பாகிஸ்தானில் தெய்வ நிந்தனை கலவரம்: இந்து ஆசிரியர் மீது குற்றச்சாட்டு மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், TWITTER
பாகிஸ்தானில் தெய்வநிந்தனை செய்ததாக தலைமை ஆசிரியர் மீது பதின்ம வயது மாணவர் ஒருவர் குற்றஞ்சாட்டியதால், தலைமையாசிரியரை தாக்கிய டஜன் கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சிந்து மாகாணத்தில் அந்த பள்ளியை நடத்தும் தலைமையாசிரியர், நபிகள் நாயகம் குறித்து தவறாக பேசியதாக குற்றஞ்சாட்டினர்.
அதன்பிறகு ஒரு பெரிய கும்பல் ஒன்று, சனிக்கிழமையன்று கோட்கி நகரில் உள்ள இந்து கோயில், கடைகள் மற்றும் பள்ளியை தாக்கினார்
தலைமையாசிரியரின் மீது தெய்வ நிந்தனை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு போலீஸாரின் பிடியில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை வழங்கப்படும்.
கலவரகாரர்கள் மீதும் தெய்வ நிந்தனை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தானில் உள்ள பிபிசியின் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் கோயில்கள் மீது தாக்குதல் நடத்தியதால் அவர்களின் மீது மரண தண்டனை போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்படாது.
"குற்றம் சுமத்தப்பட்ட நபர் போலீஸாரின் பிடியில் உள்ளார்." என கூடுதல் காவல் ஆய்வாளர் ஜமில் அகமத் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
"கோட்கியில் 12 மணி நேரத்திற்குள் நிலைமை இயல்பு நிலைக்கு வந்துவிட்டது. தகவல்களை சரிபார்த்து முறையான விசாரணை நட்த்தப்பட்டுள்ளது. குண்டர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்."
இந்த வருடத்தின் தொடக்கத்தில், தெய்வ நிந்தனை குற்றச்சாட்டில் கிறித்தவ பெண்ணான ஆசியா பீபி விடுதலை செய்யப்பட்டார். ஆசியா பீபி வழக்கால் பாகிஸ்தானில் தெய்வ நிந்தனை வழக்கு பெரிதும் பேசப்பட்டது.

"மகளின் மரணத்திற்கு அரசாங்கம் வருத்தம் கூட தெரிவிக்கவில்லை''

பட மூலாதாரம், Facebook
சென்னையில் பேனர் விழுந்ததைத் தொடர்ந்து உயிரிழந்த சுபஸ்ரீயின் பெற்றோருக்கு பலரும் ஆறுதல் கூறிவரும் நிலையில், தமிழக அரசாங்கம் வருத்தம்கூட தெரிவிக்கவில்லை என்று சுபஸ்ரீயின் பெற்றோர் வேதனை தெரிவித்தனர்.
சுபஸ்ரீயின் இறப்பை அடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் அனுமதியின்றி பேனர் வைக்கும் நிகழ்வுகளில் தான் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்தார். நடிகர் மற்றும் மக்கள்நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சுபஸ்ரீயின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
'சிசிடிவி காட்சிகள் உண்மையை சொல்லிவிட்டன. என் மகள் விபத்தில் இறக்கவில்லை. பேனர் விழாமல் இருந்திருந்தால், அவள் நேராக சென்றிருப்பாள், லாரியும் அவளை கடந்து சென்றிருக்கும். இந்த சம்பவத்தில், பேனர் வைத்ததால்தான் என் மகள் இறந்துவிட்டாள். அரசாங்கம் வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. என் மகளுக்கு நீதி கிடைக்குமா?,''என கண்ணீருடன் கேள்வி எழுப்புகிறார் சுபஸ்ரீயின் தந்தை ரவி.

தெற்காசியாவின் உயரமான கோபுரம் திறந்து வைக்கப்பட்டது

பட மூலாதாரம், Facebook
தெற்காசியாவின் உயரமான கோபுரம் என்ற பெருமையை கொண்ட தாமரை கோபுரம் (லோட்டர்ஸ் டவர்) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
கொழும்பு மத்திய பகுதியில் தாமரை கோபுர நிர்மாணப் பணிகள் 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
சுமார் 7 வருடங்களில் இது தெற்காசியாவிலேயே பெரிய கோபுரமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த தாமரை கோபுர நிர்மாணத்திற்காக 104.5 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஷமால் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

காஷ்மீரின் சர்ச்சைக்குரிய மரணங்கள்

பட மூலாதாரம், Getty Images
ஆறு வாரங்களுக்கு முன் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு ஏற்பட்டுள்ள எண்ணற்ற உயிரிழப்புகள் குறித்தும், அதன் காரணங்கள் குறித்தும் பல முரண்பட்ட தகவல்கள் உள்ளன இந்த சூழலில் பிபிசி செய்தியாளர் யோகிதா லிமாயி ஸ்ரீநகரில் நடைபெற்ற சில சம்பவங்கள் தொடர்பாகப் பார்வையிட்டார்.
இந்திய துணை ராணுவப் படை சுட்டது
ஆகஸ்டு 6ஆம் தேதி 17 வயதான அஸ்ரர் கானுக்கு, நான்கு வாரங்களில் தனது உயிரைப் பறித்துக் கொண்ட காயம் ஏற்பட்டபோது அவர், தனது வீட்டுக்கு வெளியே தெருவில் நின்று கொண்டிருந்தார்.
கெட்டிக்கார மாணவனாகவும், விளையாட்டில் ஆர்வமானவனாகவும், அறியப்பட்ட அஸ்ரர் கானின் உயிரிழப்பு ஏற்கனவே பதற்றத்திலிருந்த சூழலில், மீண்டும் ஒரு சர்ச்சையாக மாறியுள்ளது.
அஸ்ரர் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, நெற்றியில் புகைக்குண்டின் சிலிண்டரும் உலோக பெல்லட் குண்டுகளும் அஸ்ரர் கானின் நெற்றியில் பட்டதாகக் குற்றம் சுமத்துகிறார் ஃபிர்தூஸ் அகமது கான். அஸ்ரருடன் விளையாடிக் கொண்டிருந்த அவனின் நண்பன் இந்திய துணை ராணுவப் படை அவனை சுட்டதாக தெரிவிக்கிறான்.

"நான் ஏன் அரசியலுக்கு வரமாட்டேன்?"

பட மூலாதாரம், TWITTER
அரசியல் செயல்பாடுகளில் இறங்கும் எண்ணம் தனக்கு கிடையவே கிடையாது என நடிகர் சித்தார்த் பிபிசி தமிழுக்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் நடிகர் சித்தார்த் நடித்த 'சிவப்பு, மஞ்சள், பச்சை' திரைப்படம் வெளியானது. இந்த சூழலில் பிபிசி தமிழ் செய்தியாளர் ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன் சித்தார்த்தை சந்தித்தார்.
இந்த நேர்காணலில் இப்போதைய அரசியல், கருத்துச் சுதந்திரம், போலி செய்திகள் என சினிமாவை கடந்து பல விஷயங்களை வெளிப்படையாகப் பேசியுள்ளார் சித்தார்த்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












