அமேசான் காட்டுத் தீயை அணைக்க ஆயுதப் படைகளை அனுப்பும் பிரேசில் மற்றும் பிற செய்திகள்

அமேசான் காடுகளில் வரலாற்றில் இதற்கு முன் இல்லாத அளவுக்கு பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சிக்கு உதவ ஆயுதப் படைகளை அனுப்ப பிரேசில் அதிபர் போல் சாயர் போல்சனாரூ உத்தரவிட்டுள்ளார்.

இயற்கை வளங்கள் உள்ள பகுதிகள், பூர்வகுடிகள் வாழும் இடங்கள், குடியிருப்புப் பகுதிகளை ஒட்டியுள்ள காடுகள் ஆகிய இடங்களுக்கு படையினர் அனுப்பப்படுவர்.

அமேசான் தீ கட்டுப்படுத்தப்படும் வரை பிரேசில் உடனான வர்த்தக ஒப்பந்தத்தை அமலாக்கப் போவதில்லை என்று பிரான்ஸ் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் கூறியுள்ளன.

பிரேசிலில் இருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்யப்படுவதை தடை செய்வது குறித்து பரிசீலிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை பின்லாந்து கோரியுள்ளது.

காட்டுத் தீயை அணைக்க சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் பிரேசிலின் பல்வேறு நகரங்களிலும் வெள்ளியன்று போராட்டம் நடத்தினர்

அரபு நாடுகளில் வாழும் இந்துக்களை தாக்க தூண்டும் ஐ.எஸ் அமைப்பு

வளைகுடா நாடுகளில் வாழும் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்கு இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐஎஸ் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இந்தியாவின் நிர்வாகத்துக்கு உட்பட்ட ஜம்மு & காஷ்மீரின் தன்னாட்சி உரிமையை பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான இந்திய அரசு நீக்கியதே இதற்கு பின்புலமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஐ.எஸ்ஸின் முதன்மை வார இதழான அல்-நாபாவின் தலையங்கத்தில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடித் தகவல் பரிமாற்ற செயலியான டெலிகிராமில் உள்ள ஐ.எஸ் அமைப்பின் சேனல்கள் வாயிலாக ஆகஸ்டு 22ஆம் தேதியிடப்பட்ட இந்த இதழ் பகிரப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் சமீபத்திய வளைகுடா நாடுகளின் சுற்றுப்பயணத்தை இது மேற்கோள் காட்டியது.

தண்டனையில் இருந்து தப்பிய பெற்றோர்

ஓர் ஆஸ்திரேலிய தம்பதியினர் தங்களின் பெண் குழந்தைக்கு வீகன் முறையில் உணவூட்டி உள்ளனர். இது அந்த குழந்தைக்கு கடும் ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தியதால் அதற்காக சிறை தண்டனை பெற்றுள்ளனர்.

ஆனால், தண்டனையை சிறையில் கழிப்பதில் இருந்து அந்த தம்பதியினர் தப்பித்துள்ளனர்.

30 வயதுகளில் இருக்கும் இந்த தம்பதிக்கு வழங்கப்பட்ட 18 மாத சிறை தண்டனைக்கு பதிலாக இருவரும் 300 மணிநேர சமூக சேவையாக நிறைவேற்றப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

"அமெரிக்கா, சீனாவைவிட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகம்"

சமீபத்தில் இந்தியாவின் சில பெருநிறுவனங்கள் அறிவித்த ஆட்குறைப்பு நடவடிக்கையால் உண்டான வேலை இழப்பு, உற்பத்தித் துறையில் உண்டாகியுள்ள சரிவு உள்ளிட்டவற்றால் இந்தியப் பொருளாதாரம் சவாலைச் சந்தித்து வரும் நிலையில், பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்க இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

சர்வதேச அளவில் என்ன நடக்கிறது என்பதை முதலில் தெரிவிக்க விரும்புகிறேன் என்று கூறிய நிர்மலா சீதாராமன், சர்வதேச பொருளாதார வளர்ச்சி ஏற்கனவே கணிக்கப்பட்டுள்ள 3.2% எனும் அளவைவிட குறைக்கபடலாம் என்று கூறியுள்ளார்.

இந்தியாவின் வளர்ச்சி சர்வதேச வளர்ச்சி விகிதத்தைவிட அதிகமாக இருப்பதாக கூறிய அவர், அமெரிக்கா, ஜெர்மனி போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளிலும் பொருளாதார நுகர்வு குறைந்துள்ளதாகவும் கூறினார்.

இலங்கையில் அவசர காலச் சட்டம் நீக்கம்

இலங்கையில் கடந்த நான்கு மாதங்களாக அமல்படுத்தப்பட்டிருந்த அவசர காலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவிக்கின்றது.

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி இரவு முதல் அவசர கால சட்டம் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமல்படுத்தியிருந்தார்.

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் இரண்டாவது சரத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமையவே அவசர கால அமலாக்கம் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: