You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிவகங்கை மக்களவைத் தொகுதி: காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் வெற்றி
(2019ஆம் ஆண்டு இந்திய மக்களவை தேர்தலையொட்டி, தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளையும் பற்றிய பிபிசி தமிழின் பார்வை)
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான கார்த்தி சிதம்பரம், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் எச். ராஜாவை 3,32,244 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
தற்போதைய ராமநாதபுரம் மாவட்டத்தை பிரித்து சீவகங்கை சீமை என்ற பெயரில் கடந்த 1984ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மாவட்டம், 1997இல் தற்போதைய சிவகங்கை என்ற பெயரை பெற்றது.
1967ஆம் ஆண்டு, அதாவது நாட்டின் நான்காவது மக்களவை தேர்தல் நடந்தபோது சிவகங்கை மக்களவை தொகுதி உருவாக்கப்பட்டது. இந்த தொகுதியில் தற்போது 15,29,698 வாக்காளர்கள் உள்ளனர்.
திருமயம், ஆலங்குடி, காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகள் சிவகங்கை மக்களவை தொகுதியின் கீழ் வருகிறது.
தொகுதியின் வரலாறு
இதுவரை சிவகங்கை கண்டுள்ள 13 மக்களவை தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது அது தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக திகழ்ந்துள்ளது தெரிகிறது.
ஏனெனில், இதுவரை சிவகங்கை தொகுதியில் எட்டு முறை போட்டியிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப. சிதம்பரம், ஏழு முறை அங்கிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அதாவது, 1984 முதல் 1996ஆம் தேர்தல் வரையிலான மூன்று தேர்தல்களில் சிவகங்கை தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்ற ப. சிதம்பரம், அதற்கடுத்து 1996 மற்றும் 1998இல் நடைபெற்ற தேர்தல்களில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்டு தொடர்ந்து ஐந்தாவது முறையாக மக்களவை உறுப்பினரானார்.
இந்நிலையில், 1999ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பாக சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட ப. சிதம்பரம் முதல் முறையாக தோல்வியை தழுவினார். அதுவும், தொடர்ந்து நான்கு முறை ப. சிதம்பரத்தை சிவகங்கை தொகுதியில் வேட்பாளராக நிறுத்திய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான சுதர்சன நாச்சியப்பனைவிட 1,18,550 வாக்குகள் குறைவாக பெற்றார்.
அதுவும் குறிப்பாக, தற்போது அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவின் சார்பாக சிவகங்கை தொகுதியில் களமிறங்கும் அக்கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா அந்த தேர்தலில் சுதர்சன நாச்சியப்பனை விட நான்கு சதவீத வாக்குகளே குறைவாக பெற்றிருந்தார் அவர். எச். ராஜாவைவிட சுமார் 1,25,000 வாக்குகள் குறைவாக பெற்றிருந்த ப. சிதம்பரத்தால் மூன்றாவது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது.
இந்நிலையில், 2001ஆம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் மூப்பனார் உயிரிழக்க, அக்கட்சியின் தலைவராக பதவியேற்ற அவரது மகன் ஜி.கே. வாசன், 2002ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸுடன் கட்சியை இணைத்தார்.
அதைத்தொடர்ந்து, 2004ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மீண்டும் இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பாக சிவகங்கை தொகுதியில் களமிறங்கிய ப. சிதம்பரம் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கருப்பையாவைவிட சுமார் 1,60,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மத்திய அமைச்சரவையிலும் இடம் பெற்றார்.
2009ஆம் ஆண்டு நடைபெற்ற 15ஆவது மக்களவை தேர்தலின்போது மீண்டும் காங்கிரஸ் கட்சியின் சார்பாக களமிறங்கிய ப. சிதம்பரம், அதிமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பனைவிட வெறும் 3,354 வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக 2014ஆம் ஆண்டு நடைபெற்ற 16ஆவது மக்களவை தேர்தலின்போது, ப. சிதம்பரத்தை ஏழு முறை நாடாளுமன்ற உறுப்பினராக்கிய சிவகங்கை தொகுதி அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு வழங்கப்பட்டது. எனினும். அத்தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனைவிட 3,71,315 வாக்குகள் குறைவாக பெற்ற கார்த்தி சிதம்பரத்தால் மூன்றாவது இடத்தையே பிடிக்க முடிந்தது.
பிரதான பிரச்சனைகள்
தமிழகத்தில் பெரும்பாலும் விவசாயத்தை சார்ந்து இருக்கும் தொகுதிகளில் சிவகங்கையும் ஒன்று. ஆனால், இந்த தொகுதியில் விவசாயத்திற்கு அடிப்படையாக விளங்கும் வைகை நதி புதர் படிந்து காணப்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
வைகை நதியை புனரமைத்து, அதிலிருந்து விவசாயத்திற்கு தேவையான பாசன வசதியை ஏற்படுத்தி தருவதுடன், ஊரக பகுதிகளில் நீடிக்கும் தண்ணீர் பிரச்சனையையும் தீர்க்க வேண்டுமென்று மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
நிலக்கரியின் மாறுபட்ட வடிவமான கிராஃபைட் சிவகங்கை பகுதியில் அதிகளவில் இருப்பது பல தசாப்தங்களுக்கு முன்னதாகவே கண்டறியப்பட்டாலும், அதை முதலாக கொண்ட தொழிற்சாலைகளும், வேலைவாய்ப்புகளும் அதிகளவில் உண்டாக்கப்பட்ட வேண்டுமென்று சிவகங்கை மக்களவை தொகுதி மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
சிவகங்கை மக்களவை தொகுதியாக மட்டுமின்றி, மாவட்ட தலைநகரமாகவும் விளங்கும் நிலையில், அதன் வழியாக செல்லும் பல்வேறு விரைவு ரயில்கள் சிவகங்கையில் நிற்பது கூட இல்லை என்றும், நகர்ப்புற பகுதிகளுடன் ஊரக பகுதிகளை இணைப்பதற்கு சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டுமென்றும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்