You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மூன்று மாதங்களுக்கு முன் மூளைச் சாவடைந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தை
கடந்த டிசம்பர் மாதம் மூளைச் சாவு அடைந்த 26 வயது பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
கடுமையான ஆஸ்துமாவால் பாதிப்படைந்த சர்வதேச விளையாட்டு வீராங்கனையான கேத்ரீனா செக்கேரா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மூளைச் சாவு அடைந்தார்.
32 வார கர்ப்பிணியான கேத்ரீனாவுக்கு மகப்பேறு மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த சூழ்நிலையில், அவருக்கு சால்வடார் என்று பெயரிடப்பட்டுள்ள குழந்தை பிறந்துள்ளது.
மூளைச் சாவு அடைந்த பெண்ணொருவருக்கு குழந்தை பிறப்பது போர்ச்சுகல் வரலாற்றில் இது இரண்டாவது முறையாகும்.
போர்ச்சுகளின் பிரபலமான துடுப்பு படகு வீராங்கனையான கேத்ரீனா, அந்நாட்டுக்காக பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இவர் சிறுவயதிலிருந்தே ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டு இருந்தார்.
கேத்ரீனா 19 வார கர்ப்பிணியாக இருந்தபோது, அவருக்கு ஆஸ்துமாவால் கடுமையான உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, அவர் கோமா நிலைக்கு சென்றார்.
அடுத்த சில தினங்களில் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்து மூளைச் சாவு அடைந்துவிட்டதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் தேதி மருத்துவர்கள் அறிவித்தனர். இருப்பினும், அவரது வயிற்றிலுள்ள குழந்தையின் உயிரை காப்பற்றுவதற்காக 56 நாட்களுக்கு அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.
கரு வளர்ச்சிக்குத் தேவையான காலமான 32 வாரத்தை அடைவதற்காக காத்திருந்த நிலையில், கேத்ரீனாவின் சுவாச இயக்கத்தில் பிரச்சனை ஏற்பட்டதால், அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை வெளியே எடுக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறைந்தது 32 வார கர்ப காலம் என்பது குழந்தைகள் உயிர் பிழைப்பதற்குரிய அதிகபட்ச வாய்ப்புகளை அளிக்கும் என்பதால் இதுவரை காத்திருந்ததாக மருத்துவமனை நிர்வாகத்தின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த முடிவு கேத்ரீனாவின் குடும்பத்தினருடன் ஆலோசித்து எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தன்னுடைய கல்லீரலையோ, இதயத்தையோ ஒருவருக்கு தானமாக கொடுப்பது மட்டும் தானமல்ல. ஒரு குழந்தையின் உயிரை காப்பாற்றுவதாக தன்னையே கொடுப்பதும் ஒருவிதத்தில் தானம்தான். ஒரு தாயின் முடிவை எதிர்த்து செயல்படுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை" என்று அந்த மருத்துவமனையின் நிர்வாகியான ஃபிலிப் அல்மீடா கூறினார்.
குழந்தை பிறப்பிற்கு அவரது தந்தை உள்பட குடும்பத்தினர் அனைவரும் சம்மதம் தெரிவித்தனர்.
போர்ச்சுகலில் செய்தியாளர்களிடம் பேசிய கேத்ரீனாவின் தாயார் மரீனா, தனது மகளுக்கு டிசம்பர் 26ஆம் தேதி பிரியாவிடை அளித்ததாகவும், இருப்பினும் தான் தந்தையாவதற்கு புருனோ விரும்பியதால், இத்தனை நாட்கள் அவர் செயற்கை சுவாச கருவியின் உதவியோடு வாழ்ந்ததாகவும் கூறுகினார்.
சுமார் 1.7 கிலோ எடையுடன் பிறந்த குழந்தை அடுத்த சில வாரங்களுக்கு மருத்துவமனையிலேயே இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதே போன்று கடந்த 2016ஆம் ஆண்டு போர்ச்சுகளின் தலைநகரான லிஸ்பனில் தாய் மூளைச் சாவு அடைந்த 15 வாரங்களுக்கு பிறகு குழந்தை ஒன்று பிறந்தது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்