ரஞ்சன் கோகோய்: அயோத்தி, சபரிமலை தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதியின் வாழ்க்கை பயணம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், விபுராஜ்
- பதவி, பிபிசி இந்தி
2018, ஜனவரி 12 தேதியன்று ஒரு கடிதமும் பத்திரிகையாளர் சந்திப்பும் அன்றைய தினத்தில் அரசியலில் மட்டுமல்ல, நீதித்துறையிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய வரலாற்றில் முதல்முறையாக, உச்சநீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகள் இணைந்து பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினார்.
'மிகுந்த அதிருப்தியுடன் ஆனால் அக்கறையுடன்' என்று அந்த கடிதத்தில் கையெழுத்திட்ட உச்சநீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகளில், நீதிபதி ரஞ்சன் கோகோயும் ஒருவர்.
உச்சநீதிமன்றம் தேவையற்ற சில காரணங்களுக்காகச் செய்திகளில் அடிபட்டுக் கொண்டிருந்த காலகட்டம் அது. மேலும் நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு அடுத்து மூப்பு அடிப்படையில் அடுத்த தலைமை நீதிபதி நியமிக்கப்படும் பாரம்பரியத்தைப் புறக்கணித்து கோகோய்க்கு பதிலாக மத்திய அரசு மற்றொரு பெயரை முன்மொழியலாம் என்ற வாய்ப்பும் இருந்த சமயம் அது.
ஆனால் 2018 செப்டம்பர் 13ஆம் தேதியன்று குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து வெளியிடப்பட்ட கடிதம், அத்தகைய ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
பதவி ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ராவின் பிரிவுபச்சார விழாவில் உரையாற்றிய ரஞ்சன் கோகோய், "நீதிபதி தீபக் மிஷ்ரா எப்போதும் சிவில் உரிமைகளுக்கான உரிமைகளை ஆதரிப்பவர். அவர் பெண்களின் உரிமைகளை ஆதரித்தார். அவருடைய வார்த்தைகள் மக்களை உற்சாகப்படுத்தின" என்று கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்

பட மூலாதாரம், Getty Images
ரோஸ்டர் சர்ச்சை
தலைமை நீதிபதியாகப் பதவியேற்பதற்கு முன்பு, 2018 ஜனவரி 12 ஆம் தேதியன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்புக்குப் பிறகு, ரஞ்சன் கோகோய் வெளிச்சத்திற்கு வந்தார். உச்ச நீதிமன்றத்தில், வழக்கு பட்டியல் ஒதுக்கீடு செய்வது அதாவது, ஒரு வழக்கை விசாரணைக்கு எப்போது எடுத்துக் கொள்வது, அதை விசாரிக்கும் சட்ட அமர்வை உருவாக்கிப் பட்டியலிடுவதே ரோஸ்டர் என்று அழைக்கப்படுகிறது.
இந்த பட்டியலை உருவாக்கும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கு உண்டு, அது 'மாஸ்டர் ஆஃப் ரோஸ்டர்' என்று அழைக்கப்படுகிறது. தலைமை நீதிபதியின் உத்தரவின்படி, உச்சநீதிமன்றத்தின் பதிவாளர் இந்தப் பட்டியலை உருவாக்குகிறார். நவம்பர் 2017இல், அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியலமைப்பு அமர்வானது, தலைமை நீதிபதியே 'மாஸ்டர் ஆஃப் ரோஸ்டர்' என்று கூறிவிட்டது.
உச்ச நீதிமன்ற நீதிபதிதான், எந்தவொரு நீதிபதிக்கும் வழக்கை ஒதுக்கீடு செய்யக்கூடியவர். இந்த ஒதுக்கீடு செய்யப்படும் வரை எந்தவொரு வழக்கிலும் விசாரணை தொடங்காது என்பதும் அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.
ஆனால் நீதிபதி கோகோய் உட்பட உச்சநீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகள் ஊடகங்களின் முன் வந்து பேசியபோது, இந்த பட்டியல் பிரச்சினை விவாதப்பொருளானது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இருக்கின்ற அதிகாரம் பற்றி 4 உயர் நிலை நீதிபதிகளும் வெளிப்படையாக பேசியபோது, உச்ச நீதிமன்றத்தின் வழக்குகள் ஒதுக்கீடு பிரச்சனையும் வெளிச்சத்திற்கு வந்தது.
வழக்குகள் ஒதுக்கீடு செய்வதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எல்லா உரிமையும் உள்ளது என்று தெரிவித்த அவர்கள், "முதல் வரிசையில் சம நிலையில் இருக்கும் நீதிபதிகளில் தலைமை நீதிபதி முதன்மையானவர்தான். ஆனால், அவர் அதற்கு மேலானவரோ, குறைவானவரோ இல்லை" என்று தெரிவித்தனர்.
பிபிசியிடம் பேசிய உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி பி.பி.சாவந்த், "வழக்குகளை ஒதுக்கீடு செய்ய தலைமை நீதிபதிக்கு எல்லாவித உரிமையும் உண்டு. எந்தவொரு வழக்கிற்கும் இந்த முடிவு முக்கியமானது. அவர் அதைத் தவறாகப் பயன்படுத்த விரும்பினால், யாரும் அதை கேள்வி கேட்க முடியாது, ஏனென்றால் இது தொடர்பான எழுத்துப்பூர்வ விதி எதுவும் இல்லை" என்றார்.
பின்னர் நீதிபதி சாவந்த் தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், "ஒவ்வொரு வழக்கும் வழக்கமான வழக்காக இருக்காது. ஆனால் நாட்டின் தலைமை நீதிபதி உட்பட மூத்த 5 நீதிபதிகள் விசாரிக்க வேண்டிய பல முக்கியமான வழக்குகள் உள்ளன" என்று குறிப்பிட்டிருந்தார்.
நீதிபதி கோகோய் தலைமை நீதிபதி ஆன பிறகு பட்டியலில் ஏதாவது மாற்றம் செய்யப்பட்டுள்ளதா?
நீண்ட காலமாக உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கைகளை எழுதி வரும் சுசித்ரா மொஹந்தியிடம் இதுபற்றி பேசினோம். "நீதிபதி கோகோய் அந்த பிரச்சினையை முற்றிலுமாக மறக்கடிக்கச் செய்துவிட்டார். பட்டியலிடும் பிரச்சினை ஒரு வகையில் நிறுத்தப்பட்டுள்ளது. ரோஸ்டர் முறையானது, நீதிபதி தீபக் மிஸ்ரா செயல்பட்டது போலவே, தற்போதும் தொடர்கிறது. நீதிபதி கோகோயின் காலத்திலும், வழக்குகள் பட்டியலிடும் வழக்கம் முன்புபோலவே தொடர்ந்தது" என்று கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள்
நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமை நீதிபதியின் பொறுப்பை ஏற்ற ஏழு மாதங்களுக்குள், அதாவது கடந்த ஏப்ரல் மாதம், நீதிமன்றத்தின் முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் அவர் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை முன்வைத்தார். நீதித்துறையின் சுதந்திரத்திற்குக் கடுமையான அச்சுறுத்தல் இது என்று கூறிய நீதிபதி கோகோய், நீதித்துறையைச் சீர்குலைப்பதற்கான ஒரு 'பெரிய சதி' இது என்றும் கூறினார்.
ஆனால் விஷயம் அவ்வளவு எளிதல்ல.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிராக பாலியல் புகார் கூறிய உச்சநீதிமன்ற முன்னாள் பணியாளர், அது தொடர்பாக நடந்து வரும் வழக்கு விசாரணையில் இனி பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்தார். இந்த வழக்கை விசாரித்துவரும் உச்சநீதிமன்ற நீதிபதி பாப்டே தலைமையிலான உள் விசாரணைக் குழு (இன் ஹவுஸ் கமிட்டி) முன் ஆஜராக விரும்பவில்லை என்பதிலிருந்து இந்த வழக்கின் தீவிரத்தை அறிய முடியும்.
'இன் ஹவுஸ் கமிட்டி' முன் தனது வழக்கறிஞரை வைக்க தனக்கு அனுமதி கிடைக்கவில்லை என்று புகார் அளித்த பெண், ஒரு வழக்கறிஞரும் உதவியாளரும் இல்லாமல் உச்சநீதிமன்றத்தின் மாண்புமிகு நீதிபதிகள் முன் தனக்குப் பதற்றம் ஏற்படும் என்றும், இந்த குழுவிலிருந்து தனக்கு நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். மன உளைச்சல் ஏற்பட்டிருப்பதால், இனிமேல் இந்த வழக்கு விசாரணையில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டேன் என்றும் அந்த பெண் தெரிவித்தார்.
நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு அடுத்த மூத்த நீதிபதியும், அடுத்து தலைமை நீதிபதியாக பதவியேற்பவர் நீதிபதி பாப்டே என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு வரலாற்று ரீதியான முக்கியத்துவம் பெற்றது, ஏனென்றால் நாட்டில் முதன்முறையாக, தன் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் அமர்வுக்கு, குற்றம் சாட்டப்பட்டவரே தலைமை வகித்தார். மேலும், இதுபோன்ற பாலியல் துன்புறுத்தல் புகார்களை விசாரிப்பதற்காக முன்வைக்கப்பட்ட நடைமுறையை மீறுவதாக இருப்பதாகவும் வழக்கறிஞர்களின் ஒரு பிரிவு விமர்சனங்களை முன்வைத்தது.

பட மூலாதாரம், Getty Images
ஏப்ரல் 2019க்குப் பிறகு?
பாலியல் துன்புறுத்தல் தொடர்பான இந்த வழக்கு வெளிச்சத்துக்கு வந்த பின்னர் அரசாங்கத்திற்கும் நீதித்துறைக்கும் இடையிலான உறவு மாறிவிட்டது என்று சிலர் நம்புகிறார்கள். நீதிபதி கோகோய் தனக்கு ஏற்பட்ட அவப்பெயரை அகற்றுவதற்காக அரசு வழக்கறிஞர்களின் உதவியை நாடியதாக நம்பப்படுகிறது.
பல ஆண்டுகளாக உச்சநீதிமன்ற செய்திகளை வழங்கிவரும் மூத்த பத்திரிகையாளர் மனோஜ் மிட்டா இதைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார். "நீதிபதி லோயா வழக்கு கையாளப்பட்ட விதம் குறித்து கவலை தெரிவிக்க அழைக்கப்பட்ட நான்கு நீதிபதிகள் கொண்ட பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நீதிபதி ரஞ்சன் கோகோய், நியாயமாக நடந்துக் கொள்வார் என்று அனைவரும் நம்பினார்கள், அவர் சுயாதீனமாக பணியாற்றுவார் என்றும் நம்பப்பட்டது. ஆனால் பாலியல் துன்புறுத்தல் சர்ச்சையில் சிக்கிய பின்னர், இந்திய தலைமை நீதிபதியின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய தவறிவிட்டார் கோகோய்."
ஆனால், 'தி ட்ரிப்யூன்' செய்தித்தாளின் சட்ட விவகாரங்களுக்கான ஆசிரியர் சத்ய பிரகாஷின் கருத்து, இதிலிருந்து வேறுபட்டிருக்கிறது. இதுபோன்ற குற்றச்சாட்டுகள் ஆதாரங்களே இல்லாமல் கூட எழுப்பப்படுகின்றன என்கிறார் அவர். "இந்த வழக்கில், உச்ச நீதிமன்றத்திற்கு வேறு வழியில்லை. இதை அவர் விசாரிக்கவில்லை என்றால், வேறு யார் அதைச் செய்ய முடியும்? வேறு யாராவது இதைச் செய்திருந்தாலும், தலைமை நீதிபதியின் அழுத்தம் இருந்தது என்று கூறப்பட்டிருக்கும். உச்சநீதிமன்றத்தின் பிற நீதிபதிகள் இந்த வழக்கை விசாரித்தாலும், சக நீதிபதி அல்லது, தலைமை நீதிபதியின் கீழ் பணிபுரியும் நீதிபதிகள் அல்லது உயர் நீதிமன்ற நீதிபதி என யாராக இருந்தாலும், அவரது ஜூனியர் நீதிபதி என்றே கூறுவார்கள்".
அயோத்தி குறித்த தீர்ப்பு
தனது பதவிக் காலத்தின் கடைசி நாட்களில், கடந்த பல தசாப்தங்களாக நடந்து வரும் அயோத்தியில் உள்ள கோயில்-மசூதி சர்ச்சை குறித்து 2019 நவம்பர் 9 அன்று இறுதி தீர்ப்பை வழங்கினார் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்.
450 ஆண்டு கால பழமையான பாபர் மசூதியில் 70 ஆண்டுகளுக்கு முன்னரே முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதை நிறுத்திவிட்டதாகவும், 27 ஆண்டுகளுக்கு முன்பு பாபர் மசூதி சட்டவிரோதமாக இடிக்கப்பட்டது என்றும் நீதிபதி கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு கூறியிருந்தாலும், அந்த இடத்தில் இந்துக்களுக்கு ஆதரவாக கோயில் கட்டவும் முடிவு செய்யப்பட்டது.
சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் பிறந்தாரா? அயோத்தி குறித்த வரலாற்று முடிவில், உச்சநீதிமன்றமும் இந்த கேள்விக்கு பதிலளிக்க முயன்றது.
"அந்த இடத்தில் மசூதி இருந்தபோதிலும், ராமரின் பிறப்பிடமாகக் கருதப்படும் அந்த இடத்தில் இந்துக்களின் வழிபாடு தடுக்கப்படவில்லை என்பதை சான்றுகள் நிரூபிக்கின்றன. சர்ச்சைக்குரிய அதே இடத்தில் தான் ராமர் பிறந்தார் என்ற நம்பிக்கையை அசைக்க முடியவில்லை" என்று கோகோய் தலைமையிலான அமர்வு வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டது.
இந்த முடிவைப் பற்றி கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அசோக் குமார் கங்குலி பிபிசியிடம் கூறுகையில், "சர்ச்சைக்குரிய நிலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் தொல்பொருள் சான்றுகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் தொல்பொருள் சான்றுகளால் நிலத்தின் உரிமையைத் தீர்மானிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது." ஒருவேளை. இதுபோன்ற சூழ்நிலையில், எந்த அடிப்படையில் நிலம் வழங்கப்பட்டது என்ற கேள்வியும் எழுகிறது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கங்குலி முத்தாய்ப்பாக இவ்வாறு கூறுகிறார்: "கடந்த 500 ஆண்டுகளாக இந்த மசூதி இங்கு இருந்தது, இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தபோதே இங்கு ஒரு மசூதி இருந்தது. அரசியலமைப்பு சாசனம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து அனைத்து இந்தியர்களுக்கும் மத சுதந்திரத்திற்கான உரிமையும் கிடைத்துள்ளது. சிறுபான்மையினருக்கும் அவர்களின் மத சுதந்திரம் கிடைத்துள்ளது. தங்களது மதத்தைப் பின்பற்றுவது சிறுபான்மையினரின் உரிமை. அந்த கட்டமைப்பைப் பாதுகாக்க அவர்களுக்கு உரிமை உண்டு. பாபர் மசூதி ஏன் இடிக்கப்பட்டது? "
கோகோயின் மரபு

பட மூலாதாரம், Getty Images
இந்தியத் தலைமை நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், நீதிபதி ரஞ்சன் கோகோய் அயோத்தியில் எடுத்த முடிவுக்காக என்றென்றும் நினைவுகூரப்படுவார் என்பதும் நிதர்சனமான உண்மை.
"வேறு விஷயங்கள் அனைத்தையும் மக்கள் மறந்துவிடுவார்கள். அயோத்தியில் எடுத்த முடிவுக்காகத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் என்றென்றும் நினைவுகூரப்படுவார். பல ஆண்டுகளாக தேங்கிக்கிடந்த பிரச்சனையில் முடிவு வந்தது, அது ஏற்றுக்கொள்ளப்பட்டது " என்று சத்ய பிரகாஷ் கூறுகிறார்,
குவாஹாட்டி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ரஞ்சன் கோகோயுடன் வழக்கறிஞாராக பணியாற்றிய மூத்த வழக்கறிஞர் கே.என். செளத்ரியின் கருத்தின்படி, "ஒரு நீதிபதியை நாம் ஒரு சாதாரண நபராக அல்ல, அவரது எழுத்துப்பூர்வ முடிவுகளால் தான் அவரை அடையாளம் காண்கிறோம். ராம ஜன்மபூமி வழக்கில் தீர்ப்பு வழங்கியவர் என்றே நீதிபதி கோகோய் நினைவில் கொள்ளப்படுவார் என்றார்.
2018, ஜனவரி 12ஆம் தேதியன்று நீதிபதி செல்லமேஸ்வர் வீட்டில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புக்காக பலரும் அவரை நினைவில் வைத்திருப்பார்கள். நாட்டின் மிக மூத்த நான்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் இணைந்து ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை அழைப்பதும், தங்களுடைய மூத்த நீதிபதியின் செயல்பாட்டை அதாவது தலைமை நீதிபதியின் செயல்பாட்டில் அதிருப்தியைப் பதிவு செய்வதும் பொதுவான நிகழ்வு அல்ல.
உச்ச நீதிமன்ற சீர்திருத்தங்கள்
நீதிபதி கோகோய் தலைமை நீதிபதியான பிறகு உச்சநீதிமன்றத்தின் செயல்பாட்டில் எதுவும் மாறவில்லையா என்ற கேள்விக்கு, மாற்றங்கள் ஏற்பட்டன என்றே பதில் கூறலாம்.
சத்யா பிரகாஷ் கூறுகிறார், "நீதிபதி கோகோய் செய்த சீர்திருத்தங்களில் ஒன்று உச்சநீதிமன்றத்தின் பதிவேடு. வழக்குத் தாக்கல் செய்வதற்கான செயல்முறை பதிவேட்டில் முடிவடையும். அதில் பல மாற்றங்களை நீதிபதி கோகோய் செய்த பிறகு, வழக்கு பட்டியலிடும் செயல்முறை எளிமைப்படுத்தப்பட்டது. அதில் சிலரின் வேலைவாய்ப்பும் பறிபோனது. சில சந்தர்ப்பங்களில், வழக்கு விசாரணைக்கான தகவல் உரிய நேரத்தில் கிடைக்காது, உடனடி விசாரணைக்கான தகவல் தாமதமாக கிடைக்கும் அல்லது வழக்கு விசாரணை தள்ளிப்போனது தெரியாமல் அனைவரும் வந்துவிடுவார்கள். இதுபோன்ற சிக்கல்களை நீக்கி செயல்முறை எளிதாக்கப்பட்டது. "
சுசித்ரா மொஹந்தி மற்றொரு விஷயத்தை சுட்டிக்காட்டுகிறார். "பொது நலன் மனுக்கள் மற்றும் அரசியலமைப்பு வழக்குகள் உட்பட பல வழக்குகளைக் குறைந்த நேரத்தில் தீர்த்து வைத்தார் நீதிபதி கோகோய். இருப்பினும், தங்கள் புகார்கள் சரியாகக் கேட்கப்படுவதில்லை என்றும் நீதிமன்றத்திற்கு வந்த மக்களில் பலர் புகார்கள் சொன்னதையும் மறுக்க முடியாது."

பட மூலாதாரம், Getty Images
அரசுக்கும் நீதித்துறைக்குமான உறவு
நீதிபதி தீபக் மிஷ்ராவின் காலத்தில், அரசாங்கத்திற்கும் நீதித்துறைக்கும் இடையிலான உறவு குறித்து அதிகம் பேசப்பட்டது. எதிர்க்கட்சியின் ஒரு பகுதியினர் அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா மீது கண்டன தீர்மானத்தை கொண்டுவரத் தயாரான விவகாரத்தை யாரும் சுலபமாக மறந்துவிடமுடியாது. இந்த கண்டன தீர்மானத்திற்கு அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
கண்டன தீர்மான இயக்கம்
கண்டன தீர்மானம் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன, அதற்கு அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்தது.
தேசிய நீதித்துறை நியமனம் ஆணைய சட்டத்தின் மூலம் நீதித்துறையின் அதிகார வரம்பைக் குறைக்கும் முயற்சியை மேற்கொண்ட மத்திய அரசுக்கு தோல்வியே ஏற்பட்டது.
"அரசாங்கத்துடனான நீதித்துறை உறவானது, முன்பு இருந்ததில் இருந்து பெரிய அளவு மாற்றத்தைப் பெறவில்லை. நீதிபதி கோகோயின் பதவிக்காலத்தில் கூட பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை. மிக மேலோட்டமான ஒரு சிறிய விஷயங்களில் மட்டுமே மாற்றங்கள் காணப்பட்டன, அதைத்தவிர எந்தவொரு பெரிய மாற்றங்களும் ஏற்படவில்லை. எந்தவொரு பிரச்சனையிலும் நிர்வாகத்தையும், அரசையும் ஒதுக்கி வைத்துவிட்டு, முடிவுகள் எடுக்கும் வகையில் மாற்றங்கள் ஏதும் ஏற்படவில்லை. இருதரப்புக்கும் இடையிலான உறவு சரியாகிவிட்டது என்று பொதுப்படையாக கூறப்படுகிறது. அல்லது சில சமயங்களில் நீதித்துறை சரணடைந்துவிட்டது என்றும் கூறப்படுகிறது. அரசாங்கத்தின் அதிகார வரம்பில் நீதித்துறை செய்த ஊடுருவல், இன்னும் வெளியேற்றப்படவில்லை என்று நான் நம்புகிறேன். அரசுக்கு ஒருவித கட்டாயம் இருக்கிறது. இதில் ஒன்றும் செய்துவிட முடியாது" என்று சொல்கிறார் சத்ய பிரகாஷ்.
தலைமை நீதிபதி தீபக் மிஷ்ராவின் காலத்தில் அரசாங்கத்துக்கும் நீதித்துறைக்கும் இடையில் இருந்த உறவே தலைமை நீதிபதி கோகோயின் பதவிக்காலத்திலும் தொடர்ந்தது என்றே தான் நினைப்பதாக சொல்கிறார் சுசித்ரா மொஹந்தி.
ரஃபால் மற்றும் சபரிமலை
அயோத்தி வழக்கில் வழங்கிய தீர்ப்புக்காக மட்டுமே நீதிபதி கோகோய் நினைவுகூரப்படுவாரா? இல்லை என்று சுலபமாகவே சொல்லிவிடலாம். தலைமை நீதிபதி கோகோயின் பதவியின் கடைசி நாட்களில், அயோத்தி வழக்கிற்குப் பிறகு மற்றொரு பெரிய தீர்ப்பையும் வழங்கினார்.
ரஃபால் விவகாரம் தொடர்பான அனைத்து மறுபரிசீலனை மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. முன்னதாக, ரஃபால் ஒப்பந்தத்தில் எந்தவிதமான ஊழலும் நடைபெறவில்லை என்று கூறிய உச்ச நீதிமன்றம், அதற்கு எதிரான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது. ரஃபால் வழக்கில் விசாரணை தேவையில்லை என்றும், இந்த மனுக்களுக்கு எந்தவிதமான வலுவான அடிப்படை இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.
இருப்பினும், அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்ற சபரிமலை வழக்கில், ஆலயத்திற்குள் பெண்கள் நுழைவதற்கான முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவை, உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, பெரிய அரசமைப்புச் சட்ட அமர்வுக்கு அனுப்பியது. அதே சமயத்தில், உச்ச நீதிமன்றம் பழைய முடிவுக்கும் எந்த தடையும் விதிக்கவில்லை என்பதால், பழைய முடிவு தொடரும். சபரிமலை கோயிலுக்கு பெண்கள் நுழைவதற்கான தடையை உச்ச நீதிமன்றம் முன்பு நீக்கியிருந்தது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான தீர்ப்பு
தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் . என்று நவம்பர் 13 ஆம் தேதி, கோகோய் தலைமையிலான அரசமைப்புச் சட்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஒரு தசாப்த காலமாக நிலுவையிலிருந்தது, கடந்த ஒன்பது தலைமை நீதிபதிகள், இந்த விவகாரத்தை விசாரிக்க அரசமைப்புச் சட்ட அமர்வை அமைக்கவில்லை. வழக்கமாக, விசாரணைக்குப் பிறகு, 3 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கவேண்டும் என்ற நடைமுறை உள்ளது, ஆனால் இந்த வழக்கு விசாரிக்கப்பட்ட பிறகு, ஒரு முடிவுக்கு வர 7 மாதங்கள் ஆனது.
"தாமதமாக வந்தாலும், இந்த தீர்ப்பில் பல நல்ல அம்சங்கள் உள்ளன. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 2-எஃப் கீழ், இப்போது தலைமை நீதிபதியின் அலுவலகமும் வந்துவிட்டது. ஆனால் நீதிபதிகளின் தனியுரிமை மற்றும் சிறப்புரிமை என்ற பெயரில் இந்த முடிவை அமல்படுத்துவதில் பிரச்சனைகள் ஏற்படலாம்" என்கிறார் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் விராஹ் குப்தா.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, நாட்டின் தலைவர்களும் அதிகாரிகளும் தங்கள் சொத்துக்கள் குறித்த பொது விவரங்களை வழங்க வேண்டும். இது தொடர்பாக 1997 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றமும் ஒரு தீர்மானம் நிறைவேற்றியிருந்தது, ஆயினும் நீதிபதிகள் அனைவரும் இதுவரை தங்கள் சொத்து விவரங்களை இன்னும் அறிவிக்கவில்லை.
"மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகியவற்றிலும் தனிப்பட்ட சிறப்புரிமை இருந்தபோதிலும், இரு அவைகளின் நடவடிக்கைகளும் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன. மறுபுறம், பொதுமக்களுக்குத் திறந்திருக்கிறது உச்ச நீதிமன்றம். நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால் அவை வெளிப்படையாக ஒளிபரப்பப்படுவதில்லை " என்று கூறுகிறார் விராக் குப்தா.

பட மூலாதாரம், Getty Images
கோகோய் நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆஜரானபோது.. .
கேரளாவில் நடந்த செளம்யா கொலை வழக்கில் கோவிந்தசாமி என்பவருக்கு திருச்சூர் விரைவு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. அவரது மரண தண்டனையை கேரள உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.
பின்னர், நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான மூன்று பேர் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வானது, கோவிந்தசாமி சிறுமியைக் கொல்ல விரும்பவில்லை என்று தனது தீர்ப்பில் கூறியது. இதன் மூலம், கோவிந்தசாமியை கொலை குற்றவாளியாக கருதாத உச்சநீதிமன்றம், அவரது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியது.
இந்த குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி மார்கண்டே கட்ஜு, 2016 செப்டம்பர் 15ஆம் தேதியன்று தனது வலைப்பதிவில் விமர்சித்திருந்தார். செளமியா பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் தவறானது என்று கட்ஜு தனது வலைப்பதிவில் எழுதினார். நீண்ட காலமாக சட்ட உலகில் வாழும் நீதிபதிகளிடமிருந்து அத்தகைய முடிவு எதிர்பார்க்கப்படவில்லை என்று அவர் எழுதினார்.
இது குறித்து கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், நீதிபதி கட்ஜு நேரடியாக நீதிமன்றத்திற்கு வந்து சட்டப்படி அவர் சரியானவரா அல்லது நீதிமன்றம் சரியானதா என்று விவாதிக்க வேண்டும் என்று கூறிவிட்டது. இப்படி ஒரு விஷயத்தில் விமர்சனம் பற்றி விசாரிக்க உச்சநீதிமன்றம் ஓய்வுபெற்ற நீதிபதியை வரவழைத்தது முதல் முறையாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, நீதிபதி கட்ஜு தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டியிருந்தது.
சரித்திர மாணவராக தொடங்கி தலைமை நீதிபதியான பயணம்
டெல்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் இளங்கலை பட்டப்படிப்பையும், சட்டப் படிப்பையும் படித்தார். நீதிபதி கோகோய் தலைமை நீதிபதியாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைவதாகவும், இந்த பதவிக்கு ஏற்ற அனைத்து தகுதிகளை கொண்டவர் கோகோய் என்று மும்பை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி சந்திரசேகர் தர்மதிகாரி பிபிசியிடம் பேசியபோது தெரிவித்தார் என்பதையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
1978ஆம் ஆண்டு வழக்கறிஞராக பதிவுசெய்த ரஞ்சன், கெளஹாத்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகத் தொழில் செய்தார். கெளஹாத்தி உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக 2001ஆம் ஆண்டு பதவியேற்ற அவர், 2010ஆம் ஆண்டு பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். ஓராண்டிலேயே பஞ்சாப் -ஹரியாணா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2012 ஏப்ரல் மாதம், உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார் நீதிபதி கோகோய்.
2018 அக்டோபர் மூன்றாம் தேதியன்று நாட்டின் 46 வது தலைமை நீதிபதியாக பதவியெற்றுக் கொண்ட ரஞ்சன் கோகோய், வடகிழக்கு இந்தியாவில் இருந்து இந்த பதவியை அலங்கரித்த முதல் நபர் ஆவார்.
அசாமிலுள்ள திப்ருகார் பகுதியில் 1954ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி ரஞ்சன் பிறந்தார். ரஞ்சனின் தந்தை அசாமின் முன்னாள் முதலமைச்சர் கெசாப் சந்திர கோகாய் ஆவார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கெசாப் சந்திர கோகாய் கடந்த 1982ஆம் ஆண்டு அசாமின் முதலமைச்சராக இருந்தார்.
கடந்த ஆண்டு வெளியான 'கெளஹாத்தி உயர் நீதிமன்றம், வரலாறு மற்றும் பாரம்பரியம்' என்ற புத்தகத்தில், நீதிபதி கோகோய் பற்றிய சிறப்புக் கதை ஒன்றும் இடம் பெற்றுள்ளது. தந்தையைப் போலவே, மகன் ரஞ்சனும் அரசியலில் ஈடுபடலாமா என்று கேஷாப் சந்திரா கோகோயின் நண்பர் ஒருவர் அவரிடம் கேள்வி கேட்டார்.
இந்த கேள்விக்கு பதில் அளித்த கேஷப் சந்திரா, "எனது மகன் ஒரு சிறந்த வழக்கறிஞர், இந்த நாட்டின் தலைமை நீதிபதியாகும் திறன் அவருக்கு உள்ளது" என்றும் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
நீதிமன்றம் எண் ஒன்று
டெல்லியில் நடைபெற்ற மூன்றாவது ராம்நாத் கோயங்கா நினைவு சொற்பொழிவின் போது, நீதித்துறையை நம்பிக்கையின் கடைசி கோட்டை என்று குறிப்பிட்டார் நீதிபதி கோகோய். நீதித்துறையானது, பக்தியுள்ள, சுயாதீனமான மற்றும் புரட்சிகரமான அமைப்பாக இருக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வெளிப்படைத்தன்மை கொண்ட நீதிபதிகளில் ஒருவராக நீதிபதி கோகோய் கணக்கிடப்படுகிறார். அவரது சொத்துக்கள் விவரத்தில் இடம் பெற்றுள்ள, நகைகள் மற்றும் பணம் தொடர்பான தகவல்கள் அவர் எவ்வளவு எளிமையாக வாழ்கிறார் என்பதை எடுத்துக் கூறுகிறது. நீதிபதி கோகோயிடம் கார் கூட இல்லை. அவரது தாயும், அசாமின் பிரபல சமூக ஆர்வலருமான சாந்தி கோகோயிடம் இருந்து ரஞ்சன் கோகோய்க்கு சில சொத்துக்கள் கிடைத்துள்ளன. அதுமட்டுமல்ல, சொத்து தொடர்பான தகவல்களில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், உடனே அதை அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தலைமை நீதிபதி அலுவலகத்தை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவருவதன் மூலம் தனது வெளிப்படைத் தன்மையை நீதிபதி கோகோய் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
தங்கள் தீர்ப்புகளுக்காக நீதிபதிகளை வரலாறு நினைவில் வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. நாட்டின் மிகப்பெரிய நீதிமன்றத்தின், நீதிமன்றம் எண் ஒன்றின் தீர்ப்புகளும் இந்த வகையில் வருபவையே. அயோத்தி வழக்கின் தீர்ப்பு நிச்சயமாக என்றென்றும் நினைவில் இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












