இரானில் பெட்ரோல் விலை உயர்வால் போராட்டம்: ’குண்டர்களே காரணம்’ - குற்றம் சுமத்தும் கமேனி மற்றும் பிற செய்திகள்

இரான் போராட்டம்

பட மூலாதாரம், EPA

இரானில் பெரும் போரட்டத்துக்கு வித்திட்டுள்ள எரிபொருள் விலை உயர்வுக்கு ஆதரவு தெரிவித்து பேசியுள்ளார் அந்நாட்டின் மூத்த தலைவர் அயதுல்லா கமேனி.

பல நகரங்களில் நடைபெற்று வரும் போராட்டங்களும், வன்முறைகளும் "குண்டர்கள்" மற்றும் எதிர் புரட்சியாளர்களால் நடைபெறுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

போலீஸாருடன் ஏற்பட்ட மோதலில் குறைந்தது ஒருவர் பலியாகியுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

சட்ட விரோத நடவடிக்கை தொடர்ந்தால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இரான் அரசு பெட்ரோல் வாங்குவதற்கு ரேஷன் முறையைக் கொண்டு வந்ததை அடுத்தும், பெட்ரோலுக்கு வழங்கப்பட்ட மானியத்தை நீக்கி, 50% வரை விலை உயர்த்தப்பட்டதை அடுத்தும் அந்நாட்டில் வெள்ளிக்கிழமையன்று போராட்டம் வெடித்தது.

இந்த நடவடிக்கைகள் அமெரிக்காவால் விதிக்கப்பட்ட தடைக்கு பிறகு இரான் பொருளாதாரத்தில் ஏற்பட்ட அழுத்தத்தின் சமீபத்திய அறிகுறியாகும்.

பெட்ரோல் விலை

இரானில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளின்படி இனி, ஒரு மாதத்துக்கு 60 லிட்டர் பெட்ரோல் மட்டுமே 15 ஆயிரம் ரியால் என்ற விலையில் கிடைக்கும். அதற்கு மேல் வாங்கப்படும் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலுக்குமான விலை 30 ஆயிரம் ரியால்கள் (இந்தியப் பணத்தில் சுமார் 51 ரூபாய்).

மானியம் நீக்கி விற்கப்படும் பெட்ரோலில் இருந்து வரும் வருமானம் ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என அரசு தெரிவிக்கிறது.

75 சதவீத இரானியர்கள் அழுத்தத்தில் உள்ளதாகத் தெரிவித்துள்ள இரான் அதிபர் ரூஹானி, இந்த கூடுதல் வருமானமானது அவர்கள் நலனுக்காகச் செலவு செய்யப்படுமெனத் தெரிவித்துள்ளார்.

Presentational grey line

இலங்கை புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ - யார் இவர்?

கோட்டாபய ராஜபக்‌ஷ
படக்குறிப்பு, கோட்டாபய ராஜபக்‌ஷ

இலங்கையின் 7வது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தேர்தெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்துள்ளார்.

வரலாற்றில் முதற்தடவையாகவே புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கட்சியொன்றிலிருந்து ஒருவர் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளமை விசேட அம்சமாகும்.

இலங்கையின் யுத்த காலத்தில் அதிகமாக முணுமுணுக்கப்பட்ட பெயர் கோட்டாபய ராஜபக்ஷ. இலங்கையை கடந்து சர்வதேச அளவில் அந்தப் பெயர் உச்சரிக்கப்பட்டது. இலங்கை போரை அரசு சார்பில் முன்னெடுத்தவர் கோட்டாபய.

இப்போது இலங்கை அதிபராக பொறுப்பேற்க இருக்கும் கோட்டாபய ராஜபக்ஷ யார்? அவரது கடந்த காலம் என்னவாக இருந்திருக்கிறது? இலங்கையில் யுத்த காலத்தில் அவர் பங்கு என்ன?

Presentational grey line

"கோட்டாபய வெற்றியால் இந்திய - இலங்கை உறவு மாறிவிடாது": என். ராம்

இந்தியா இலங்கை கொடி

பட மூலாதாரம், OLEKSII LISKONIH / GETTY IMAGES

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றிருக்கும் நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்தும் இந்தத் தேர்தல் முடிவுகள் சிறுபான்மை இனத்தினருக்கு சொல்வது என்ன, இந்திய - இலங்கை உறவில் மாற்றம் ஏற்படுமா என்பதெல்லாம் குறித்து பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனிடம் பேசினார் தி இந்து குழுமத்தின் தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான என். ராம். பேட்டியிலிருந்து:

கே. இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரும் முந்தைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றிருக்கிறார். இந்த தேர்தல் முடிவு சொல்வதென்ன?

ப. ஒரு கணிசமான வாக்குகளைப் பெற்றுத்தான் அவர் வெற்றிபெற்றிருக்கிறார். அங்கே வெற்றிபெற ஐம்பது சதவீத வாக்குகளைத் தாண்டினால் போதும். கோட்டாபய அதைவிட அதிகமான வாக்குகளையே பெற்றிருக்கிறார். இதை நாம் ஏற்க வேண்டும். வடக்கிலும் கிழக்கிலும் உள்ள சிறுபான்மையினர் சஜீத்திற்கு வாக்களித்திருந்தபோதிலும் ஒட்டுமொத்தமாக இலங்கை வாக்காளர்கள் கோட்டாபயவிற்கு வாக்களித்துள்ளனர். இந்த வெற்றியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பெரும் பங்கு இருக்கிறது. ஒரு புதிய யுகத்தை இவர் துவங்கி வைப்பாரா என்பதைப் பார்க்க வேண்டும். தவிர, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கும் நாடாளுமன்றத்திற்கும் இடையில் ஒரு மோதல் இருக்கிறது. அந்த மோதலை இவர் எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்பதையும் கவனிக்க வேண்டும்.

Presentational grey line

நீதிபதி ரஞ்சன் கோகோய் வாழ்க்கை பயணம்

ரஞ்சன் கோகோய்

பட மூலாதாரம், Getty Images

2018, ஜனவரி 12 தேதியன்று ஒரு கடிதமும் பத்திரிகையாளர் சந்திப்பும் அன்றைய தினத்தில் அரசியலில் மட்டுமல்ல, நீதித்துறையிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய வரலாற்றில் முதல்முறையாக, உச்சநீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகள் இணைந்து பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினார்.

'மிகுந்த அதிருப்தியுடன் ஆனால் அக்கறையுடன்' என்று அந்த கடிதத்தில் கையெழுத்திட்ட உச்சநீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகளில், நீதிபதி ரஞ்சன் கோகோயும் ஒருவர்.

உச்சநீதிமன்றம் தேவையற்ற சில காரணங்களுக்காகச் செய்திகளில் அடிபட்டுக் கொண்டிருந்த காலகட்டம் அது. மேலும் நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு அடுத்து மூப்பு அடிப்படையில் அடுத்த தலைமை நீதிபதி நியமிக்கப்படும் பாரம்பரியத்தைப் புறக்கணித்து கோகோய்க்கு பதிலாக மத்திய அரசு மற்றொரு பெயரை முன்மொழியலாம் என்ற வாய்ப்பும் இருந்த சமயம் அது.

ஆனால் 2018 செப்டம்பர் 13ஆம் தேதியன்று குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து வெளியிடப்பட்ட கடிதம், அத்தகைய ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

Presentational grey line

சிதம்பரம் கோயிலில் பக்தரைத் தாக்கிய தீட்சிதர்: நடந்தது என்ன?

சிதம்பரம் கோயில்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிதம்பரம் கோயில்

தம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர் ஒருவர் அர்ச்சனை செய்ய வந்த பெண்ணைத் தாக்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. காவல்துறை வழக்குப் பதிவுசெய்து, சம்பந்தப்பட்ட தீட்சிதரைத் தேடிவருவதாகக் கூறுகிறது.

சிதம்பரம் நகரின் வ.உ.சி தெருவைச் சேர்ந்தவர் லதா (51). இவர் சனிக்கிழமையன்று தன்னுடைய மகன் ராஜேஷின் பிறந்த நாளை ஒட்டி, சிதம்பரம் நடராஜர் கோயிலில் அர்ச்சனை செய்யச் சென்றார். அந்தக் கோயில் வளாகத்தில் உள்ள முக்குறுணி விநாயகர் சந்நிதிக்குச் சென்ற அவர், அங்கிருந்த தீட்சிதர் தர்ஷன் என்பவரிடம் அர்ச்சனைக்கான பொருட்களைக் கொடுத்திருக்கிறார்.

லதா, தன் மகனுடைய பெயர், நட்சத்திரம் ஆகிய விவரங்களைத் தெரிவிப்பதற்குள் அர்ச்சனையை முடித்துவிட்டதாக, பொருட்களைத் திரும்பத் தந்திருக்கிறார் தர்ஷன்.

"இதனால், எந்த விவரத்தையும் கேட்காமல், மந்திரங்களை ஒழுங்காகச் சொல்லாமல் இப்படி அர்ச்சனை செய்து தருகிறீர்களே என்று கேட்டேன். அதற்கு 'வேணும்னா நீயே மந்திரம் சொல்லிக்க' என்றார். நானே மந்திரம் சொல்லனும்னா எதுக்கு நீங்க என்று கேட்டேன். அதற்கு தகாத வார்த்தைகளால் திட்டி கன்னத்தில் அறைந்து, பிடித்துத் தள்ளிவிட்டார்" என பிபிசியிடம் நடந்த சம்பவத்தை விவரித்தார் லதா.

தீட்சிதர் தரப்பின் செயலரான பால கணேஷ் தொலைபேசி அழைப்புகளை ஏற்கவில்லை. கோயிலைச் சேர்ந்த வெங்கடேஷ் தீட்சிதரிடம் பேசியபோது, "இதைப் பத்தி சொல்றதுக்கு எதுவுமில்லை. போலீஸ்தான் இரண்டு தரப்பையும் சமாதானம் செஞ்சிருச்சே" என்றார்.

Presentational grey line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :