You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹாங்காங் போராட்டம்: சர்ச்சைக்குரிய மசோதா ’செயலிழந்துவிட்டதாக’ ஹாங்காங் தலைவர் அறிவிப்பு
ஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபர்களை சீனாவிடம் ஒப்படைக்கும் சர்ச்சைக்குரிய மசோதா ’செயலிழந்துவிட்டது’ என ஹாங்காங்கின் நிர்வாகத் தலைவர் கேரி லேம் கூறியுள்ளார்.
செவ்வாய்கிழமையன்று செய்தியாளர்களை சந்தித்த கேரி லேம், இந்த மசோதா தொடர்பாக அரசாங்கம் எடுத்த முயற்சிகள் ’தோல்வியில் முடிந்தது’ என கூறினார்.
ஆனால் இந்த மசோதா முழுவதுமாக திரும்பப்பெறப்பட்டது என அவர் கூறவில்லை. போராட்டக்காரர்கள் மசோதாவைத் திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும் எனக் கூறியுள்ளனர்.
ஹாங்காங்கில் கலவரத்தை ஏற்படுத்திய மசோதா ஏற்கனவே அரசால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
"ஆனாலும் மறுபடியும் சட்டசபையில் இதற்கான முயற்சிகளை அரசு தொடருமோ என சிலர் அரசின் மேல் சந்தேகப்படுகின்றனர்" என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார் கேரி லேம்.
"அதனால் நான் மறுபடியும் கூறுகிறேன் அப்படி எதுவும் நடக்காது. அந்த மசோதா செயலிழந்துவிட்டது" என அவர் தெரிவித்தார்.
அவர் ஏற்கனவே இந்த மசோதா 2020 ல் இந்த ஆட்சி முடியும்போது தான் முடியும் என கூறியிருந்தார்.
அதற்காகத்தான் போராட்டகாரர்களின் தலைவர் கோபமாக தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவித்தார்.
போராட்டங்களை ஒருங்கிணைத்த குடிமக்கள் மனித உரிமை முன்னணியை சேர்ந்த போனி லுயுங், ஹாங்காங் அரசு 5 பிரதான கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை இந்த போராட்டங்கள் தொடரும் எனக் கூறியுள்ளார். அதில் இந்த மசோதாவை முழுமையாக திரும்பப் பெறுவதும் ஒன்றாகும் அது மட்டுமல்லாமல் சமீபத்திய போரட்டத்தின்போது கைது செய்தவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது ஒன்றாகும்.
”இந்த மசோதா செயலிழந்துவிட்டது என்பது அரசியல் விளக்கமே தவிர சட்டப்பூர்வமாக அது நிரூபிக்கப்படவில்லை” என குடிமக்கள் கட்சியின் வழக்கறிஞர் ஆல்வின் யியுங் பிபிசியிடம் கூறியுள்ளார்.
”அந்த மசோதா திரும்ப பெறப்பட்டது என இன்னும் ஏன் அறிவிக்கவில்லை என்று எங்களுக்கு புரியவில்லை” என்றார் அவர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் ஜோஷ்வா வாங், "லேம் எங்களுடன் வார்த்தையில் விளையாட நினைக்கிறார் ஏன் இன்னும் அதிகாரபூர்வமாக மசோதா திரும்பப்பெறப்பட்டது." என கூறவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.
விமர்சகர்கள், இது பிராந்தியத்தின் நீதித்துறை சுதந்திரத்தை குறைத்துவிடும் என கூறுகிறார்கள். இது சீன அரசை விமர்சிப்பவர்களுக்கு எதிராக பயன்படுத்தபடலாம் எனவும் அவர்கள் கூறுகிறார்கள்.
1997ஆம் ஆண்டு வரை ஹாங்காங் பிரிட்டன் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் சீனாவின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டது.
அப்போது முதல் 50 ஆண்டுகளுக்கு வெளியுறவு மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகள் மட்டுமே சீனாவின் வசம் கொடுக்கப்பட்டு,'ஒரே நாடு, இரு அமைப்புமுறை' என்னும் கொள்கையின் அடிப்படையில் ஹாங்காங் தன்னாட்சி அதிகாரங்கள் மிக்க பிராந்தியமாக உள்ளது.
ஹாங்காங் அரசின் சமீபத்திய செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய மக்கள் ஜுலை 1 அன்று இரவு அதன் நாடாளுமன்ற அவையின் வளாகத்தை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர்.
பலர் லேமை பதவி விலக கோரினர்.
இப்போது கடந்த ஞாயிற்றுகிழமை சீன சுற்றுலா பயணிகளுடன் வீதியில் இறங்கி இந்த மசோதாவுக்கு எதிராக போரட்டம் நடத்தினர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்