சீன அதிபர் ஷி ஜின்பிங்: எலும்பு நொறுங்கும் என்று ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
சீனாவைப் பிரிக்க நினைத்தால் "நசுங்கிய உடல்கள், நொறுங்கிய எலும்புகள்" மிஞ்சும் என்று என ஹாங்காங் போராட்டக் காரர்களுக்குச் சீன அதிபர் ஷி ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேபாளத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளபோது ஷி ஜின்பிங் இதனைத் தெரிவித்தார் எனச் சீன அரசு ஊடகமான சிசிடிவி தெரிவித்துள்ளது.
ஞாயிறன்று ஹாங்காங்கில் தொடங்கிய பல அமைதியான போராட்டங்கள் கலவரத் தடுப்பு போலீஸார் மற்றும் போராட்டக்காரர்களுக்கு இடையேயான வன்முறையாக முடிந்தது.
பொதுப் போக்குவரத்து நிலையங்கள் மற்றும் சீன ஆதரவு கடைகள் அடித்து சேதப்படுத்தப்பட்டன.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
போராட்டக்காரர்களை கலைக்கச் சிறிதளவு படையை தாங்கள் பயன்படுத்தியதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். ஆனால் வார இறுதி நாட்களில் கடைகளில் பொருட்கள் வாங்க வந்தவர்களும் வந்த கூட்டத்தில் சிக்கி கொண்டது தொலைக்காட்சிகளில் வந்த வீடியோக்களில் தெரிகிறது.
ஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபர்களை சீனாவிடம் ஒப்படைக்கும் சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு எதிராகக் கடந்த ஜூன் மாதம் போராட்டம் தொடங்கியது. இந்த மசோதா அந்நாட்டின் நீதி சுதந்திரத்தைப் பாதிக்கும் என அஞ்சப்பட்டது.
அந்த மசோதா கைவிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டாலும், போராட்டக்காரர்கள் முழுமையான ஜனநாயகம் கோரியும், போலீஸாரின் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரியும் போராடிவருகின்றனர் வருகின்றனர்.

கடலில் திசை மாறி 20 நாள்கள் தத்தளித்த இலங்கை மீனவர்கள்

பட மூலாதாரம், BUDDHIKA WEERASINGHE
இயந்திரம் பழுதடைந்த தமது படகில் இருந்தவாறு, கடலில் 20 நாட்களாக திசையறியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் இருவர், தங்களுடன் பயணித்த சக மீனவரை இழந்த நிலையில், சுமார் 180 கடல் மைல் தூரத்தில் வைத்து காப்பாற்றப்பட்டுள்ளனர்.
குறித்த படகில் பயணித்த மூவரில் ஒருவர் இறந்து விட்டதாகவும், அவரின் சடலத்தை படகில் வைத்துக் கொண்டு, 8 நாட்கள் கடலில் தாங்கள் அலைக்கழிந்ததாகவும் காப்பற்றப்பட்டவர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த ஐ.எல். ஆரிஸ், மற்றும் கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.எம். ஜுனைதீன் ஆகிய மீனவர்களே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளனர்.

காஷ்மீர் முடக்கப்பட்ட நிலையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது 'மோசடி' வேலையா'?

பட மூலாதாரம், Getty Images
இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் பகுதி முடக்கப்பட்டு, பெருமளவிலான அரசியல் தலைவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. பிபிசி இந்தி பிரிவின் செய்தியாளர் வினீத் கரே இது பற்றி எழுதுகிறார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ஆகஸ்ட் 5 ஆம் தேதி நரேந்திர மோதி தலைமையிலான பா.ஜ.க. அரசு ரத்து செய்தபிறகு, அங்கு நடைபெறும் முதலாவது தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் தான்.
கிராமங்களின் தொகுப்பாக உள்ள 310 ஒன்றியங்களில் அக்டோபர் 24 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். இது கிராம உள்லாட்சிக் கவுன்சில் நடைமுறையின் அங்கமாக உள்ளது. வாக்குகள் அன்றைய தினமே எண்ணப்படும்.

கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உயரப் பறக்கும் திருநங்கையின் பெயர்

"தமிழ் இலக்கிய உலகில் பாலின சமத்துவம் இல்லை. ஆண் எழுத்தாளர்களுக்குக் கிடைக்கும் அங்கீகாரம் பெண் எழுத்தாளர்களுக்கு கிடைப்பதில்லை." இது பொதுவாக வைக்கப்படும் குற்றச்சாட்டு. ஆனால், அப்படியான துறையிலிருந்து உயர எழுந்து இருக்கிறார் திருநங்கை அ. ரேவதி.
மாயா ஏஞ்சலோ, டோனி மாரிசன், லெஸ்லி மார்மன் சில்கோ, ஷாங்கே ஆகிய எழுத்தாளர்களுடன் இவரது பெயரும் கொலம்பியா பல்கலைக்கழக நூலகத்தில் இடம் பெற்றிருக்கிறது.
கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பட்லர் நூலகத்தின் முகப்பில் அரிஸ்டாட்டில், பிளேட்டோ, ஹோமர், டெமோஸ்தினீஸ், சீசாரோ என ஆண் எழுத்தாளர்கள், அறிஞர்கள் 8 பேரின் பெயர்கள் மட்டுமே பெரிய அளவில் இடம்பெற்றிருக்கும். பெண் எழுத்தாளர்கள் பெயர் ஏன் ஒன்று கூட இல்லை என எதிர்ப்பு தெரிவித்து கொலம்பியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

பிளாஸ்டிக்கை தின்னும் பாக்டீரியாக்கள் கண்டுபிடிப்பு

பட மூலாதாரம், Getty Images
உலகத்துக்கே மிகப் பெரிய பிரச்சனையான விளங்குகின்றன பிளாஸ்டிக் கழிவுகள். இந்நிலையில், பிளாஸ்டிக்கை தின்னும் இரண்டு வகை பாக்டீரியாக்களை டெல்லி ஷிவ் நாடார் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டது.
டெல்லியை அடுத்துள்ள கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் தங்களது இந்த கண்டுபிடிப்பு தொடர்பான கட்டுரையை ஆர்.எஸ்.சி. (ராயல் சொசைட்டி ஆஃப் கெமிஸ்ட்ரி) அட்வான்ஸஸ் என்ற சஞ்சிகையில் வெளியிட்டுள்ளனர்.
ஒரு முறை மட்டுமே பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக்கில் உள்ள முக்கிய வேதிப்பொருளான பாலிஸ்டைரீனின் கட்டமைப்பை உடைத்து அதை மட்க செய்யும் திறன் படைத்த எக்ஸிகியூயோபாக்டீரியம் சிபிரிகம் ஸ்ட்ரைன் டிஆர்11, எக்ஸிகியூயோபாக்டீரியம் உண்டே ஸ்ட்ரைன் டிஆர்14 ஆகிய இரண்டு வகை பாக்டிரியாக்களை தங்களது பல்கலைக்கழகத்துக்கு அருகிலுள்ள நீர் நிலையில் கண்டறிந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

"நான் ஏன் தமிழ் கற்றேன்"? - சீனப் பெண் நிறைமதியுடன் பிரத்யேக நேர்காணல்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












