You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியாவுக்கு வழங்கிய சிறப்பு சலுகையை நிறுத்தும் அமெரிக்கா
பொருளாதார பாதுகாப்பு தற்காப்பு நடவடிக்கைகள் ஆழமாவதன் மத்தியில், இந்தியாவுக்கு வழங்கி வந்த சிறப்பு வர்த்தகச் சலுகையை அமெரிக்கா அடுத்த வாரம் நிறுத்தவுள்ளதை அதிபர் டொனால்டு டிரம்ப் உறுதி செய்துள்ளார்.
இந்த சிறப்பு சலுகையின் மூலம் சில இந்தியப் பொருட்கள் வரி இல்லாமல் அமெரிக்காவிற்குள் அனுமதிக்கப்பட்டு, பெருமளவில் பயன்பெற்ற நாடாக இந்தியா விளங்கியது.
ஆனால், அடுத்த புதன்கிழமை இந்த சிறப்பு சலுகை நிறுத்தப்படுமென அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
இந்தியாவிலுள்ள சந்தைகளில் நுழைவதற்கு இந்தியா அனுமதியளிக்கவில்லை என்பதால், இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கி வரும் இந்த சிறப்பு வரிச் சலுகை திரும்ப பெறப்படும் என்று கடந்த மார்ச் மாதம் அதிபர் டிரம்ப் அறிவித்தார். ஆனால், எந்த தேதியும் அவர் அப்போது அறிவிக்கவில்லை.
"வளரும் நாடாக இந்தியா பெற்று வரும் இந்த சலுகையை நிறுத்துவது பொருத்தமானது," என்று வெள்ளிக்கிழமை டிரம்ப் கூறியுள்ளார்.
"இந்த நடவடிக்கை சிறிய அளவு பொருளாதார பாதிப்பையே ஏற்படுத்தும்" என்று இந்தியா கூறியுள்ளது. ஆனால், குறைவான பொருளாதார வளர்ச்சி மற்றும் வரலாறு காணாத அளவு இந்தியாவில் உயர்ந்துள்ள வேலையில்லா திண்டாட்டம் ஆகியன நிலவும் நேரத்தில் இது வருகிறது.
வளரும் நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கும் இந்த சலுகை திட்டம் 5.6 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதிப்பொருட்கள் எந்த வரியும் இல்லாமல் அமெரிக்காவிற்குள் செல்ல அனுமதித்தது.
பிற நாடுகளோடு அமெரிக்கா கொண்டிருக்கும் நியாயமற்ற வணிக உறவுகள் என்று தாங்கள் கருதும் கொள்கைகளை களைவதற்கு டிரம்ப் நிர்வாகம் எடுத்துள்ள சமீபத்திய நடவடிக்கை இதுவாகும்.
இந்த திட்டத்தின்கீழ் செயல்பட்டு வந்த துருக்கியின் சிறப்பு சலுகையை கடந்த மாதம் அமெரிக்கா நிறுத்தியது.
உலக அளவிலுள்ள நாடுகளிடம் இருந்து எஃகு மற்றும் அலுமினியம் இறக்குமதிப் பொருட்களுக்கு டிரம்ப் அதிக வரி விதித்துள்ளார்,
இத்தகைய வரி விதிப்பு உயர்வுக்கு பதிலடியாக பல பொருட்களுக்கு இந்தியா இறக்குமதி வரியை உயர்த்தியுள்ளது.
சீனாவோடும் வர்த்தகப்போரை தூண்டிவரும் அமெரிக்கா, சட்டபூர்வமற்ற குடியேற்றத்தால், மெக்ஸிகோ பொருட்களுக்கு வரி விதிக்கப்போவதாக சமீபத்தில் மிரட்டியுள்ளது.
வெனிசுவேலா: சீனா ஆதரிக்கிறது, அமெரிக்கா எதிர்க்கிறது - அங்கு நடப்பது என்ன?
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்