இஸ்ரேல் தேர்தல் முடிவுகள்: அரேபியர்கள் யாரை ஆதரிக்கிறார்கள் தெரியுமா? மற்றும் பிற செய்திகள்

இஸ்ரேலிய அரேபியர்கள் யாரை ஆதரிக்கிறார்கள்?

கடந்த 1992ஆம் ஆண்டிலிருந்து இஸ்ரேலில் உள்ள அரபு கட்சிகள் எந்த பிரதமருக்கும் தங்கள் ஆதரவை அளித்ததே இல்லை. பெஞ்சமின் நெதன்யாஹூ மீதான கோபம் அந்த அரபு கட்சிகளை 30 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரு பிரதமரை ஆதரிக்க வைத்திருக்கிறது. அண்மையில் இஸ்ரேலில் தேர்தல் நடந்தது. இது கடந்த ஓராண்டில் நடக்கும் இரண்டாவது பொதுத் தேர்தல். முதலில் நடந்த தேர்தலில் ஆட்சி அமைக்கக் கூட்டணி எட்டப்படாத சூழலில் மீண்டும் தேர்தல் நடந்தது. இதிலும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், இரு கட்சிகளும் கூட்டணி ஆட்சி அமைக்க பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

சில இஸ்ரேல் மற்றும் அரபு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் ராணுவ தளபதி பென்னிக்கு தங்கள் ஆதரவை அளித்துள்ளனர். இஸ்ரேல் அரபு குழுவின் தலைவர், "நாங்கள் பென்னியையோ அவரது கொள்கைகளையோ ஆதரிக்கிறோம் என்பது அர்த்தம் அல்ல. பெஞ்சமின் மீண்டும் ஆட்சி அமைக்காமல் தடுக்கவே இந்த முடிவினை எடுத்துள்ளோம்." என்றார்.

நரேந்திர மோதிக்கு அமெரிக்காவில் போராட்டங்களுக்கு மத்தியில் வரவேற்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கலந்துகொள்ளும் 'ஹௌடி மோடி' நிகழ்ச்சி டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் தொடங்கியுள்ளது. இந்திய நேரப்படி இரவு சுமார் 9.30 மணிக்கு நரேந்திர மோதி மேடைக்கு வந்தார். அவருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுமார் ஒரு மணி நேரம் கழித்தே டிரம்ப் அங்கு வந்தார். அப்போது உள்ளூர் நேரப்படி நற்பகல் ஆகியிருந்தது.

இலங்கை ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஆராய மற்றுமொரு ஜனாதிபதி ஆணைக்குழு

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மற்றுமொரு ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைத்துள்ளார்.ஐவர் அடங்கிய இந்த ஆணைக்குழுவை நியமிக்கும் வர்த்தமானி அறிவித்தல் நேற்றைய தினம் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டிருந்தது.

நச்சுப் பாம்புகளிடம் 200 முறை கடிபட்ட பின்னும் உயிர்வாழும் நபரின் கதை

ஒவ்வோர் ஐந்து நிமிடங்களுக்கும் ஒருவர் எங்காவது பாம்பு கடிப்பதால் இறக்கிறார். நான்கு பேர் நிரந்தரமாக குறைபாடு உடையவர்கள் ஆகிறார்கள்.இவ்வாறு ஆட்களை கொல்லும் நஞ்சுடைய பாம்புகளோடு, பெரிய ஆபத்துகள் இருந்தாலும், பரிசோதனைகளை மேற்கொள்ளும் சிலர் இப்போதும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

சீன தேசியக் கொடியை அவமதித்து ஆற்றுக்குள் வீசிய ஹாங்காங் மக்கள்

ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக தொடர்ந்து 16வது வாரமாக நடந்து வரும் போராட்டங்களின்போது சீன தேசியக்கொடி நாசப்படுத்தப்பட்டதுடன், வணிக வளாகம் ஒன்றும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.சீன தேசியக் கோடி போராட்டக்காரர்களால் அவமானப்படுத்தப்பட்டு, ஆற்றுக்குள் தூக்கி வீசப்படும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. 'ஷா தின்' எனும் இடத்தில் உள்ள நியூ டவுன் பிளாசா எனும் வணிக வளாகத்தில் நடந்த போராட்டத்தில் நகரும் மின் படிக்கட்டுகள் மற்றும் கண்ணாடித் தடுப்புகள் சேதப்படுத்தப்பட்டன. அந்த வளாகத்தில் இருந்த சீன ஆதரவு வர்த்தக நிறுவனங்களையே பெரும்பாலும் போராட்டக்காரர்கள் இலக்கு வைத்துத் தாக்கினர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :