அண்டார்டிகாவில் குட்டி போட்ட பனிப்பாறை: 50 ஆண்டுகளில் இல்லாத அளவு பெரிய அதிசயம் மற்றும் பிற செய்திகள்

அமெரிப் பனிப்படலம்

பட மூலாதாரம், COPERNICUS DATA/SENTINEL-1/@STEFLHE

அண்டார்டிக்காவில் உள்ள `அமெரி' பனியடுக்குப் பாறையில் இருந்து 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று 'பிறந்துள்ளது'.

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?

புத்தகத்தில் வைத்த மயிலிறகு குட்டி போடுவது போல இது கற்பனை அல்ல. இந்த பனியடுக்குப் பாறை குட்டி போட்டிருப்பது உண்மை. ஆங்கிலத்தில் இதனை 'கால்விங்' என்கிறார்கள்.

பனியடுக்கின் மேற்பகுதிகளில் அடுத்தடுத்து பனிப்பொழிவு ஏற்பட்டு அதன் அளவு பெருக்கும்போது அதன் கீழ்ப் பகுதியில் ஒரு பெரும் பாறை பிரிந்து சென்று பெருங்கடலில் சேரும் நிகழ்வே பனியடுக்குப் பாறை குட்டி போடுதல் அல்லது கால்விங் என்று அழைக்கப்படுகிறபது.

சரி இதில் இப்போது என்ன அதிசயம் என்கிறீர்களா?

அன்டார்டிக்காவில் உள்ள மூன்றாவது பெரிய பனி அடுக்குப் பாறையான அமெரி 1960களுக்குப் பிறகு போட்ட குட்டிகளிலேயே தற்போது போட்டிருப்பது மிகப்பெரியது. இப்போது போட்டிருக்கும் இந்த பனிக்குட்டியின், அதாவது பிரிந்து சென்ற பனிப்பாறையின், அளவு 1,636 சதுர கி.மீ. ஆகும். இதற்கு டி28 என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

இத்தனை பெரிய பனிப்பாறையால் எதிர்காலத்தில் கப்பல் போக்குவரத்துக்கு ஆபத்து ஏற்படும் என்றும் எனவே அது கண்காணிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

1960ல் அமெரி போட்ட பனிக் குட்டியின் அளவு என்ன தெரியுமா? 9 ஆயிரம் சதுர கி.மீ.

விஞ்ஞானிகளுக்கு இம்மாதிரியான நிகழ்வு நடைபெறும் என்று தெரிந்திருந்தது. ஆனால் அவர்கள் தற்போது பிரிந்துள்ள பனிப் பாறைக்கு சற்று தள்ளி கிழக்கு திசையில் கண்காணித்து வந்தனர். அந்த பகுதி பனிப்படலத்தின் செயற்கைக்கோள் புகைப்படம் குழந்தையின் ஆடும் பற்கள் போன்று தோன்றியதால் அதற்கு `ஆடும் பல்` என்று பெயரிட்டிருந்தனர்.

"பருவநிலை மாற்றத்துக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை கோடைக்காலத்தில் பனிப்பாறைகள் அதிகப்படியாக உருகி வந்தாலும், அமெரி பாறை சமநிலையுடன்தான் உள்ளது" என்று பெருங்கடல் சார்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்றின் ஆய்வாளர் ஃபிரிக்கர் தெரிவித்துள்ளார்.

"அண்டார்டிகா பனிப்பாறைகள் குறித்து நாம் கவலை கொள்ள வேண்டியிருந்தாலும் இந்த குறிப்பிட்ட பனிப்பாறைகள் குறித்து நாம் கவலை கொள்ள வேண்டாம்." என ஃபிரிக்கர் தெரிவித்துள்ளார்.

Presentational grey line

அமெரிக்க ராணுவ முகாம் மீது சோமாலியாவில் தாக்குதல்

சோமாலியா

பட மூலாதாரம், Alamy

சோமாலியாவில் அமெரிக்க கமாண்டோ படையினர் பயிற்சியெடுத்துவரும் ஒரு ராணுவ முகாம் மீது ஜிஹாதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சோமாலியாவின் தெற்கு ஷபேல் பகுதியில் உள்ள பாலேடோக்லே விமானநிலையத்தில் பல குண்டுவெடிப்புகள் மற்றும் துப்பாக்கிசூடு சம்பவங்கள் நடந்ததாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

இந்த தாக்குதலை தாங்கள் நடத்தியதாக தெரிவித்த அல்-ஷபாப் தீவிரவாத குழு, ராணுவ முகாமின் கதவுகளை கார் வெடிகுண்டு மூலம் தகர்த்தாகவும், அதன்பின்னர் தனது போராளிகளை முகாம் உள்ளே அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

Presentational grey line

''நினைத்துப் பார்க்க முடியாத அளவு கச்சா எண்ணெய் விலை உயரும்''

கஷோக்ஜி

பட மூலாதாரம், Reuters

இரானால் ஏற்படக்கூடிய அபாயத்தை தடுக்க உலக நாடுகள் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் என சௌதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிபிஎஸ் செய்தி நிறுவனத்துக்கு கொடுத்த பேட்டியொன்றில், கஷோக்ஜி கொலை குறித்து தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்படும் பதற்றம் ஆகியவை குறித்து பேசியிருக்கிறார்.

சௌதி அரசை விமர்சித்து பத்திரிகைகளில் எழுதி வந்த அந்நாட்டை சேர்ந்த பத்திரிகையாளர் கஷோக்ஜி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2-ம் தேதி துருக்கியில் உள்ள சௌதி அரேபிய தூதரகத்தில் கொல்லப்பட்டார்.

இது குறித்து ஞாயிற்று கிழமை வெளியான பேட்டியில் பேசியுள்ள சல்மான், ''சௌதி அரேபியாவின் தலைவராக இந்த விவாகரத்தில் நான் முழுப்பொறுப்பேற்கிறேன். குறிப்பாக சௌதி அரசுக்காக வேலைபார்க்கும் சில தனி நபர்கள் இந்த கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதால் நான் பொறுப்பேற்கிறேன்'' என்றார்.

ஆனால் கஷோக்ஜியை கொலை செய்ய உத்தரவிட்டதாகவோ அல்லது கஷோக்ஜி கொலை செய்யப்படுவது குறித்து ஏற்கனவே தனக்கு தெரியும் என கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும் தெரிவித்தார்.

Presentational grey line

’பிக்பாஸிலிருந்து தர்ஷன் வெளியேறியது குறித்து கவலையளிக்கிறது’

தர்ஷன்

பட மூலாதாரம், Facebook

இலங்கையில் பிறந்த தமிழரான தர்ஷன், தற்போது பிரபல்யமடைந்த பின்னணியில் அவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டமை தொடர்பில் இலங்கையர்களின் கருத்துக்களை கேட்டறிந்தோம்.

தர்ஷன் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டமையானது, தனக்கு மிகுந்த கவலையளிப்பதாக கொழும்பிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றும் சிதம்பரம் ஹிரோஷினி பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

மிகுந்த திறமைகளை கொண்ட தர்ஷன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவரது நன்மதிப்பையும் பெற்ற ஒருவர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Presentational grey line

உத்தரப்பிரதேசம், பிகாரில் கடும்மழை வெள்ளம்: உயிரிழப்புகள் 100-ஐ தாண்டியது

பிகார்

பட மூலாதாரம், SAROJ KUMAR / BBC

உத்தரப்பிரதேசம் மற்றும் பிகாரில் கடும் மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளத்தால் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் வெள்ள நீர் மக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்ததை காட்டும் படங்கள் வெளிவந்துள்ளன.

ரயில் போக்குவரத்து,, சாலைகளில் வாகன போக்குவரத்து, சுகாதாரசேவைகள் , மின்சாரம் போன்றவை இவ்விரு மாநிலங்களிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :