அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களின் சமூக ஊடக கணக்குகள் இனி ஆராயப்படும் மற்றும் பிற செய்திகள்

அமெரிக்க அரசின் புதிய விதிமுறைகளின்படி, அந்நாட்டிற்கு பயணிக்க விசா கோரி விண்ணப்பிக்கும் கிட்டதட்ட அனைத்துவித விண்ணப்பதாரர்களும் இனி தங்களது சமூக ஊடக கணக்குகள் குறித்த விவரங்களை அளிக்க வேண்டியிருக்கும்.

அமெரிக்காவுக்கு பயணிக்க விசா கோரி விண்ணப்பிப்பவர்கள், தங்களது சமூக ஊடக கணக்குகள் குறித்த விவரங்களோடு, கடந்த ஐந்தாண்டுகளாக பயன்படுத்திய மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்களை அளிக்க வேண்டும் என்று அந்த புதிய விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு இந்த புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டபோது, இதன் காரணமாக ஓராண்டிற்கு 14.7 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று மதிப்பிடப்பட்டிருந்தது.

அரசு ரீதியான மற்றும் உத்தியோகபூர்வ விசா விண்ணப்பங்களுக்கு இந்த புதிய விதிமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

ஆனால், அமெரிக்காவுக்கு பணிவாய்ப்பு அல்லது கல்வி தொடர்பாக செல்பவர்களுக்கு இதிலிருந்து விலக்கு கிடையாது.

குடிசையில் வாழ்ந்த மோதியின் புதிய அமைச்சரின் சர்ச்சைக்குரிய கடந்தகாலம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் புதிய அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் அமைச்சர்கள், மே 30ஆம் தேதியன்று பதவி ஏற்றுக்கொண்டனர். அப்போது இந்த வயதான மெலிந்த நபர் பதவியேற்றுக் கொள்ளும்போது பலத்த கைத்தட்டல் எழுந்தது.

பிரதாப் சந்திர சாரங்கியை ஒடிஷா மாநிலத்திற்கு வெளியே யாருக்கும் பெரிதாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால், கடந்த வாரம் சமூக ஊடகங்களில் இவரது புகைப்படம் பரவலாக பகிரப்பட்டது. பிரதாப் சந்திர சாரங்கி, அமைச்சர் பதவி ஏற்றுக் கொள்வதற்காக தனது குடிசையில் இருந்து வெளியே வந்த புகைப்படம்தான் அது. இது பல்வேறு தரப்பு மக்களை வியப்பில் ஆழ்த்தியது.

ஆனால், தற்போது பிரபலமாகியுள்ள இந்த மனிதரின், கடந்தகால நிகழ்வுகள் என்ன?

இந்தியாவுக்கு வழங்கிய சிறப்பு சலுகையை நிறுத்தும் அமெரிக்கா

பொருளாதார பாதுகாப்பு தற்காப்பு நடவடிக்கைகள் ஆழமாவதன் மத்தியில், இந்தியாவுக்கு வழங்கி வந்த சிறப்பு வர்த்தகச் சலுகையை அமெரிக்கா அடுத்த வாரம் நிறுத்தவுள்ளதை அதிபர் டொனால்டு டிரம்ப் உறுதி செய்துள்ளார்.

இந்த சிறப்பு சலுகையின் மூலம் சில இந்தியப் பொருட்கள் வரி இல்லாமல் அமெரிக்காவிற்குள் அனுமதிக்கப்பட்டு, பெருமளவில் பயன்பெற்ற நாடாக இந்தியா விளங்கியது.

ஆனால், அடுத்த புதன்கிழமை இந்த சிறப்பு சலுகை நிறுத்தப்படுமென அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

நியூசிலாந்திடம் இலங்கை மோசமான தோல்வி

2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரை இலங்கை அணியை வீழ்த்தி பெரிய வெற்றியுடன் தொடங்கியுள்ளது நியூசிலாந்து அணி.

நேற்று சனிக்கிழமை, கார்டிஃப்பில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் பேட் செய்த இலங்கை அணி 29.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இரண்டாவதாக களமிறங்கிய நியூசிலாந்து அணி 16.1 ஓவர்களிலேயே, ஒரு விக்கெட்டையும் இழக்காமல் 137 என்ற இலக்கை அடைந்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.

வெள்ளை நிற மேற்கூரைகள் உங்களை வெப்பத்திலுருந்து காக்குமா?

கட்டத்தின் மேற்கூரைக்கு வெள்ளை நிறத்தில் பெயிண்ட் அடிப்பதால் ஊடுருவும் வெப்பம் எவ்வளவு குறையும்?

கூரைக்கு வெள்ளை நிறத்தில் பெயிண்ட் அடிப்பதால் கட்டடத்திற்குள் ஊடுருவும் வெப்பம் குறைப்பதாக அறியப்படுகிறது. அப்படியானால் எவ்வளவு குறையும்?

ஒரு கட்டடத்தின் கூரைக்கு வெள்ளை நிறத்தில் பெயிண்ட் அடிப்பதால், சூரிய ஒளியை பிரதிபலிக்க செய்து, அந்த கட்டடத்திற்குள் ஊடுருவும் வெப்பத்தை குறைப்பதாக நீண்டகாலமாக அறியப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :