அமெரிக்காவில் நரேந்திர மோதி - நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 10 தகவல்கள்

பட மூலாதாரம், @narendramodi / twitter
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அமெரிக்காவில் மேற்கொண்டுள்ள ஏழு நாள் சுற்றுப்பயணம் வழக்கத்தைவிடவும் அதிகமான முக்கியத்துவத்தையும் எதிர்பார்ப்புகளையும் கொண்டுள்ளது. செப்டம்பர் 21 முதல் 27 வரை நரேந்திர மோதி இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார்.
இந்த ஏழு நாள் பயணத்தின்போது அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் உடன் இரண்டு முறை சந்தித்துப் பேசவுள்ளார். வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்களையும் மோதி சந்தித்துப் பேசவுள்ளார்.
அந்த இரண்டு சந்திப்புகளில் முதல் சந்திப்பு, இன்று ஹூஸ்டனில் நடக்கிறது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்துள்ள 'ஹெளடி மோடி!' எனும் நிகழ்ச்சி ஹூஸ்டன் நகரில் இன்று நடக்கிறது.
மோதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து 'ஹிந்துஸ் ஃபார் ஹியூமன் ரைட்ஸ்,' காஷ்மீர் மற்றும் காலிஸ்தான் பிரிவினைவாத ஆதரவு அமைப்புகள், இந்திய - அமெரிக்க இஸ்லாமியர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மோதியின் 'ஹௌடி மோடி!' நிகழ்ச்சி நடைபெறும் என்.ஆர்.ஜி உள்விளையாட்டு அரங்கை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளன.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
சுமார் 50,000 வெளிநாடு வாழ் இந்தியர்கள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வில் மோதி, டிரம்ப் ஆகிய இருவரும் கலந்து கொள்கின்றனர். இந்தப் பயணம் மற்றும் 'ஹெளடி மோடி!' நிகழ்ச்சி குறித்த 10 முக்கியத் தகவல்களை பார்ப்போம்.
1. ஐ.நா பொதுச்சபையின் 74வது அமர்வின் உயர்மட்டக் கூட்டத்தில், இந்தப் பயணத்தின்போது நரேந்திர மோதி கலந்துகொள்வார். காஷ்மீர் பிரச்சனை குறித்து மோதி அதில் பேசுவார் என்ற பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
2. டெக்சாஸ் மாகாணத்தில் அமைத்துள்ள அமெரிக்காவின் நான்காவது பெரிய நகரமான ஹூஸ்டனில் நடக்கும் 'ஹௌடி மோடி!' நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொள்வதுதான், அமெரிக்க வாழ் இந்தியர்கள் நடத்தும் கூட்டம் ஒன்றில் இந்தியப் பிரதமருடன் அவர் கலந்துகொள்ளும் முதல் நிகழ்வாகும்.

பட மூலாதாரம், Getty Images
3. ஹூஸ்டன் நிகழ்ச்சிக்குப் பிறகு சில நாட்கள் கழித்து நியூயார்க்கில் அதிபர் டிரம்ப் உடனான சந்திப்பு நடக்கும் என்று நரேந்திர மோதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். ஆனால், அந்த சந்திப்பு நடைபெறும் தேதி மற்றும் நேரம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
4. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பின்னர் மோதி அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் கலந்துகொள்ளும் முதல் கூட்டம் இது என்பதால் இந்த நிகழ்வு கூடுதல் கவனம் பெற்றுள்ளது.
5. 1836 வரை மெக்சிகோவின் அங்கமாக இருந்த டெக்சாஸ், அங்கு நடந்த புரட்சிக்கு பிறகு சுதந்திரம் பிரகடனம் செய்தது. பின்னர் சில காலம் தனி நாடாக இயங்கிய டெக்சாஸ், அப்போதைய மெக்சிகோ அரசின் அச்சுறுத்தலுக்கு உள்ளானதால், 1844இல் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமாக ஆனது. எனினும், அப்போது மெக்சிகோ டெக்சாஸை அமெரிக்காவின் ஓர் பகுதியாக அங்கீகரிக்கவில்லை.

பட மூலாதாரம், Getty Images
6. காஷ்மீர் பிரிக்கப்பட்டபின் நடக்கும் கூட்டத்துக்கு ஹூஸ்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளதும் மேற்கண்ட காரணத்தால் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தியாவின் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி என்று பாகிஸ்தானும், பாகிஸ்தான் நிர்வாகத்தின்கீழ் உள்ள காஷ்மீர் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி என்று இந்தியாவும் கூறிவருகின்றன.
7. மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தினத்தை முன்னிட்டு, இன்றைய உலகில் காந்திய சிந்தனைகளின் தேவை குறித்த நிகழ்வு ஒன்றும் ஐ.நாவில் இந்தியா சார்பாக நடத்தப்படவுள்ளது. ஐ.நா பொதுச் செயலர் ஆண்டானியோ கட்டரஸ் மற்றும் பல நாடுகளின் தலைவர்கள் இதில் கலந்து கொள்வார்கள்.
8. முதல் முறையாக பசிபிக் தீவு நாடுகளின் தலைவர் மற்றும் 'கரீபியன் கம்யூனிட்டி' என்று அழைக்கப்படும் கரீபியக் கடலில் அமைந்துள்ள தீவு நாடுகளின் தலைவர்கள் ஆகியோருடன் நரேந்திர மோதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
9. மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் நடத்தும் பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் வழங்கும் 2019ஆம் ஆண்டுக்கான 'க்ளோபல் கோல்கீப்பர்ஸ் கோல்ஸ்' விருதும் இந்தப் பயணத்தின்போது மோதிக்கு வழக்கப்படவுள்ளது.
10. இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த சில மாதங்களாக வர்த்தக உறவுகள் பலவீனமாகி வருகின்றன. வர்த்தக முன்னுரிமை அளிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கியது மட்டுமல்லாது, சில இறக்குமதிகளுக்கான வரியையும் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகியன அதிகரித்தன. இது குறித்தும் மோதி மற்றும் டிரம்ப் பேசுவார்கள் என்று கருதப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












