You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்கா இரான் ட்ரோனை சுட்டு வீழ்த்தியது: டொனால்ட் டிரம்ப் - வளைகுடா பகுதியில் மீண்டும் பதற்றம்
ஹார்மோஸ் ஜலசந்தி மேல் பறந்த இரானின் ஆளில்லா விமானத்தை அமெரிக்க கடற்படை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரித்துள்ளார்.
வியாழக்கிழமையன்று ஹார்மோஸ் ஜலசந்தி பகுதியில் இருந்த அமெரிக்க கடற்படை கப்பலுக்கு மிக அருகே அதாவது கிட்டதட்ட 1000 யார்ட்கள் தொலைவில் இரானின் ஆளில்லா விமானம் பறந்து வந்ததால் அமெரிக்க தரப்பு தற்காப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
தனது ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படும் செய்தி குறித்து எங்களிடம் எந்த தகவலும் இல்லை என்று இரான் கூறியுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானத்தை இரான் சுட்டு வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
வளைகுடா பகுதியில் எண்ணெய்யை கடத்த முயன்றதாக ஒரு வெளிநாட்டு எண்ணெய் கப்பல் மற்றும் அதில் இருந்த 12 பணியாளர்களை தாங்கள் பிடித்து வைத்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமையன்று இரான் தெரிவித்தது.
உலகின் முக்கிய கப்பல்தளம் மற்றும் எண்ணெய்பிடிப்பு பகுதியான வளைகுடா பகுதியில், கடந்த மே மாதம் முதல் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக இரான் மீது அமெரிக்கா குற்றம்சாட்டிவந்தது.
இந்த அண்மைய சம்பவங்கள் வளைகுடா பகுதியில் மீண்டும் ராணுவ மோதல்கள் நடக்கலாம் என்ற அச்சத்தை அதிகரித்துள்ளது.
வெள்ளை மாளிகையில் வியாழன்று நடந்த தாக்குதல் பற்றி பேசிய டிரம்ப், ''ஹார்மோஸ் ஜலசந்தியில் இன்று நடந்த தாக்குதல் பற்றி அனைவருக்கும் விரிவாக நான் எடுத்துக்கூற விரும்புகிறேன். அமெரிக்க கப்பலின் பாதுகாப்பையும் அச்சறுத்தல் விளைவிப்பதுபோல் கிட்டதட்ட 1000 யார்ட்கள் தொலைவில் அந்த ஆளில்லா விமானம் பறந்தது'' என்று கூறினார்.
''இது கப்பலின் பாதுகாப்புக்கு அச்சறுத்தலாக உள்ளது என பலமுறை எடுத்துக்கூறியும் அந்த ஆளில்லா விமானம் விலகி செல்லவில்லை. அதனால் தற்காப்பு நடவடிக்கையாக அந்த ட்ரோன் உடனடியாக சுட்டு வீழ்த்தப்பட்டது'' என்று அவர் மேலும் விளக்கினார்.
கடந்த ஜூன் மாதத்தில் தனது நாட்டின் ஆளில்லா விமானத்தை இரான் சுட்டு வீழ்த்தியாக குற்றச்சாட்டிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அக்காலகட்டத்தில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இரான் மீது ராணுவ தாக்குதல் மேற்கொள்வதற்கு உத்தரவிட்டதாகவும், பின்பு உடனடியாக தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாகவும் முன்னதாக செய்திகள் வெளிவந்தன.
ஜூன் மாத தாக்குதல் பற்றி முன்னர் கருத்து தெரிவித்த டிரம்ப், எனினும், இது மனித தவறுகளால் நிகழ்ந்திருக்கலாம் என்று கூறினார். இரான் வேண்டுமென்றே செய்திருக்கும் என்பதை தன்னால் நம்ப முடியவில்லை என்று தெரிவித்தார்.
அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் இரானின் வான்வெளி எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக இரான் குற்றம்சாட்டியது. அது இரானிய எல்லைக்குள் குமோபாரக் அருகில் பறந்ததால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், இந்த நிகழ்வு அமெரிக்காவுக்கு ஒரு தெளிவான விவரத்தை சொல்லும் என நம்புவதாகவும் ஐஆர்ஜிசி கமாண்டர் மஜ்-ஜென் ஹுசைன் சலாமி கூறியதாக இரான் நாட்டு பத்திரிகை கூறியது.
ஆனால், இரானின் இந்த குற்றச்சாட்டை அப்போது அமெரிக்கா மறுத்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்