"என் குடும்பத்தினர் 5 பேரை கொலை செய்தேன்" - ஒப்புக்கொண்ட 14 வயது சிறுவன் மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், michaeljung
அமெரிக்காவின் அலபாமாவில் தனது குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேரை தாம் கொலை செய்ததாக 14 வயது சிறுவர் ஒருவர் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளார்.
அந்த சிறுவனின் தந்தை, அவரது இரண்டாவது மனைவி மற்றும் அவரது சகோதரர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.
அச்சிறுவன் அவனது குடும்பத்தை கொலை செய்ததற்கான காரணம் குறித்து இன்னும் தெரிய வரவில்லை.
மேலும், அவரது கையில் துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

கர்நாடக காங்கிரஸ் முக்கியத் தலைவர் டி.கே. சிவக்குமார் கைது

பட மூலாதாரம், Getty Images
முன்னாள் அமைச்சரும் கர்நாடக காங்கிரசின் முக்கியத் தலைவருமான டி.கே.சிவக்குமார் அமலாக்கப் பிரிவினால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்துள்ள நிலையில், கைது நடவடிக்கைக்கு உள்ளாகும் அடுத்த காங்கிரஸ் தலைவராகியுள்ளார் சிவக்குமார்.
பணப்பரிவர்த்தனை முறைகேடு வழக்கு ஒன்றில் இந்த கைது நடந்திருக்கிறது.

டிமென்ஷியா என்ற மறதி நோய்

பட மூலாதாரம், Getty Images
'டிமென்ஷியா' எனப்படும் மறதி நோய் பாதிக்கப்பட்ட நபரின் மூளையின் செயற்பாடு படிப்படியாக பாதிக்கப்பட்டு, அவரது நினைவாற்றல், சிந்திக்கும் திறன், உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் திறன், உடலின் செயல்பாடு என்று எல்லாமே பாதிக்கப்படும்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர் அனைத்து தேவைகளுக்கும் மற்றவரின் உதவியை நாடவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்.
டிமென்ஷியாவை முழுமையாக குணப்படுத்தக் கூடிய மருந்து எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
வரும் காலங்களில் உலகம் சந்திக்கப்போகும் மிகப்பெரும் மருத்துவ மற்றும் சமூக நெருக்கடியாக டிமென்ஷியா என்கிற இந்த நோய் உருவாகியிருப்பதாக அல்சைமர்ஸ் நோய்க்கான உலக அமைப்பு எச்சரித்துள்ளது.

கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மீதான புகார் - பிசிசிஐ என்ன சொல்கிறது?

பட மூலாதாரம், Getty Images
இந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு எதிராக அவர் மனைவி கொடுத்த புகாரில் அவருக்கு எதிராக கைது வாரண்ட் தரப்பட்டுள்ளது.
அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
பிற பெண்களோடு தொடர்பு, உடல் மற்றும் மனரீதியிலான துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவரது மனைவி ஹாசின் ஜஹான் வைத்ததை அடுத்து ஷமி மீது 2018 மார்ச் மாதம் வழக்குத் தொடரப்பட்டது.

சஹ்ரான் தொடர்பாக 3 ஆண்டுகளாக பாதுகாப்பு பிரிவிடம் சமர்ப்பிக்கப்பட்ட 97 அறிக்கைகள்

2016ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி வரை தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட குழுவினர் தொடர்பிலான 97 அறிக்கைகள் அரச புலனாய்வு அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜய ஜயவர்தன உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கைகள் அனைத்தும் போலிஸ் மாஅதிபர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு இன்று கொண்டு வந்தார்.
ஈஸ்டர் தாக்குதலை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க தவறியமையின் ஊடாக அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணைகள் 7 நீதியரசர்கள் அடங்கிய குழு முன்னிலையில் உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












