என்று இஸ்ரோ மட்டுமல்லாமல், நாசாவின் நிலவு ஆராய்ச்சி விண்கலனும் ஆராய்ந்து வந்தன.

Presentational grey line

'வாசி' வானதி: "வனம் சுமக்கும் ஒரு பறவை"

வானதி

வானதி சிறப்பு குழந்தைகளுக்காக ஏறத்தாழ ஒரு தசாப்தமாக வேலை செய்கிறார். திருச்சியில் சிறப்புக் குழந்தைகளுக்கான ஆசிரியராக பணியைத் தொடங்கிய வானதி, இப்போது திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் சிறப்புக் குழந்தைகளுக்கென்றே ஒரு பிரத்தியேக மையத்தைத் தொடங்கி இருக்கிறார்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடுதான் வானதியின் சொந்த ஊர். இளம் வயதில் இவர் பார்த்த ஒரு சம்பவம்தான் வானதியின் வாழ்க்கையை மாற்றி இருக்கிறது.

"சிறப்புக் குழந்தைகள், அவர்களது செயல்பாடு குறித்தெல்லாம் எனக்கு அப்போது எந்த புரிதலும் கிடையாது. எல்லோருக்கும் சிறப்புக் குழந்தைகள் குறித்து ஒரு பார்வை இருக்கும்தானே? எனக்கு அப்படிதான் இருந்தது. எந்த புரிதலும் இல்லை. சிறுவயதில் நான் பார்த்த ஒரு காட்சி என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது," என்கிறார் வானதி.

Presentational grey line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: