ஜப்பான் பிரதமரை 'மனநிலை சரியில்லாதவர்' என விமர்சிக்கும் வடகொரியா

Japan's Prime Minister Shinzo Abe

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே

தங்கள் நாடு நடத்திய 'ராக்கெட் லாஞ்சர்' சோதனையை 'ஆயுத சோதனை' என்று கூறிய ஜப்பான் பிரதமரை 'மனநிலை சரியில்லாதவர்' என்றும் 'அரசியலில் இன்னும் வளராதவர்' என்றும் வடகொரிய அரசு விமர்சித்துள்ளது.

வியாழன்று வடகொரிய எல்லையில் இருந்து ஜப்பான் கடலை நோக்கி இரு 'அடையாளம் காணப்படாத ஏவுகணைகள்' ஏவப்பட்டதாக தென்கொரிய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, "கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வடகொரியா தொடர்ந்து சோதனை செய்வது ஜப்பானுக்கு மட்டுமல்லாது சர்வதேச சமூகத்துக்கே அச்சுறுத்தலானது," என்று கூறியிருந்தார்.

'ராக்கெட் லாஞ்சர்' சோதனை என்று தெரிவித்து வடகொரியா அரசு ஊடகம் வெளியிட்ட படம்.

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, 'ராக்கெட் லாஞ்சர்' சோதனை என்று தெரிவித்து வடகொரியா அரசு ஊடகம் வெளியிட்ட படம்.

ஷின்சோ அபேவின் இந்த கருத்துக்கே வடகொரியா அவரை கடுமையாக விமர்சித்துள்ளது. தாங்கள் சோதனை செய்தது 'பெரிய ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்துவதற்கான ஏவுகணைகள்' மட்டுமே என்று வடகொரியா தெரிவித்துள்ளது.

'உண்மையான ஆயுதம் தாங்கிய ஏவுகணையை' ஜப்பான் வெகு விரைவில் எதிர்கொள்ளலாம் என்று வடகொரிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

வடகொரியா மீதான தடை

வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகள் செய்து வந்ததால் பொருளாதார மற்றும் பயணத் தடைகள் பலவற்றை எதிர்கொண்டுள்ளது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்யத் தடை விதித்து ஐக்கிய நாடுகள் அவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

North Korea

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, கிம் ஜாங்-உன் 'ராக்கெட் லாஞ்சர்' சோதனையை பார்வையிட்டதாக வடகொரியா அரசு ஊடகம் தெரிவிக்கிறது.

தங்கள் மீதான தடைகளை விலக்குவதே வடகொரிய அரசின் முக்கிய இலக்காக உள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஆகியோர் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வியட்நாம் தலைநகர் ஹனோயில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய உச்சி மாநாட்டிலும் பெரிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படாமல் தோல்வியில் முடிந்தது.

தென்கொரியா மற்றும் வடகொரியா எல்லையில் உள்ள 'ராணுவம் விலக்கப்பட்ட பகுதியில்' டிரம்ப் மற்றும் கிம் ஆகியோர் சென்ற ஜூன் மாதம் சந்தித்து மீண்டும் பேச்சுவார்த்தைகளை தொடங்க ஒப்புக்கொண்டனர்.

அந்த முயற்சிகள் அக்டோபர் மாதம் தொடங்கின. எனினும் பின்னர் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: