You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'வீகன்' உணவால் அவதிப்பட்ட குழந்தை - தண்டனையில் இருந்து தப்பிய பெற்றோர்
ஓர் ஆஸ்திரேலிய தம்பதியினர் தங்களின் பெண் குழந்தைக்கு வீகன் முறையில் உணவூட்டி உள்ளனர். இது அந்த குழந்தைக்கு கடும் ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தியதால் அதற்காக சிறை தண்டனை பெற்றுள்ளனர்.
ஆனால், சிறை தண்டனையை கழிப்பதில் இருந்து அந்த தம்பதியினர் தப்பித்துள்ளனர்.
30 வயதுகளில் இருக்கும் இந்த தம்பதிக்கு வழங்கப்பட்ட 18 மாத சிறை தண்டனைக்கு பதிலாக இருவரும் 300 மணிநேர சமூக சேவையாக நிறைவேற்றப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது,
இப்போது மூன்று வயதாகும் இந்த பெண் குழந்தை 19 மாதக் குழந்தையாக இருந்தபோது, ஊட்டச்சத்து குறைபாட்டால் மூன்று மாதக் குழந்தை போல தோன்றியது.
ஓட்ஸ், உருளைக்கிழக்கு, டோஸ்ட், அரிசி மற்றும் வேறு சில உணவுகள் இந்த குழந்தைக்கு ஊட்டப்பட்டன.
கடந்த ஆண்டு மருத்துவ சிகிச்சை செய்யப்பட்டபோது, இந்த குழந்தைக்கு பல் முளைக்கவில்லை.
வியாழக்கிழமை சிட்னியின் டவுணிங் மைய நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கியபோது, இந்த குழந்தையின் "தேவைக்கு முற்றிலும் குறைவான" உணவை வழங்கியுள்ளதாக பெற்றோரை குற்றஞ்சாட்டினார்.
சட்ட நடவடிக்கை தொடங்கிய பின்னர், 2018ம் ஆண்டு மார்ச் மாதம் அவசர மருத்துவ சேவையை தாய் அழைத்தபோது, மருத்துவ சிகிச்சைக்கு இந்த குழந்தை அழைத்துச் செல்லப்பட்டது.
இந்த குழந்தைக்கு கடும் ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது அப்போதுதான் கண்டறியப்பட்டது.
நீல நிற உதடுகள், ரத்தத்தில் குறைவான சர்க்கரை அளவு மற்றும் மிகவும் மெல்லிய தசையோடு அந்த குழந்தை இருந்துள்ளது.
பிற இரண்டு குழந்தைகளை எந்த பிரச்சனையும் இல்லாமல் வளர்த்துள்ள இந்த தம்பதி, அனுபவமோ, கல்வியறிவோ இல்லாதவர்கள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த குழந்தை பிற குழந்தைகளைவிட ஊட்டச்சத்தில் மிகவும் குறைந்து காணப்பட்டதாக மருத்துவ சிகிச்சையின்போது இந்த குழந்தையை கவனித்து கொண்ட பராமரிப்பாளர் தெரிவித்தார்.
"அவளால் உட்கார முடியவில்லை. சொற்களை உச்சரிக்க முடியவில்லை, உணவை அவளாகவே எடுத்து உண்ண முடியவில்லை, பொம்மைகளோடு விளையாட முடியவில்லை. தவழ்ந்து செல்ல முடியவில்லை," என்று இந்த பராமரிப்பாளர் மே மாதம் தெரிவித்தார்.
ஊட்டச்சத்து குறைபாட்டால்தான் தங்கள் குழந்தைக்கு இந்த நிலை ஏற்பட்டது என்பதை தெடக்கத்தில் பெற்றோரால் ஒப்புக்கொள்ள முடியவில்லை என்று நீதிபதி ஹக்ஜெட் தெரிவித்தார்.
இந்த குழந்தையின் தாய் அந்நேரத்தில் மன அழுத்தத்தால் துன்புற்றதாகவும், வீகன் உணவு முறை உள்பட தனது நம்பிக்கைகளில் மிகவும் ஊன்றியவராக மாறிவிட்டதாகவும் நீதிபதி தெரிவித்தார்.
மகளின் நிலைமையை சரிசெய்ய இந்த குழந்தையின் தந்தை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என நீதிபதி குறைகூறியுள்ளார்.
போதிய முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை தங்களின் குழந்தைகளுக்கு கொடுப்பதை உறுதி செய்யும் பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது என்று நீதிபதி கூறியதாக ஏபிசி செய்தி நிறுவனம் மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் நீதிமன்றத்தில் ஆஜரான இந்த தம்பதி, தங்களின் குழந்தைக்கு போதிய ஊட்டச்சத்து மிக்க உணவை வழங்க தவறிவிட்டதை ஒப்புக்கொண்டனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்