பிரேசில் காட்டில் பழங்குடியின தலைவர் கொலை - தங்க சுரங்கத்திற்காக விரட்டப்படும் பூர்வகுடிகள் மற்றும் பிற செய்திகள்

வடக்கு பிரேசிலில் உள்ள தொலைதூர அமேசான் காடு ஒன்றில் பயங்கர ஆயுதங்கள் ஏந்திய தங்கச் சுரங்க பணியாளர்கள், பழங்குடியின தலைவர்களில் ஒருவரை கொன்றுவிட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பழங்குடியினர் தங்கம் நிறைந்த அந்த பகுதியை மீண்டும் கைப்பற்ற முயன்றால், வன்முறை வெடிக்கும் என்ற அச்சத்தில் அமாபா மாநிலத்தில் உள்ள அந்த கிராம மக்கள் ஊரைவிட்டு சென்று வருகின்றனர்.

அந்த பகுதியில் கூடுதலாக போலீஸார் காவலில் பணியமர்த்தப்பட்டனர்.

பிரேசிலில் அதிதீவிர வலதுசாரி கொள்கைக் கொண்ட போல்சானாரோ அதிபராக பதியேற்றப் பிறகு காப்பு காடுகளுக்கு எதிரான போக்கை கடைபிடித்து வருவதால் அமேசான் பகுதியில் பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

காப்பு காடுகளில் பல பகுதிகளில் சுரங்கப் பணிகள் நடத்தப்படும் என அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.

"அந்த பகுதியில் வாழும் பழங்குடியின மக்களின் எண்ணிக்கைக்கு அந்த காட்டுப் பகுதிகள் மிகப் பெரியது." என்று போல்சனாரோ தெரிவித்துள்ளார்.

ஆனால் போல்சனாரோ சட்டவிரோத சுரங்க பணிகளை ஆதரிப்பதாகவும், காப்புக் காடுகளை ஆக்கிரமிக்க நினைப்பதாகவும் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

வாஜாபி இன மக்கள் அதிகம் வாழும் யவிடோ என்னும் அந்த கிராமத்தில் பயங்கர ஆயுதங்களுடன் 10-15 பேர் கொண்ட குழு ஒன்று நுழைந்து கிராம மக்களை விரட்டினர். எனவே அங்கு பதற்றநிலை அதிகரித்தது என பிரேசிலின் பழங்குடியினர்களுக்கான உரிமை முகமை தெரிவித்துள்ளது.

பழங்குடியின தலைவர்களை கொல்வது பிரேசிலில் ஒர் அரிதான நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.

முன்னதாக சனிக்கிழமையன்று பேசிய போல்சனாரோ, "பழங்குடியின மக்கள் வாழும் சில பகுதிகளில் தூதுக்கள் நிறைந்துள்ளது. எனவே இந்த பகுதியை கூட்டணிகள் அமைத்துக் கொண்டு ஆராய விரும்புகிறேன்." என போர்சுகீஸ் செய்தித்தாள் ஒன்றிடம் தெரிவித்தார்.

"அமெரிக்காவுடன் நெருக்கமாக வேண்டும் என நான் முடிவெடுத்ததற்கு அதுதான் காரணம். அமெரிக்க தூதரகத்தில் ஒரு நம்பகமான நபரை நியமிக்க வேண்டும் என்றும் விரும்புகிறேன்." என அவர் மேலும் தெரிவித்தார்.

இதுவரை அமாபா நிகழ்வு குறித்து போல்சானாரோ எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

காஷ்மீரில் குவிக்கப்படும் 100 கம்பெனி துணை ராணுவப் படையினர்

இந்திய ஆளுகையின் கீழ் உள்ள காஷ்மீரில் 100 கம்பெனி துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளது, அங்கு வாழும் மக்களிடையே பதற்றத்தைத் தூண்டியுள்ளது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, காஷ்மீர் மக்களுக்கு அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமைகள், தனி அரசியலமைப்பு ஆகியன குறித்த எதிர்மறை விவாதங்கள் தீவிரமாகியுள்ள சூழலில் படைகள் குவிக்கப்படுவதே இந்தப் பதற்றத்துக்கான காரணம்.

ஆனால், இது வழக்கமான நடைமுறைதான் என்கின்றனர் காவல் அதிகாரிகள். அச்சமடையத் தேவையில்லை என்கிறது மத்தியில் ஆளும் பாஜக.

மெஹபூபா முஃப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி - பாரதிய ஜனதா கூட்டணி அரசில் இருந்து 2018இல் பாஜக விலகியபின் அங்கு ஆளுநர் ஆட்சி அமலானது. பின்னர் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டது. குடியரசுத் தலைவர் ஆட்சியில் இருப்பதால் மத்திய அரசின் பிடி அங்கு அதிகமாக உள்ளது.

இலங்கையின் தென்பகுதிவரை பாய்ந்த வைகை, தாமிரபரணி நதிகள்

தமிழகத்தில் ஓடும் வைகை, தாமிரபரணி நதிகள் நீண்ட காலத்திற்கு முன்பு இலங்கையின் காலி நகரம் வரை பாய்ந்திருப்பதாக செயற்கைக்கோள் படங்களை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு கூறுகிறது. கடல் மட்ட உயர்வால் இந்த நதிகள் மூழ்கிவிட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ரிமோட் சென்சிங் துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள் சோமசுந்தரம் ராமசாமி மற்றும் ஜே. சரவணவேல் ஆகியோர் மேற்கொண்ட இது தொடர்பான ஆய்வின் முடிவுகள் 2019 ஜூன் 25ஆம் தேதியிட்ட Current Science இதழில் வெளியாகியிருக்கின்றன.

தென்தமிழகத்தில் பாயும் மற்றொரு நதியான தாமிரபரணி கடந்த காலத்தில் வைகையின் துணை நதியாக இருந்ததாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. தற்போதுள்ள இந்திய நிலப் பகுதிக்கு வெளியில் இந்த நதிகள் ஓடிய நிலப்பரப்புதான் தற்போதைய மன்னார் வளைகுடாப் பகுதியாக கடலில் மூழ்கியிருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இந்த ஆய்வை மேற்கொள்ள அவர்களுக்குத் தூண்டுதலாக இருந்தது எது?

தமிழக எல்லையோரங்களைக் காண்பிக்கும் செயற்கைக்கோள் படங்களைப் பார்த்தபோது, வைகை, தாமிரபரணி ஆகிய இரு நதிகளின் டெல்டாக்களும் திடீரென முடிந்ததைப்போல (abrupt truncation) இருந்ததையடுத்தே, இந்த நதிகளுக்கு நீட்சி இருக்குமா என்பதை மன்னார் வளைகுடா பகுதியில் தேட ஆரம்பித்தனர்.

கர்நாடகத்தில் பெரும்பான்மை பெறுகிறது பாஜக

கர்நாடக சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக பதவி விலகல் கடிதம் கொடுத்த, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் 14 சட்டமன்ற உறுப்பினர்களை சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதி நீக்கம் செய்துள்ள நிலையில், பி.எஸ்.எடியூரப்பா தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அங்கு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வழிவகை செய்யும் என்று கருதப்படுகிறது.

கட்சித் தாவல் தடை சட்டத்தின் சரத்துகளை 11 காங்கிரஸ் மற்றும் மூன்று மதச்சார்பற்ற ஜனதா தள உறுப்பினர்கள் மீறி விட்டதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் சார்ந்த கட்சிகள் சபாநாயகரிடம் அவர்களைத் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

சபாநாயகரின் முடிவுக்கு இந்த இரு கட்சிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன.

இந்த 14 பேருடன் சேர்த்து, குமாரசாமி தலைமையிலான அரசுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியபின் இதுவரை தகுதிநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது.

2023இல் இந்த சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடியும்வரை அவர்களால் தேர்தலில் போட்டியிட முடியாது.

கார்கில் போரில் இந்தியாவின் பரிந்துரையில் உயர் விருது பெற்ற பாகிஸ்தான் ராணுவ வீரர்

எதிரி நாட்டு ராணுவ சிப்பாயின் துணிச்சலையும், வீரத்தையும் மதித்து, அதை எதிரி நாட்டிற்கு தெரிவிப்பதும், அதன் அடிப்படையில் விருது கொடுப்பதும் பொதுவாக யாருமே நினைத்துக்கூட பார்க்க முடியாத அரிய நிகழ்வு.

1999 ஆம் ஆண்டு கார்கில் போரில் இந்த அதிசயம் நடந்தது, டைகர் ஹில்லில், பாகிஸ்தான் ராணுவத்தின் கேப்டன் கர்னல் ஷேர்கான் மிகவும் தைரியமாக போராடினார். இந்திய ராணுவத்தினருக்கு அவர் கடும் சவாலாக விளங்கினார் என்கிறார்.

இந்த போரை நினைவுகூறும், கமாண்டர் பிரிகேடியர் எம்.எஸ். பாஜ்வா, "இந்த சண்டை முடிந்ததும், நான் காயமடைந்திருந்தேன். நான் 1971 போரிலும் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால், ஒரு பாகிஸ்தான் அதிகாரி முன்னணியில் இருந்து தங்கள் படையை வழிநடத்துவதை நான் பார்த்ததேயில்லை. மற்றவர்கள் அனைவரும் குர்தா பைஜாமாக்களில் இருந்தபோது, இவர் மட்டுமே டிரக் சூட் அணிந்திருந்தார்."

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :