டொனால்ட் டிரம்ப் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டது ஏன் தெரியுமா? மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
தன்னைத்தானே புகழ்ந்து கொண்ட டொனால்ட் டிரம்ப்
சுற்றுச்சூழல் தொடர்பான விஷயங்களில் தமது அரசாங்கம் சிறப்பாக செயல்படுவதாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னைத் தானே புகழ்ந்துக் கொண்டார். அதே நேரம் ஜனநாயகக் கட்சியினர் இந்த விஷயத்தில் மிக மோசமாக செயல்படுவதாக விமர்சித்தார். காற்று மற்றும் நீரின் தரத்தை தமது திட்டங்கள் மேம்படுத்தியதாக புகழ்ந்து கொண்ட அவர், ஆற்றல் துறையில் தமது நிர்வாகம் பல வேலை வாய்ப்புகளை உருவாக்கி உள்ளதாக பெருமையாகப் பேசினார்.

பட மூலாதாரம், Getty Images
பருவநிலை தொடர்பான பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியது சரியே என்றும் அவர் வாதிட்டுள்ளார். பருவநிலை தொடர்பான டிரம்ப்பின் நிலைப்பாட்டை சூழலியலாளர்கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு

பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் அமல்படுத்த ஐந்து கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அ.தி.மு.க. வெளிப்படையாக தன் கருத்தைத் தெரிவிக்கவில்லை. தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென இந்திய அரசு சமீபத்தில் சட்டத்திருத்தம் ஒன்றை மேற்கொண்டது. தற்போது தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு துவங்கியிருக்கும் நிலையில், இந்தச் சட்டத்தை அமல்படுத்தலாமா, கூடாதா என்பது குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
விரிவாகப் படிக்க:பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு: ஆதரித்தது யார், எதிர்த்தது யார்?

'கர்நாடக அரசுக்கு நீடிக்கும் சிக்கல், காப்பாற்ற இறுதிக்கட்ட முயற்சி'

பட மூலாதாரம், Getty Images
கர்நாடகாவில் ராஜிநாமா செய்ய முடிவு செய்துள்ள எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்கும் விதமாக மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணியில் உள்ள காங்கிரஸ் அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்ய முடிவு செய்துள்ளனர். பாஜகவின் ஆப்ரேஷன் கமலா போன்ற எந்தவித அலையாலும் அடித்து செல்லப்படாத நபர்களை தேர்ந்தெடுக்க முதலமைச்சர் குமாரசாமிக்கு அவர்கள் உதவியாக இருப்பர். "அமைச்சர்கள் தாங்களாக முன்வந்து தங்கள் பதவியை ராஜிநாமா செய்துள்ளனர். அமைச்சரவையை மாற்றியமைக்க காங்கிரஸ் என்ன முடிவை வேண்டுமென்றாலும் எடுத்துக் கொள்ளலாம் என இவர்கள் கோரியுள்ளனர்." என அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டியின்ன பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அமைச்சர்களுடனான சந்திப்பிற்கு பிறகு தெரிவித்தார்.
விரிவாகப் படிக்க:ஆப்ரேஷன் கமலா: கர்நாடக அரசுக்கு நீடிக்கும் சிக்கல் - நடப்பது என்ன?

'உலகக்கோப்பை: அரை இறுதிப் போட்டிகளில் இதுவரை இந்தியா சாதித்தது என்ன?'

பட மூலாதாரம், DIBYANGSHU SARKAR
கோலி தலைமையிலான இந்திய அணி செவ்வாய்க்கிழமையன்று நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. ஏழாவது முறையாக ஐசிசி உலகக் கோப்பை ஒருநாள் தொடரில் அரை இறுதிக்குத் தகுதி பெற்றிருக்கிறது இந்திய அணி . இதுவரை நடந்த அரை இறுதி போட்டிகளில் இந்திய அணியின் செயல்திறன் எப்படி இருந்தது? இப்போட்டிகளில் என்ன நடந்தது? ஐசிசி நடத்தும் பல நாடுகள் பங்கு பெறக்கூடிய தொடர்கள் மூன்று வடிவங்களில் உள்ளன.
விரிவாகப் படிக்க:அரை இறுதியில் இந்தியா வலுவான அணியா? - புள்ளிவிவரம் சொல்லும் உண்மை

'கோ மாதா கி ஜெய்'

மத்திய பிரதேச மாநிலம் கண்ட்வா மாவட்டத்தில் மாட்டை கடத்திச் சென்ற 25 பேரை பிடித்து கயிற்றால் கட்டி 100 பசு பாதுகாவலர்கள் என கூறிக்கொள்வோர் போலீஸிடம் ஒப்படைத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பசு காவலர்கள் எனக் கூறிக் கொள்ளும் அவர்கள் அந்த 25 பேரை மண்டியிடச் செய்து அவர்களின் காதை திருகி `கோ மாதா கி ஜெய்`(பசு அன்னை வாழ்க) என கூற வற்புறுத்தினர். போலீஸார் மாடு கடத்தியவர்கள் மீதும் அவர்களை துன்புறுத்திய பசு காவலர்கள் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் காண்டவா மாவட்டம் சாவ்லி கேடா கிராமத்தில் நிகழ்ந்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












