அரசியல் விளம்பரங்களுக்கு இனி ட்விட்டரில் தடை

பட மூலாதாரம், Getty Images
உலகமெங்கும் அரசியல் தொடர்பான விளம்பரங்களை தனது தளத்தில் சமூகவலைதளமான ட்விட்டர் தடை செய்யவுள்ளது.
''பொதுவாக இணையத்தில் செய்யப்படும் விளம்பரங்கள், வணிக ரீதியிலான விளம்பரதாரர்களுக்கு பெரிதும் வலுவானதாகவும், ஆதாயம் தருவதாகவும் உள்ளது. அதேவேளையில் இத்தகைய விளம்பரங்கள் அரசியல் களத்துக்கு ஆபத்தை விளைவிக்கிறது'' என்று ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஜாக் டார்ஸே தெரிவித்தார்.
அண்மையில் அரசியல் தொடர்பான விளம்பரங்களுக்கு ட்விட்டரின் சமூகவலைதள போட்டியாளரான பேஸ்புக் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டரின் இந்த தடை வரும் நவம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது. மேலும் இது குறித்த முழு தகவல்கள் நவம்பர் 15-ஆம் தேதியன்று வெளியிடப்படுகிறது.
வரும் 2020-இல் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ட்விட்டரின் இந்த தடையால் அங்குள்ள அரசியல் கட்சிகளிடம் வெவ்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளன.
2020 தேர்தலில் மீண்டும் அமெரிக்க அதிபராக களமிறங்கவுள்ள டொனால்ட் டிரம்பின் தேர்தல் பிரசார மேலாளரான பிராட் பார்ஸ்கேல் இது குறித்து கூறுகையில், 'டிரம்பின் வெற்றியை தடுக்க நடக்க மற்றொரு முயற்சி இது' என்றார்.
அதேவேளையில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் போட்டியில் முன்னோடியாக உள்ள ஜோ பிடனின் தேர்தல் பிரசார செய்தி தொடர்பாளர் பில் ரூசோ கூறுகையில், ''நமது ஜனநாயகத்தின் மாண்புக்கும், டாலர்களுக்கும் இடையே எதை தேர்வு செய்வது என ஒரு நிலை வந்தால், அப்போது ஜனநாயகத்தை பணம் வெல்லாது என்பது ஆரோக்யமான மற்றும் ஆறுதல் தரும் விஷயம்'' என்று குறிப்பிட்டார்.
இதனிடையே, அரசியல் விளம்பரங்களுக்கு இனி ட்விட்டரில் தடைவிதிக்கும் தங்களின் முடிவு குறித்து கருத்து தெரிவித்த ஜாக் டார்ஸே, இணையத்தில் வெளியாகும் அரசியல் விளம்பரங்கள் சமுதாயத்துக்கு சவால் அளிப்பதாக கூறினார்.

பட மூலாதாரம், Reuters
''சிலரை குறிவைத்து தாக்குவதற்கும், போலி செய்திகள் பரவுவது மற்றும் தவறான செய்திகள் பாதிப்பு ஏற்பட அரசியல் ரீதியிலான விளம்பரங்கள் காரணமாக அமைகிறது'' என்று அவர் தெரிவித்தார்.

நிர்வாண ஓவியங்களை நான் வரைவது ஏன்: ஓவியர் ரம்யா சதாசிவம்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













