You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இரான் அணுஆயுத ஒப்பந்தம்: அதிகரிக்கும் வளைகுடா பதற்றத்துக்கு மத்தியில் முக்கிய பேச்சுவார்த்தை
வளைகுடா பகுதியில் அண்மையில் எண்ணெய் டாங்கர்கள் கைப்பற்றப்படுவது தொடர்பாக நிலவும் பதற்றத்துக்கு மத்தியில் இரான் அணுஆயுத ஒப்பந்தத்தை காப்பாற்ற பேச்சுவார்த்தைகள் நடந்தன.
வியன்னாவில் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா மற்றும் சீனா நாட்டு அதிகாரிகளை சந்தித்தபிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஒரு மூத்த இரான் நாட்டு அதிகாரி, பேச்சுவார்த்தை நடந்த சூழல் 'மிகவும் ஆக்கப்பூர்வமாக இருந்தது' என்று குறிப்பிட்டார்.
2015 இரான் ஒப்பந்தத்தை கடந்த ஆண்டு திரும்பப்பெற்ற அமெரிக்கா மீண்டும் இரான் மீது பொருளாதார தடைகளை விதித்தபிறகு இரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மோசமடைய தொடங்கியது.
தங்களுக்கு சாதகமாக இல்லை என்று கூறி, டொனால்ட் டிரம்ப் அதிபரானபின், இரான் அணு ஒப்பந்தத்தில் இருந்து 2018ஆம் ஆண்டு அமெரிக்கா விலகியது. அதனை தொடர்ந்து இரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்தது அமெரிக்கா.
அண்மையில் வளைகுடா பகுதியில் நடந்துவரும் சம்பவங்களால் தாங்கள் மிகுந்த கவலை அடைந்திருப்பதாக பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாட்டு அதிகாரிகள் இம்மாத தொடக்கத்தில் தெரிவித்தனர்.
இவர்கள் வெளியிட்ட கூட்டு அறிக்கையில், ''மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கியவுடன், வளைகுடா பிராந்தியத்தில் நிலவிவரும் பதற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு வழியை உருவாக்குவதற்கும் இது சரியான நேரம்'' என்று குறிப்பிடப்பட்டது.
வளைகுடாவில் பதற்றத்துக்கு என்ன காரணம்?
மேலும் இந்த மாத துவக்கத்தில் இரான் அணுஆயுத ஒப்பந்தத்தை காக்க வேண்டும் என்ற எண்ணம் இரானுக்கு உள்ளதாக குறிப்பிட்ட அந்நாட்டின் துணை வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, தங்கள் கடமைகளை சரியாக செய்ய தவறிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளே இதற்கு காரணம் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடந்த மே மாதம், இரான் மீதான தடைகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் வலுப்படுத்தினார். குறிப்பாக எண்ணெய் வர்த்தகத்தில். அதன்பிறகு அணு ஆயுத ஒப்பந்தத்தின் படி ஏற்பட்டுள்ள சில விதிகளை தகர்த்துக் கொள்வதாக இரான் தெரிவித்தது.
அதனை அடுத்து சில தடைகளை விதித்தது அமெரிக்கா.
அதன் பின் அமெரிக்க ட்ரோனை இரான் சுட்டுவீழ்த்தியது. அதனை அடுத்து, ஹார்மோஸ் ஜலசந்தி மேல் பறந்த இரானின் ஆளில்லா விமானத்தை அமெரிக்க கடற்படை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரித்தார்.
ஆனால், தங்களது ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படும் செய்தி குறித்து எங்களிடம் எந்த தகவலும் இல்லை என்று இரான் கூறியது.
மேலும் அண்மையில் இரான் சட்டவிரோதமாக தடுத்து வைத்துள்ள பிரிட்டன் கொடி தாங்கிய எண்ணெய் கப்பலை விடுவிக்க வேண்டும் என அந்நாடு கூறியது. இதற்கு எதிர்மறையான கருத்துக்கள் இரான் தரப்பில் இருந்து வர வளைகுடா பகுதியில் பதற்றம் மேலும் அதிகரித்தது.
இந்நிலையில் தற்போது நடந்த பேச்சுவார்த்தை மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமான விளைவுகளை ஏற்படுத்தியதா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்