பாலின அடையாளம் பற்றிய நவீன கருத்துகள் குடும்ப அமைப்பை சிதைக்கும்: வாடிகன் கருத்து மற்றும் பிற செய்திகள்

எல் ஜி பி டி குழுக்கள்

பட மூலாதாரம், Getty Images

பாலின அடையாளங்கள் குறித்த நவீன கால கருத்துக்களை கேள்விக்கு உட்படுத்தும் ஓர் ஆவணத்தை வெளியிட்டுள்ளது கத்தோலிக்க கிறித்துவ தலைமையகமான வத்திக்கான்.

திங்கள்கிழமை இந்த 31 பக்க ஆவணம் வெளியாகியுள்ளது. 'ஆண்கள் மற்றும் பெண்கள், அவன் அவர்களை படைத்தான்' என்ற பெயரில் கற்பிக்க வேண்டிய வழிகாட்டல் ஆவணத்தை வத்திக்கான் வெளியிட்டுள்ளது.

கல்வி நெருக்கடிகள் குறித்து ஆவணம் பேசுகிறது, மேலும் பாலின அடையாளங்கள் குறித்த தற்போதைய விவாதங்கள் இயற்கை எனும் கருத்தையே அழிக்கவல்லது; குடும்ப நிறுவன அமைப்பை சிதைக்கவல்லது என குறிப்பிட்டுள்ளது.

எல் ஜி பி டி குழுக்கள்

பட மூலாதாரம், Getty Images

ஒருபாலுறவுக்காரர்கள் உள்ளிட்ட எல்ஜிபிடி குழுமக்கள் பெருமை கொள்ளும் மாதத்தில் இந்த ஆவணம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த ஆவணத்தில் உள்ள கருத்துக்கள் உடனடியாக எல்ஜிபிடி குழுக்களால் விமர்சனத்துக்குள்ளானது.

சிறுவர்களுடன் பணிபுரியும் நபர்களுக்கு 'கற்பித்தல் வழிகாட்டியாக' இந்த ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது. கத்தோலிக்க கல்விச் சபை இந்த ஆவணத்தை வெளியிட்டுள்ளது.

இந்த ஆவணம் போப் ஃபிரான்ஸிசால் கையெழுத்திடப்படவில்லை.

ஆவணத்தில் இருப்பது என்ன?

பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறது இந்த ஆவணம். ஆனால் திருநங்கை/ திருநம்பி சமுகம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் எப்படி மாணவர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும் என்பதில் சில வழிகாட்டுதல்களை கொண்டிருக்கிறது.

பாலின அடையாளங்கள் பற்றிய நவீன கால புரிதல்களை இந்த ஆவணம் விமர்சித்துள்ளது.

பாலுறவு மற்றும் பாலின அடையாளங்களில் மாற்றம் ஆகியவை ''உணர்ச்சி மற்றும் ஆசைகளின் பேரில் சுதந்திரம் குறித்த குழப்பான கருத்தை விதைப்பதைத் தவிர வேறொன்றுமில்லை'' என்கிறது இந்த ஆவணம்.

''பாலினம் என்பதை தனிப்பட்ட நபர்கள் முடிவு செய்யமுடியாது. இறைவன் படைப்பில் ஒருவர் ஆணா பெண்ணா என்பது தீர்மானிக்கப்படுகிறது'' என்கிறது அந்த ஆவணம்.

Presentational grey line

இந்திய அணியின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான யுவராஜ் ஓய்வு

யுவராஜ் சிங் காலத்தில் விளையாடிய சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் வரலாற்றைப் பார்த்தால் யுவராஜ் அளவுக்கு ஃபார்ம் அவுட் ஆனதும் பின்னர் மீண்டும் வந்து 'மேட்ச் வின்னிங்' இன்னிங்ஸ் விளையாடியவர்களும் மிகக்குறைவு.

19 வயதில் இந்தியாவுக்கு கிரிக்கெட் ஆட வந்த யுவராஜ் சிங் கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு பிறகு ஓய்வு பெற்றுள்ளார்.

யுவராஜ் சிங்

பட மூலாதாரம், Ryan Pierse

''எனது 25 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்வுதான் எனக்கு எல்லாம் கற்றுக்கொடுத்தது'' என்கிறார் யுவராஜ் சிங்.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் (2000) தொடர் நாயகன் விருது பெற்ற யுவராஜ் சிங், 2007 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்ல மிகப்பெரிய பங்காற்றினார். 2011 உலகக்கோப்பையை இந்தியாவை இறுதி வரை அழைத்து வந்ததில் மிகப்பெரிய பங்கு அவருடையது.

Presentational grey line

அனல் காற்று அடிக்கும் ஆபத்து: "பெண்களின் கருவுறும் திறன் பாதிக்கப்படலாம்"

வெயில் காலம் சிலருக்கு மிக மோசமானதாக இருக்கிறது.

மத்திய மற்றும் தென் இந்தியா, அண்டை நாடான பாகிஸ்தான் ஆகிய இடங்களில் வெப்பநிலை 45 டிகிரியை தாண்டியுள்ளது.

உலகம் முழுவதுமே இவ்வாறு பல்வேறு இடங்களில் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கிறது. பொதுவாக மக்கள் அதிகம் தண்ணீர் குடிக்குமாறு, நேரடி வெப்பத்தை தவிர்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.

ஆனால் உலகளவில் வெப்பம் உயர்ந்து வருவது அதிகரித்துள்ள நிலையில், அதற்கான போதிய நடவடிக்கைகளை நாம் எடுக்கிறோமா?

Presentational grey line

ஓய்ந்தது இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு ஒலித்த குரல்

நாடக ஆசிரியர், நடிகர், இயக்குனர்,இலக்கியவாதி, தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல முகங்கள் கொண்ட கிரிஷ் கர்னாட், தனது 81 வது வயதில் காலமானார். தமிழ் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரமாக வலம் வந்த இவர், வில்லன் நடிகர் என்ற வட்டத்திற்குள் சுருக்கிவிடக் கூடியவர் அல்ல, இந்திய சினிமா உலகில் ஒரு குறிப்பிடத் தகுந்த இடத்தைப் பெற்றவர்.

கிரிஷ் கர்னாட்

பட மூலாதாரம், Mint

கிரிஷ் கர்னாட், ஒற்றை தேசக் கொள்கைகளுக்கு எதிரானவர். இந்துத்துவா அமைப்புகளையும் , செயல்பாடுகளையும் தொடர்ந்து விமர்சித்து வந்தவர். இந்தியா என்பது பல வேறு பண்பாடுகளையும், பல மொழி பேசும் மக்களையும் கொண்டது, அந்த பன்முகதன்மையினையும், மொழிகளையும் இழக்க முடியாது என்ற கருத்தினை வலியுறுத்தி வந்தார். எழுத்தாளர் கல்புர்கி கொலையினை தொடர்ந்து , கருத்துரிமைக்காக தொடர்ந்து குரல் வந்தார். கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட பொழுது, இவரும் வலதுசாரி அமைப்புகளால் குறிவைக்கப்பட்டிருந்தார் என்று கூறப்பட்டது.

Presentational grey line

காஷ்மீர் கத்துவா சிறுமி கூட்டுப் பாலியல் வல்லுறவு வழக்கு - தீர்ப்பு விவரம்

காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் 8 வயது பெண் குழந்தை கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கிய பதான்கோட் நீதிமன்றம் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 6 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கியது.

தீபக் கஜூரியா, பர்வேஷ் குமார், சாஞ்ஜி ராம், ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :