ஹிட்லர் பிறந்த வீட்டை காவல் நிலையமாக மாற்றும் ஆஸ்திரியா மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
ஹாலோகாஸ்ட் என்ற நடவடிக்கை மூலம் பல லட்சம் யூதர்களை கொன்ற, இரண்டாம் உலகப் போரின் மையப் பேசுபொருளாக விளங்கிய நாஜித் தலைவர் அடால்ஃப் ஹிட்லர் பிறந்த கட்டடத்தை காவல் நிலையமாக மாற்றுதாக ஆஸ்திரிய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த முடிவு, இந்த கட்டடம் நாஜிசத்தை நினைவுகூறும் வகையில் அமையாது என்ற சமிக்ஞையை வெளிப்படுத்துவதாக ஆஸ்திரிய உள்துறை அமைச்சர் வொல்ப்காங் பெஸ்கார்ன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரியாவின் 'ப்ரனவ் ஆம் இன்' எனும் நகரிலுள்ள, 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கட்டடத்தில்தான் ஹிட்லர் தனது வாழ்வின் முதல் சில வாரங்களை வாழ்ந்தார்.
இந்த கட்டடத்தின் உரிமையாளருக்கும் அரசுக்கும் நடந்த மிக நீண்ட சட்டப்போராட்டத்தின் முடிவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
ஹிட்லரின் இந்த வீட்டுக்கு சுற்றுலாப்பயணிகள் வருவதை தடுக்கும் வகையில், இந்த கட்டடத்துக்கு வாடகை கொடுத்து பாதுகாத்து வந்த அரசாங்கம், இதே இடத்தில் அகதிகளுக்கான மறுவாழ்வு மையம் அமைப்பதற்கும், மொத்தமாக விலை கொடுத்து வாங்குவதற்கும், செப்பனிடுவதற்கும் மேற்கொண்ட முயற்சிகளை அந்த கட்டடத்தின் உரிமையாளர் தவிர்த்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு கட்டாய விற்பனை உத்தரவின் மூலம் இந்த இல்லத்தை 8,10,000 யூரோக்களுக்கு அரசு கையகப்படுத்தியது.
அதன் பிறகு, இந்த கட்டடத்தை இடித்து விட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறுபட்ட கருத்துகளை முன்வைத்து வந்த நிலையில், தற்போது இதை காவல்நிலையமாக மாற்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா- இலங்கை உறவு இனி எப்படி இருக்கும்?

பட மூலாதாரம், Getty Images
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தேர்வுசெய்யப்பட்டிருக்கும் நிலையில், இலங்கையில் சிறுபான்மையினரின் எதிர்காலம், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல், இந்தியா - இலங்கை உறவு ஆகியவை குறித்து மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணிடம் பிபிசி தமிழ் பேசியது.
கேள்வி: நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றிருக்கிறார். இந்தத் தேர்தல் முடிவுகள் சொல்வதென்ன?
பதில்: கடந்த ஏப்ரலில் அங்கு குண்டுவெடிப்புகள் நடந்தபோதே, அங்கு யார் ஜெயிக்கப்போகிறார்கள் என்பது தீர்மானமாகிவிட்டது. மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரை, கடந்த 2009ல் புலிகளை வெற்றிகொண்டதிலிருந்து, தேசப் பாதுகாப்பு என்ற விஷயம் என்பதில் அவரைத் தவிர வேறு யாராலும் உரிமை கொண்டாட முடியாத விஷயமாகவே இருந்தது.
விரிவாக படிக்க:இந்தியா- இலங்கை உறவு இனி எப்படி இருக்கும்?

நாமல் ராஜபக்ஷவுக்கு திருமாவளவன், பழ. நெடுமாறன் பதில்

பட மூலாதாரம், THOL.THIRUMAVALAN/FACEBOO
"தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கு புத்திமதி சொல்வதைவிட எஞ்சியிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு அமைதியான பாதுகாப்பான மறுவாழ்வை அளிப்பதற்கு ராஜபக்சே குடும்பம் முன்வர வேண்டும்" என நாமல் ராஜபக்ஷேவின் குற்றச்சாட்டிற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பதிலளித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ செவ்வாய்கிழமை வெளியிட்டிருந்த ஓர் அறிக்கையில், தமிழகத்திலுள்ள தமிழ் அரசியல்வாதிகள் தங்களுடைய சுயநல மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் தேவைகளுக்காக இலங்கை மக்களை பகடைக்காயாக பயன்படுத்தி வருவதாக கூறியிருந்தார்.
விரிவாக படிக்க: நாமல் ராஜபக்ஷவுக்கு திருமாவளவன், பழ. நெடுமாறன் பதிலடி

கிரண்பேடியை 'ஹிட்லரின் தங்கை' என விமர்சித்த நாராயணசாமி - நடந்தது என்ன?

பட மூலாதாரம், CM_PUDUCHERRY
புதுச்சேரி துணைநிலை நிலை ஆளுநர் மற்றும் முதல்வர் நாராயணசாமி இருவருக்கும் இடையே மோதல்போக்கு கடந்த மூன்றரை ஆண்டுகாலமாக தொடர்ந்து வரும் நிலையில். கிரண்பேடியை சர்வாதிகாரி ஹிட்லரின் தங்கை என கூறி கடுமையாக விமர்ச்சித்துள்ளார் நாராயணசாமி.
புதுச்சேரியில் காங்கிரஸ் திமுக கூட்டணி 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் மத்திய அரசானது கிரண்பேடியை புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக நியமித்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் தேர்தலில் போட்டியிடாமல் எம்எல்ஏக்கள் ஆதரவுடன் முதல்வரானார் நாராயணசாமி. அதைத்தொடர்ந்து நெல்லித்தோப்பு எம்எல்ஏ ராஜிநாமா செய்த பின்பு போட்டியிட்டு வென்றார்.

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் ஏற்பட்ட சவால் - காரணம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அக்டோபர் 24 ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. ஒரு மாதம் கடந்துவிட்ட போதிலும், எந்தக் கட்சியும் அல்லது கூட்டணியும் ஆட்சி அமைக்க முடியாத நிலை இருப்பதால் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் செய்யப்பட்டுள்ளது. புதிய அரசு அமைவதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பாரா அல்லது சட்டப்பேரவையைக் கலைத்துவிட்டு புதிதாகத் தேர்தல் நடத்த உத்தரவிடுவாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
எதிர்பாராத திடீர் திருப்பங்களைத் தொடர்ந்து சுனாமியைப் போல தீவிர பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. சில உரிமைகள், வாசகங்கள், கோட்பாடுகள் தெளிவில்லாத அளவில் மற்றும் பரந்த அளவில் முன்வைக்கப்படுகின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












