இடைநீக்கம் செய்யப்படவுள்ள நாடாளுமன்றம்: என்ன நடக்கிறது பிரிட்டனில்?

இடைநீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்றம்: என்ன நடக்கிறது பிரிட்டனில்?

பிரிட்டனின் புதிய பிரதமர் போரிஸ் ஜான்சன், நேற்று (புதன்கிழமை) பிரிட்டன் நாடாளுமன்றத்தை இடைநீக்கம் செய்யும் முன்மொழிவை வெளியிட்டார். இதன் மூலம், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேறும் பிரெக்ஸிட் செயல்முறையை விவாதிக்க மிகக் குறைந்த நேரமே அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கும்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு கடைசி நாள் அக்டோபர் 31.

செப்டம்பர் 3-ம் தேதி கூடும் நாடாளுமன்றம் பிறகு இடைநீக்கம் செய்யப்படும். ஆனால், செப்டம்பர் 10க்குள் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர எம்.பி.க்களுக்கு ஒரு வாய்ப்பு உண்டு.

அந்த முயற்சி தோற்று பிரதமர் திட்டமிட்டபடி நாடாளுமன்றம் இடைநீக்கம் செய்யப்பட்டால்,

அக்டோபர் 14ஆம் தேதி பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் வரை நாடாளுமன்றம் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும்.

அதாவது ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான காலக்கெடுவுக்கு சுமார் இரண்டரை வாரம் முன்பாகதான் நாடாளுமன்றம் கூடும். ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதை தடுப்பதற்கு இந்த காலக்கெடு போதுமா என்பதே இப்போது கேள்வி.

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதை எதிர்ப்பவர்கள் மட்டுமின்றி, ஆதரிப்பவர்களும் கூட அரசின் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

புதிய திட்டங்களுடன், புதிய நாடாளுமன்ற கூட்டத் தொடரை அக்டோபர் 14ஆம் தேதியன்று தொடங்குவதற்கு பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜான்சன் விரும்புகிறார்.

நாடாளுமன்றம் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதால், எவ்வித உடன்படிக்கையும் இன்றி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதை தடுப்பதற்குரிய தேவையான நேரம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்காமல் போகும் நிலை உருவாகியுள்ளது.

நடந்தது என்ன?

ஒருவகையில் பார்த்தால், இலையுதிர் காலத்தின்போது பிரிட்டன் நாடாளுமன்றம் சுமார் ஐந்து வாரங்களுக்கு செயல்படாது இருப்பது ஒரு சாதாரண வருடாந்திர நிகழ்வுதான். ஆனால், பிரெக்ஸிட் விவகாரத்தை ஒட்டி நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இதுபோன்ற நடவடிக்கையை போரிஸ் ஜான்சன் முன்னெடுத்தது விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு தொடக்கத்தில் 2019ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனினும், இருதரப்பினரும் உடன்படிக்கை எட்டுவதற்கு மேற்கொண்ட மூன்று முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்ததால், அக்டோபர் 31ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.

போரிஸ் ஜான்சன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, போரிஸ் ஜான்சன்

தொடக்கக் காலத்திலிருந்தே பிரெக்ஸிட்டிற்கு ஆதரவு தெரிவித்து வரும் போரிஸ் ஜான்சன், பிரிட்டனின் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, உடன்படிக்கை ஏற்படுகிறதோ, இல்லையோ ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது உறுதி என்று அறிவித்திருந்தார்.

இதில் பிரச்சனை என்னவென்றால், எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்தவர்களே உடன்படிக்கை ஏதுமின்றி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதை விரும்பவில்லை என்பதுதான்.

உடன்படிக்கை இல்லாத பிரெக்ஸிட்டை நிராகரிக்கும் சட்டத்தை கொண்டு வருவதாக ஒரு தரப்பினர் போரிஸ் ஜான்சனை அச்சுறுத்தியுள்ளனர். அது தோல்வியுற்றால், பிரிட்டன் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கும் அழைப்பு விடுக்கப்படலாம்.

நாடாளுமன்றத்தை இடைநீக்கம் செய்தது சட்டப்படி சரியா?

ஆம். ஒரு நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்து, அடுத்த கூட்டத்தொடர் தொடங்குவதற்கு இடைப்பட்ட காலம் வரை இதுபோன்று இடைநீக்கம் செய்யப்படுவது இயல்பான ஒன்றே. ஆனால், தற்போது அசாதாரணமான சூழ்நிலை நிலவும் நேரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போரிஸ் ஜான்சன் தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கை சட்டத்துக்கு எதிரானது இல்லை என்பதால், இதை எதிர்த்து நடவடிக்கை எடுப்பது கடினமான ஒன்றாக இருக்கும்.

பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்போது இரண்டு வழிகள் மட்டுமே உள்ளதாக கருதப்படுகிறது. ஒன்று, அரசின் நாடாளுமன்ற இடைநீக்க நடவடிக்கைக்கு இசைவு கொடுப்பது; இரண்டு, அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்து, பொதுத் தேர்தலை நடத்துவது.

இது அரசமைப்புச் சட்ட விதிமீறல் என்று ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் அவைத்தலைவர் ஜான் பெர்கோ தெரிவித்துள்ளார்.

மரபுரீதியாக அரசியல் ரீதியான அறிவிப்புகள் குறித்து அவைத்தலைவர் விமர்சனங்கள் செய்வதில்லை என்றபோதும் இத்தகைய கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

"என்னவிதமான மேற்பூச்சுடன் வந்தாலும், நாடாளுமன்றத்தை இடைநீக்கம் செய்வதன் காரணம், இது பற்றி எம்.பி.க்கள் விவாதிக்காமல் தடுப்பதும், நாட்டின் போக்கை வடிவமைப்பதில் நாடாளுமன்றத்துக்குள்ள கடமையைத் தடுப்பதுமே ஆகும்" ஜான் பெர்கோ தெரிவித்துள்ளார்.

அரசியின் நிலைப்பாடு என்ன?

இடைநீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்றம்: என்ன நடக்கிறது பிரிட்டனில்?

பட மூலாதாரம், Getty Images

நாடாளுமன்ற நடவடிக்கையில் தலையிடுவதற்கு அரசிக்கு அதிகாரம் இருப்பதால்தான், போரிஸ் ஜான்சன் தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தை இடைநீக்கம் செய்வது தொடர்பாக அவரிடம் முன்னனுமதி கேட்டிருந்தது.

இது பொதுவான நடவடிக்கை; அரசி எப்போதும் தன்னை அரசியலிலிருந்து விலக்கி வைத்திருப்பார். ஒருவேளை அவர் மறுப்புத் தெரிவித்திருந்தால், அது மிகவும் அரிதான ஒன்றாக இருந்திருக்கும்.

ஆனால், அவர் மறுப்பேதும் தெரிவிக்கவில்லை.

அடுத்தது என்ன?

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3ஆம் தேதி கூடும் நாடாளுமன்றம் பிறகு இடைநீக்கம் செய்யப்படும்.

அதன் பிறகு, திட்டமிட்டப்பட்டபடி மீண்டும் அக்டோபர் 14ஆம் தேதி கூடும் நாடாளுமன்றத்தில் அரசி உரையாற்றுவார் என்றும், அப்போது தன்னுடைய பல வியப்பளிக்கும் திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளிவரும் என்று போரிஸ் ஜான்சன் கூறுகிறார்.

ஒருவேளை செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் பிரிட்டன் அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு அது நிறைவேற்றப்படும் பட்சத்தில், அக்டோபர் மாதம் பிரிட்டனில் பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு வாய்ப்புள்ளது.

பொதுத் தேர்தல் நடந்தாலும், பிரெக்ஸிட் நிறைவேறுமா?

தெரீசா மே

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, தெரீசா மே

அது சூழ்நிலையை பொறுத்தது. ஒருவேளை, பொதுத் தேர்தல் நடந்து அதில் மீண்டும் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றிபெறும் பட்சத்தில் பிரெக்ஸிட் திட்டமிட்டபடி நிறைவேற்றப்படும். தற்போதைய கருத்துக் கணிப்புகளை பார்க்கும்போது, பிரிட்டனின் புதிய பிரதமரான போரிஸ் ஜான்சனின் அணிக்கு பெருளவிலான ஆதரவு (31 சதவீதம்) உள்ளது.

எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கு அதைவிட 10 சதவீதம் குறைவாக, அதாவது 21 சதவீதம் மட்டுமே ஆதரவு உள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சியை தவிர்த்து பெரும்பாலான கட்சிகள் உடன்படிக்கை இல்லாமல் பிரெக்ஸிட்டை நிறைவேற்றுவதற்கோ அல்லது ஒட்டுமொத்தமாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கோ எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதேபோன்று பிரிட்டன் மக்களின் மனநிலையும் வேறுபட்டு காணப்படுவதால், பொதுத் தேர்தல் நடைபெறும் பட்சத்தில் அதன் முடிவு என்னவாக இருக்கும் என்பதை கணிப்பது அவ்வளவு சாதாரணமல்ல.

2017ஆம் ஆண்டு பிரெக்ஸிட்டை நிறைவேற்றும் நோக்கத்தோடு, முன்கூட்டியே தேர்தலை சந்தித்த பிரிட்டனின் முன்னாள் பிரதமர் தெரீசா மே, தனக்கு ஏற்கனவே இருந்த பலத்தை இழந்து, அயர்லாந்தை சேர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியை அமைக்கும் நிலை ஏற்பட்டது நினைவுகூரத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: