அமெரிக்காவில் வீசப்போகும் வெப்ப அலை: எச்சரிக்கும் வானிலை ஆய்வாளர்கள் மற்றும் பிற செய்திகள்

வெப்பநிலை

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்காவின் பெரும்பாலான பகுதியில் மிகக் கடுமையான வெப்பமிகுந்த வானிலை நிலவ ஆரம்பிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதே சமயம், இந்த வார இறுதியில் வெப்பம் மிக அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் முக்கிய நகரங்களான நியூயார்க், வாஷிங்டன், கிழக்கு கடற்கரையில் இருக்கும் போஸ்டன் மற்றும் மத்திய மேற்கு பகுதிகளில் வசிக்கும் 200 மில்லியன் மக்கள் வெப்ப அலையால் பாதிக்கப்படலாம்.

சில இடங்களில், 38 டிகிரி செல்சியஸுக்கு நெருக்கமாகவோ அல்லது அதைவிட அதிகமாகவோ வெப்பம் பதிவாகலாம். அமெரிக்கா மட்டுமின்றி, கனடாவின் சில பகுதிகளும் வெப்ப அலையால் தாக்கப்பட உள்ளது.

சமீப ஆண்டுகளில், அடிக்கடி நிகழும் வெப்ப அலையை காலநிலை மாற்றத்தோடு வல்லுநர்கள் ஒப்பிடுகின்றனர்.

புதிய தரவுகளின்படி, உலகளவில் பதிவான சராசரி வெப்பநிலை 16.4 செல்சியஸ் டிகிரியாக இருக்கிறது. மேலும், இந்த ஆண்டின் அதிக வெப்பம் ஜூன் மாதம் பதிவாகியுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், ஆர்க்டிக் பகுதியில் அமைந்திருக்கும் அமெரிக்கா மாகாணம் அலாஸ்காவில் அதிக வெப்ப நிலை பதிவாகியுள்ளது.

Presentational grey line

ஏரியா 51: வேற்றுகிரகவாசிகள் வசிக்கிறார்களா?

ஏரியா 51

அது ஒரு நகைச்சுவை போல தொடங்கியது. ஆனால் ஏரியா 51 அருகில் மக்கள் செல்லக் கூடாது என்று அமெரிக்க விமானப் படை கூறியுள்ளது. அமெரிக்காவில் நெவேடா மாகாணத்தில் உள்ள அதிகபட்ச ரகசிய இடமான ஏரியா 51ல் அத்துமீறி நுழைவதற்கான முகநூல் நிகழ்ச்சியில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து பத்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பதிலளிக்குமாறு கோரும் விண்ணப்பம் (ஆர்.எஸ்.வி.பி.) செய்திருந்தனர். அங்கு வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதாக சிலர் நம்புகின்றனர்.

``அமெரிக்கா மற்றும் அதன் சொத்துகளைப் பாதுகாக்க தாங்கள் தயாராக இருப்பதாக,'' வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையிடம் விமானப் படை பெண் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

``ஏரியா 51 என்பது அமெரிக்க விமானப் படையின் திறந்தவெளிப் பயிற்சி முகாம். அமெரிக்க ஆயுதப் படையினருக்குப் பயிற்சி அளிக்கும் பகுதிக்கு வர யாரும் முயற்சித்தால் அதை நாங்கள் தடுத்து நிறுத்துவோம்'' என்று பெண் செய்தித் தொடர்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Presentational grey line

அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவு உயிருக்கு உலை வைக்கும்

அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவு உயிருக்கு உலை வைக்கும்

பட மூலாதாரம், Getty Images

சிக்கன் துண்டுகள், ஐஸ்கிரீம், காலை உணவுக்கான தானியங்கள் போன்ற - அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளுக்கும் ஆயுள் குறைவதற்கும், ஆரோக்கியக் குறைபாட்டுக்கும் தொடர்பு உள்ளது என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இதுபோன்ற உணவுகள் சாப்பிடுவது அதிகரித்துள்ளதாக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பாதிப்பு ஏற்படுவதை நிரூபிக்கும் முழுமையான ஆதாரமாக அவர்களுடைய ஆய்வு இல்லை. ஆனால் அல்ட்ரா பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிகம் சாப்பிடுதலுக்கு இட்டுச் செல்கின்றன என்று கூறப்படும் ஆய்வுகள் நடைபெறும் சூழ்நிலையில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், இன்னும் ஆய்வு நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

Presentational grey line

கோயம்புத்தூர்: "ஏனுங்... உலகத்துல நியாயமான மனுஷங்க நீங்கதானுங்" - ஆய்வு சொல்கிறது

சித்தரிப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

சில ஆண்டுகளுக்கு முன்பு ஆய்வாளர்கள் ஒரு விநோதமான ஆய்வொன்றை நடத்தினார்கள். அதாவது எட்டு இந்திய நகரங்களில் உள்ள வங்கி, திரையரங்கம், உணவகம், காவல் நிலையம், அஞ்சலகம், மற்றும் நீதிமன்றம் உள்ளிட்ட பொது இடங்களில் 'மணி பர்ஸை' கீழே போட்டு அதை யார் உரியவர்களிடம் கொண்டு சேர்க்கிறார்கள் என்று பார்த்தார்கள்.

சில பர்ஸுகளில் 230 ரூபாய் பணம் இருந்திருக்கிறது. சில பர்ஸுகளில் பணம் ஏதும் இல்லை.

மக்கள் நாம் நினைத்து பார்ப்பதைவிட நேர்மையானவர்களாக இருந்திருப்பது இந்த ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. ஆம், பெரும்பாலனவர்கள் அந்த பர்ஸை அங்குள்ள காவலாளிகள் மற்றும் வரவேற்பு பகுதியில் இருக்கும் பிரதிநிதிகளிடம் கொண்டு சேர்த்திருக்கிறார்கள்.

காவலாளிகள், வரவேற்பாளர்கள் தங்களிடம் வந்து அந்த மணிபர்ஸை உரியவரிடம் தருகிறார்களா என்றும் ஆய்வு நடத்தியவர்கள் சோதித்து பார்த்து இருக்கிறார்கள்.

அகமதாபாத், பெங்களுரூ, கோவை, ஹைதராபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா, மும்பை மற்றும் டெல்லியில் இந்த ஆய்வை நடத்தி இருக்கிறார்கள்.

Presentational grey line

இலங்கையில் இந்து அடையாளங்களை அழிக்கும் முயற்சி நடக்கிறது: குற்றஞ்சாட்டும் தமிழர்கள்

இலங்கை

இலங்கையின் சில பகுதிகளிலுள்ள இந்து ஆலயங்களை பௌத்த மயமாக்கும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

இந்து ஆலயங்கள் மற்றும் இந்து வரலாற்றை கொண்ட சில பகுதிகளில் பௌத்த பிக்குகளினால் மேற்கொள்ளப்பட்ட சில அசம்பாவித சம்பவங்களை அடுத்து தமிழர்கள் இந்த குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

முல்லைத்தீவு - நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திலுள்ள நந்தி கொடிகள் சேதமாக்கப்பட்டது, திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று கிணறுகளை பௌத்த மயமாக்கல், கண்ணியாவின் விகாரையொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் மற்றும் நுவரெலியா - கோட்லோஜ் பகுதியிலுள்ள ஆலயமொன்றில் பௌத்த கொடியொன்றை பிக்குவொருவர் வலுக்கட்டாயமாக ஏற்றியது உள்ளிட்ட பல சம்பவங்கள் கடந்த சில தினங்களுக்குள் இடம்பெற்றுள்ளன.

Presentational grey line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :