You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மேகன் ரெப்பினோ: கால்பந்து பெண்கள் உலகக் கோப்பை வென்ற அமெரிக்க அணித் தலைவருக்கு உள்நாட்டில் அவமதிப்பு ஏன்?
- எழுதியவர், அனாகா பதக்
- பதவி, பிபிசி மராத்தி
"இந்த பெண்கள் கரடுமுரடானவர்கள், மென்மையற்றவர்கள். இவர்களால் எந்தவொரு நிலைமையையும் தைரியமாக எதிர்கொள்ள முடியும். அவர்கள் வலிமையானவர்கள். சுதந்திரமாக சிரிக்க விரும்பும் இவர்களை யாரும் தடுத்துவிட முடியாது. சுருக்கமாக, எங்களது குழு மிகவும் சிறந்த ஒன்று."
அமெரிக்க பெண்கள் கால்பந்து அணியின் தலைவர் மேகன் ரெப்பினோவின் சொற்கள் இவை. இதே மேகன்தான், இந்த கால்பந்து போட்டி தொடங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னால், என்னதான் ஆனாலும், வெள்ளை மாளிகையில் நுழையப் போவதில்லை என்று தெரிவித்திருந்தார்.
"முதலில் போட்டியில் வெற்றிபெற்று காட்டுங்கள். பின்னர் உங்களை அழைக்க வேண்டுமா, வேண்டாமா என்று நாங்கள் முடிவு செய்வோம்" என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒரேயொரு வாக்கியத்தில் மறுமொழி அளித்திருந்தார்.
இறுமாப்புடன், சர்ச்சைக்குரிய கருத்துக்களை அறிவிப்பவராக இருக்கிற டொனால்டு டிரம்ப், இந்த ஒரேயொரு வாக்கியத்தோடு தனது மறுமொழியை நிறுத்தி கொண்டது குறிப்பிடத்தக்கது.
தனது கருத்துக்களை உறுதியாக தெரிவிப்பதற்கு பேர்போன ஒரு பெண்ணை அமைதிப்படுத்துவது மிகவும் கடினம்.
விவாதம் செய்கின்ற பெண் அரசியல்வாதி ஒருவரை "மோசமான பெண்" என்று நாடாளுமன்ற கூட்டு கூட்டத்திற்கு முன்பு, டிரம்ப் கூறலாம். ஆனால், அந்த பெண்ணே, உங்களுடைய எல்லையை மீறி தன்னை மோசமான பெண் என்று எவ்வாறு அழைக்கலாம்? என்று கேட்டு விட்டால் போதும். நிலைமை மிகவும் மோசமாகும்.
பையனைபோல முடியை வெட்டி இளஞ்சிவப்பு நிறத்தில் சிகையலங்காரம் செய்த லெஸ்பியன் வீராங்கனை கோபமாக கருத்துக்களை தெரிவித்திருப்பது, அமெரிக்காவில் சர்ச்சையை தோற்றுவித்திருக்கிறது. அமெரிக்க பெண்கள் மற்றும் உலக பெண்களுக்கு இவர் முன்மாதிரியாகியுள்ளார்.
பெண்களை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைக்கின்ற, பெண்கள் பெண்களைபோல வாழ்க்கை நடத்த வேண்டும் என்று எண்ணுகின்ற பெற்றோரும், ஆசிரியர்களும், பிறரும் இதனால் ஏமாற்றம் அடையலாம்.
பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து கோப்பையை மேகனும், அவரது அணியினரும் வென்ற நாளில், இவர்கள் பற்றிய சுவரொட்டிகள் அமெரிக்காவில் எரிக்கப்பட்டன. அவரது சுவரொட்டியில் அசிங்கமான குறிப்புகள் எழுதப்பட்டன. ரெப்பினோவுக்கு எதிராக அவமதிக்கும் வாசகங்கள் எழுதப்பட்டன.
தனது அணியை ஆண் ஒருவர் கேப்டனாக வழிநடத்தி சென்று உலகக் கால்பந்து கோப்பையை வென்றிருந்தால், இவ்வாறு நடந்துகொண்ட மாதிரி இதே மக்கள் நடந்து கொள்வார்களா என்று நான் நினைத்துப் பார்த்தேன்?
நமது தோனியோ, விராட் கோலியோ உலகக் கோப்பையோடு தாயகம் திரும்பியிருந்தால் நாம் அவர்களை வாழ்த்தியிருப்போமா அல்லது அவர்களுக்காக ஒட்டிய சுவரொட்டிகளை கிழித்து எறிந்திருப்போமா?
மேகனுக்கு மட்டும் ஏன் இப்படிப்பட்ட எதிர்வினைகள்? இதற்கான விடை மிகவும் தெளிவானது. இவருக்கு எதிராக சிலர் கோபம் கொண்டுள்ளனர். காரணம் இந்த பெண்ணை அடக்க முடியாது. இவள் யாரிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்பதுதான்.
உலகக் கால்பந்து கோப்பையை வெல்வதற்கு அமெரிக்க அணியை இவர் வழிநடத்தியுள்ளார். ஆனால், அமெரிக்காவிலுள்ள சிலரின் பதில் என்ன தெரியுமா?
"வெற்றி இருக்கட்டும். இவர் இவ்வாறு நடக்கக்கூடாது. இவர் ஏன் எப்போதும் கருத்துக்களை தெரிவிக்கிறார். சாம்பியன் தகுநிலைக்கு இத்தகைய அகம்பாவம் இருக்கக்கூடாது. சற்று பணிவு காட்ட வேண்டும்", என்று அவர்கள் கூறுகின்றனர்.
இதுதான் பிரச்சனையின் முக்கிய அம்சம். "பெண்களைபிறப்புறுப்பில் பிடியுங்கள்" என்று பேசிய அதிபர் அமெரிக்காவுக்குப் பிரச்சனையில்லை
(இது குறித்துப் படிக்க:US election: Full transcript of Donald Trump's obscene videotape)
ஆனால், இளஞ்சிவப்பு நிற முடியோடு, தனது மனதில் தோன்றுவதை வெளிப்படுத்துகிற லெஸ்பியனான தீவிர கால்பந்து வீராங்கனையை அமெரிக்கர்களால் ஏற்றுகொள்ள முடியவில்லை. இது இயல்புதான். 12 முதல் 15 வயது வரையான பெண்கள் விடுதலை, உரிமைகள் மற்றும் பிற எல்லாவற்றையும் பற்றி கனவு காண தொடங்கி, அவர்களை முன்னோடிகள் ஆக்கிவிட்டால் என்ன நடக்கும்?
தனது சக அணியினரை பற்றி மேகன் ரெப்பினோ இவ்வாறு கூறுகிறார்: "நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். எங்களில் சிலர் இளஞ்சிவப்பு வேறு சிலர் கறுப்பு அல்லது வெள்ளை நிற முடியை வைத்திருக்கிறோம். சிலர் பச்சை குத்தியுள்ளோம். நீள கூந்தல் கொண்டவர்கள், ஒருபாலுறவுக்காரர்கள் என பலரும் உள்ளனர். எங்களைப் பற்றி பெருமை கொள்கிறோம். நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். இப்போது இளைப்பாறும் மனநிலையில் உள்ளோம்"
"எங்களை வரவேற்ற பேரணியால் மிகப் பெரியதும், சிறந்த நகரமுமான இது முடங்கிப் போய்விட்டது. நாங்கள்தான் உலகிலேயே பெரியதும், சிறந்ததுமான அணியாகும்" என்று அவர் பெருமையுடன் தெரிவித்தார். இது பலரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியிருக்கிறது.
பெண்ணொருவர் சரியாக நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், இவளோ,
மன்னிப்பு கேட்காத இந்த பெண்கள் கண்டுகொள்ளவில்லை.!!!
எது எதற்கெல்லாம் மன்னிப்பு
எந்தவொரு காரணமும் இல்லாமல் மன்னிப்பு கேட்கின்ற பெண்களை நாங்கள் பார்த்துள்ளோம். மாலை 7 மணிக்குள் வீட்டுக்கு வர முடியாததால், காய்ச்சல் காரணமாக குடும்பத்தினருக்கு சப்பாத்தி செய்து கொடுக்க முடியவில்லை என்றால் மன்னிப்பு கேட்பார்கள். காலையில் வைத்த கடிகார அலாரத்திற்கு எழும்ப முடியாமல் இருந்ததால், மகன் தாமதமாக பள்ளிக்கு செல்வதற்கு அவர்கள் மன்னிப்பு கேட்பார்கள்.
திருமணம் நடந்தவுடன் அவர்கள் கருத்தரித்துவிட்டால் மன்னிப்பு கேட்பார்கள். விடுமுறை நாளில் அலுவலகம் செல்ல வேண்டியிருந்தால் மன்னிப்பு கேட்பார்கள். குடும்பத்தினரை கண்டுகொள்ளாமல் இருப்பதாக பிறர் கூறினால் மன்னிப்பு கேட்பார்கள்.
வீடுகளில் வேலை செய்து சம்பாதிப்பதாக இருந்தால் மன்னிப்பு கேட்பார்கள். பெண்கள் சம்பாதிப்பதை கணவர் விரும்பாவிட்டால் மன்னிப்பு கேட்பார்கள். வரதட்சனைக்காக பணம் திரட்ட வேண்டும் என்றால் மன்னிப்பு கேட்பார்கள். முதாதையரின் சொத்தில் பங்குதாரராக இருந்தால் மன்னிப்பு கேட்பாளர்கள். வாழ்வதற்கே மன்னிப்பு கேட்பார்கள்.
சில வினோதமான குற்ற உணர்வோடு இந்த பெண்கள் வாழ்வதை நாம் அன்றாட வாழ்க்கையில் காண்கிறோம். இதுவே இயல்பாகவும் உள்ளது.
அதனால்தான் நாம் மேகன் மற்றும் அவரது கால்பந்து அணியினர் வாழ்வதை பார்த்து பார்த்து எரிச்சலடைகிறோம். அவர்கள் வாழ்வதை நம்மால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மேகன் செய்வதெல்லாம் சரி என்பதல்ல. சண்டையில் சொல்லக்கூடாத சொற்களை தான் சொல்வதாக அவரே ஒப்புக்கொண்டுள்ளார். அவருடைய ஆக்ரோஷம் சரியானது என்று நான் கூறவில்லை. ஆனால், ஒரு பெண்ணாக இருப்பதால் மட்டுமே அவர் பணிவோடு இருக்க வேண்டும், நன்றாக நடந்துகொள்ள வேண்டும், ஆட்களுக்கு நன்மதிப்பு அளிக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பை வலுவாக எதிர்க்க வேண்டும்.
வானத்தின் எல்லையை தொட்டு விட்டோம் என்று சிலர் சாதனைகளால் உணரவோ அல்லது கவலையில் ஆழ்ந்து விடவோ கூடாது என்று தத்துவ மற்றும் அறநெறி ரீதியாக கூறுவது சரியாக இருக்கலாம்.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் கேன் வில்லியம்சன் தோற்ற பின்னரும் கட்டுப்பாடோடு இருக்கிறார். ஆனல், அவுட் ஆனது தெளிவாக தெரிந்த பின்னரும் ஜாசன் ராய் நடுவரோடு சண்டையிடுகிறார்.
நமது ஐந்து விரல்களும் ஒன்றாக இருப்பதில்லையே என்று கூறி இத்தகைய நடத்தையை நியாயப்படுத்திக் கொள்கிறோம். அப்படியென்றால் மேகனுக்கு மட்டும் அவருக்கு ஆதரவாக இந்த வாதம் வைக்கப்படவில்லை.
நமது இளைய தலைமுறையினர் இந்த பதிவுகளை எல்லாம் மனதில் வைத்துக்கொண்டு வளர்கின்றனர். சரியான காரணம் ஏதுமில்லாமல் மன்னிப்பு கேட்க அவர்களும் கற்று கொள்வார்கள்.
இந்நிலை மாற வேண்டும். தனது உரையின் முடிவில் மேகன், "நாம் அதிகம் அன்பு செய்ய வேண்டும். வெறுப்பதை குறைக்க வேண்டும். நாம் பேசுவதை குறைத்து, அதிகம் செவிமடுக்க வேண்டும். இந்த உலகை அழகாக ஆக்கும் பொறுப்பு நமக்குள்ளது. என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். நீங்கள் இருப்பதைவிட நல்ல மனிதர்களாக இருங்கள்" என்கிறார்.
பின்னர் அவருக்கே உரித்தான பாணியில் இரண்டு கரங்களையும் விரித்துகொண்டு மேடையில் நிற்கிறார். உலகக் கால்பந்து கோப்பையை வென்றவுடன் இதே மாதிரிதான் அவர் நின்றிருந்தார். அவரது ரசிகர்களும், அணியிரும் மகிழ்ச்சியோடு ஆரவாரம் செய்தனர்.
உலகக் கால்பந்து கோப்பையை வென்ற பிறகு உலகிற்கே சவால் விடுப்பது போல அவர் தோன்றினார். ஆனால், தனது இரு கைகளையும் விரித்து உலகை அரவணைத்து கொள்வதுபோல அவர் தெரிந்தார்,
வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால், இந்த இரண்டு உணர்வுகளும் தவறானவை அல்ல. இந்த உலகிற்கு சவால் விடுவதற்கோ, அதனை அணைத்து கொள்வதற்கோ நமது பெண்களுக்கு சுதந்திரம் இருக்க வேண்டும். மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உணர்வோடு இல்லாமல், தங்களின் இரு கரங்களையும் விரித்து அவர்கள் உறுதியாக நிற்க வேண்டும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்