கேம்பிரிட்ஜ் அனாலிடிகா: ஃபேஸ்புக் மீதான 5 பில்லியன் டாலர்கள் அபராதத்துக்கு விசாரணை கமிஷன் ஒப்புதல் மற்றும் பிற செய்திகள்

பேஸ்புக்

பட மூலாதாரம், SOPA Images

ஃபேஸ்புக் பயனாளர்களின் தரவுகளை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், அந்நிறுவனம் மீது விதிக்கப்பட்டிருந்த 5 பில்லியன் டாலர்கள் அபராதத்துக்கு மத்திய விசாரணை கமிஷன் ஒப்புதல் வழங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுமார் 87 மில்லியன் ஃபேஸ்புக் பயனாளர்களின் தரவுகளை, அரசியல் ஆலோசனை வழங்கும் நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனாலிடிகா தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டை அந்நாட்டின் மத்திய வர்த்தக ஆணையம் விசாரித்து வந்தது.

வெளியான இந்த செய்தி குறித்து கருத்து தெரிவிக்க ஏதுமில்லை என்று ஃபேஸ்புக் மற்றும் மத்திய வர்த்தக ஆணையம் பிபிசியிடம் கூறியது.

ஒரு தொழில்நுட்ப நிறுவனம் மீது அமெரிக்காவின் மத்திய விசாரணை கமிஷன் விதிக்கும் அதிகபட்ச தொகை இது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

Presentational grey line

சர்க்கரை மிகுந்த பானங்கள் புற்றுநோயை உண்டாக்குமா?

சர்க்கரை

பட மூலாதாரம், Getty Images

சர்க்கரை மிகுந்த பானங்கள், பழரச பானம், கார்பனேட் செய்த பானங்கள் உள்ளிட்டவை, புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கச் செய்யும் என்று பிரான்ஸ் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

பிரிட்டன் மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள ஓர் ஆய்வு முடிவில் இந்தத் தொடர்பு தெரிய வந்துள்ளது. ஐந்து ஆண்டுகளாக 100,000 பேரை கவனித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

ரத்தத்தில் சர்க்கரை அளவில் ஏற்படும் மாற்றம் தான் இதற்குக் காரணம் என்று Université Sorbonne Paris Cité பல்கலைக்கழகக் குழு கூறியுள்ளது.

இருந்தபோதிலும் உறுதி செய்யப்பட்ட ஆதாரங்கள் போதுமான அளவுக்கு இல்லை என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து இன்னும் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

Presentational grey line

நாகப்பட்டினத்தில் மாட்டுக்கறி சூப் சாப்பிட்டதாக பதிவிட்டவர் மீது தாக்குதல்

தாக்குதல்

பட மூலாதாரம், FACEBOOK

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மாட்டு இறைச்சியால் செய்யப்பட்ட சூப் சாப்பிட்டதாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டதால் அவர் தாக்கப்பட்டதாக காவல்துறை தெரிவிக்கிறது. இது தொடர்பாக நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூரில் பொரவச்சேரி பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முகமது பைசான் (24). இவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று பிற்பகல் மூன்று மணியளவில் இரு புகைப்படங்களை வெளியிட்டார்.

இதில் மாட்டு இறைச்சியினால் செய்யப்பட்ட சூப் சாப்பிடுவது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. "ஆயிரம்தான் சொல்லு மாட்டு கறி மாட்டு கறி தான்யா...." என்றும் அதில் எழுதியிருந்தார்.

இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், நேற்று மாலையே பைசானைத் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது.

Presentational grey line

ரயிலில் வந்த தண்ணீர்: சென்னையின் தாகத்தைத் தீர்க்குமா?

ரயிலில் வந்த தண்ணீர்

ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்குக் குடிநீர் கொண்டுவரும் திட்டத்தின் கீழ் முதல் ரயில் இன்று சென்னை வந்தடைந்தது. இந்த ரயில் மூலம் ஒரு தடவைக்கு இரண்டரை லட்சம் தண்ணீர் கொண்டுவர முடியும்.

சென்னையில் கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவுவதால், வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்குக் குடிநீரை ரயில் மூலம் கொண்டுவர முடிவுசெய்யப்பட்டது.

அதன்படி, ஜோலார்பேட்டை மேட்டு சக்கரக்குப்பம் நீரேற்று நிலையத்திலிருந்து ரயில்வே வேகன்களில் குடிநீர் நிரப்பப்பட்டு, அந்த ரயில் நேற்று காலை ஜோலார்பேட்டையிலிருந்து 7.20 மணியளவில் புறப்பட்டது. இந்த ரயில் காலை 11.35 மணியளவில் சென்னை வில்லிவாக்கம் ரயில் நிலையத்தை வந்தடைந்தது.

சென்னையில் தற்போது நாள் ஒன்றுக்கு சுமார் 500 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படும் நிலையில், இந்தத் திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்போது நாள் ஒன்றுக்கு 10 மில்லியன் லிட்டர் இதிலிருந்து கிடைக்கும்.

Presentational grey line

தோனி முன்பே இறக்கப்படாதது ஏன்? - ரவி சாஸ்திரியை நோக்கி கேள்வி

ரவி சாஸ்திரி

பட மூலாதாரம், Getty Images

உலகக்கோப்பை போட்டியிலிருந்து இந்தியா வெளியேறியதைத் தொடர்ந்து தோனியின் மெதுவான பேட்டிங் மற்றும் முக்கிய போட்டிகளில் ரோஹித் மற்றும் விராட் சரிவர விளையாடாதது குறித்து கேள்வி எழுந்தது.

ஆனால் இதில் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பங்கு என்ன இதுவே இப்போதைய கேள்வி.

இந்திய முன்னாள் கிரிகெட் வீரர் ஃபாரூக் இஞ்சினியர் பிபிசியின் நேர்காணலில் ரவி சாஸ்திரி மற்றும் விராட் கோலியிடம் சில முக்கிய கேள்விகளை எழுப்பினார்.

" ஏன் ரிஷப் பண்ட் தொடக்கத்தில் அணியில் இல்லை? ஏன் உலகக்கோப்பை அணி அறிவிக்கப்பட்டப்போது அணியின் தேர்வு சரியாக இல்லை?" என கேட்டிருந்தார்.

Presentational grey line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :