கால்பந்து வீரரின் திருமணத்தில் மாப்பிள்ளை தோழனான துருக்கி அதிபர் மற்றும் பிற செய்திகள்

வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜெர்மனி கால்பந்து வீரர் மேசுட் ஒஸிலின் திருமணத்தில், துருக்கியின் அதிபர் ரிசப் தய்யீப் எர்துவான் மாப்பிள்ளை தோழனாக நின்று இந்த திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.
துருக்கி வம்சாவளியைச் சேர்ந்த ஒஸில், கடந்த ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெறுவதற்கு முன்னால் அதிபர் எர்துவானோடு எடுத்துக்கொண்ட புகைப்படம் சர்ச்சைக்குள்ளானது.
இந்த புகைப்படங்களால் ஜெர்மனியில் தான் அனுபவித்த "இனவெறி மற்றும் மரியாதை குறைவை" சுட்டிக்காட்டி சர்வதேச கால்பந்து போட்டிகளில் விளையாடப்போவதில்லை என்று மேசுட் ஒஸில் அறிவித்தார்.
30 வயதான அர்செனல் கால்பந்து கிளப் வீரரான மேசுட் ஒஸில், அவரது காதலியும், முன்னாள் மிஸ். துருக்கி அமினி குல்செயை, பாஸ்பரஸ் ஆற்றின் கரையில் இருக்கும் ஆடம்பர ஹோட்டலில் வெள்ளிக்கிழமை திருமணம் செய்துகொண்டார்.
2017ம் ஆண்டு முதல்முறையாக டேட்டிங் தொடங்கிய இந்த ஜோடி, 2018 ஜூன் மாதம் நிச்சயதார்த்தம் செய்துள்ளதாக அறிவித்தது.

பட மூலாதாரம், AFP
இந்த ஆண்டு மார்ச் மாதம் அதிபர் எர்துவானை தனது மாப்பிள்ளை தோழனாக இருந்து திருமணத்தை நடத்தி வைக்க கேட்கப்போவதாக ஒஸில் அறிவித்தது, துருக்கியில் பெரும் விமர்சனங்களை எழுப்பியது.
துருக்கி அதிபர் எர்துவான் பிரபல நட்சத்திரங்களின் திருமணங்களில் அடிக்கடி பங்குகொள்வார் என தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, தேர்தல் பரப்புரையின்போது அவர் இத்தகைய திருமணங்களில் கலந்து கொள்கிறார்.
இஸ்தான்புல்லில் நடைபெறும் மேயர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதற்கு முன்னால் நடைபெற்றுள்ள கால்பந்து வீர்ர் ஒஸிலின் திருமணத்திலும் எர்துவான் கலந்துகொண்டுள்ளார்.
இஸ்தான்புல்லில் முன்னதாக நடைபெற்ற தேர்தல் எர்துவானின் ஏகேபி கட்சியின் வேட்பாளர் சிறிய வாக்கு வித்தியாசத்தில் தோற்றதாக அறிவிக்கப்பட்ட முடிவு செல்லாது என்று அறிவிக்கப்பட்டது சர்வதேச அளவில் விமர்சனங்களை எழுப்பியிருந்தது.

இலங்கையில் இருந்து வெளியேற 7 ஆயிரம் குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளன: முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா

இலங்கையை விட்டும் வெளியேறுவதற்கு அந்த நாட்டைச் சேர்ந்த சுமார் 7 ஆயிரம் குடும்பங்கள், இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதரகம் ஒன்றில் விண்ணப்பித்துள்ளதாக, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை அடுத்து, வசதி படைத்த குடும்பங்களே, இவ்வாறு நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.
விரிவாக வாசிக்க: "இலங்கையில் இருந்து வெளியேற 7 ஆயிரம் குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளன"

நீட் தேர்வு: 'மதிப்பெண்களை வைத்து குழந்தைகளை மதிப்பிடும் மனநிலை மாற வேண்டும்'

திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் வசிக்கும் செல்வராஜ் ராஜலட்சுமி தம்பதியரின் மகள் ரித்துஸ்ரீ என்பவர் ஜூன் 5ம் தேதி , நீட் தேர்வு முடிவுகள் வெளியான அன்று தற்கொலை செய்து கொண்டார்.
ரித்து ஸ்ரீயின் பெற்றோர் திருப்பூர் பின்னலாடைத் தொழிற்சாலையில் வேலைசெய்பவர்கள். வேலைக்காக தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் இருந்து இடம்பெயர்ந்து திருப்பூரில் குடியேறியவர்கள்.
விரிவாக வாசிக்க: "மதிப்பெண்களை வைத்து குழந்தைகளை மதிப்பிடும் மனநிலை மாற வேண்டும்"

24 மணி நேரம் கடைகள் இயங்க உத்தரவு: தொழிலாளர்களுக்கு வரமா சாபமா?

பட மூலாதாரம், NURPHOTO/GETTY IMAGES
தமிழகத்தில் வணிக நிறுவனங்கள் 24 மணிநேரமும் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டதை அடுத்து, தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அரசாணைக்கு முன்னர், கடைகள் பெரும்பாலும் இரவு 11 மணிவரை மட்டுமே இயங்கமுடியும் என்ற கட்டுப்பாடு இருந்ததால், சிறிய மற்றும் பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இரவு 11 மணிக்கு மூடப்பட்டன.
விரிவாக வாசிக்க: கடைகள் 24 மணி நேரம் இயங்க இசைவு: தொழிலாளர்களுக்கு வரமா சாபமா?

கொலைகாரன் - சினிமா விமர்சனம்

ஜப்பானிய எழுத்தளரான கெய்கோ ஹிகஷினோ எழுதி 2005ல் வெளியான The Devotion of Suspect X நாவல் மிகப் புகழ்பெற்ற ஒரு த்ரில்லர்.
இந்த நாவல் 2008ல் Suspect X என்ற பெயரில் திரைப்படமாகவும் வெளிவந்து பெரும் வெற்றிபெற்றது. இந்தப் படம் உலகம் முழுவதும் பல மொழிகளில் தழுவி எடுக்கப்பட்டது.
த்ரிஷ்யம், பாபநாசம் படங்களும் Suspect Xன் தழுவல்தான். அந்த Suspect Xன் அதிகாரபூர்வ ரீ - மேக்தான் 'கொலைகாரன்.'
விரிவாக வாசிக்க: கொலைகாரன் - சினிமா விமர்சனம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












