You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரசவம் முதல் அறுவை சிகிச்சை வரை - வலியே உணராத அதிசய பெண்
- எழுதியவர், கிளார் டைமோண்ட்
- பதவி, பிபிசி
தனது தோல் பற்றி எரியும்போது வலியை உணராத ஜோ கேமரூன், அதிலிருந்து கிளம்பும் புகை வாசத்தின் மூலமே ஒவ்வொருமுறையும் அதை உணருகிறார்.
ஜோ உள்பட உலகிலுள்ள இரண்டு பேருக்கு ஏற்பட்டுள்ள இந்த வினோதமான பிரச்சனைக்கு மிகவும் அரிதான மரபணு பிறழ்வே காரணமாகும்.
அதாவது, ஜோ தனது தோல் பற்றி எரிவதால், வலியை உணரவில்லை, பயப்படவில்லை, எதிர்மறையான எண்ணத்தை கொண்டிருக்கவில்லை. ஜோவிற்கு 65 வயதிருக்கும்போது ஒரு அறுவை சிகிச்சை நடந்தது. அந்த சமயத்தில் அவருக்கு வலி நிவாரணியே தேவைப்படவில்லை என்பதை கண்டறிந்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தனக்கு இதுபோன்ற வித்தியாசமான மரபணு அமைப்பு உள்ளது என்பதே ஜோவிற்கு அதுவரை தெரியாது.
வினோத பெண்
ஜோவின் கையில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சைக்கு பிறகு, அவருக்கு அந்த பகுதியில் தொடர் வலி இருக்குமென்று மருத்துவர்கள் எச்சரித்தனர்.
ஆனால், வலி சிறிதும் உணராத ஜோ, தனக்கு அறுவை சிகிச்சையின் போது மயக்க மருந்து அளித்த மருத்துவர் தேவ்ஜித் ஸ்ரீவஸ்தவாவை தொடர்பு கொள்ள, அவர் லண்டன் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்களிலுள்ள மரபியல் ஆராய்ச்சியாளர்களை சந்திக்குமாறு அனுப்பி வைத்தார்.
பல கட்ட ஆய்வுகளுக்கு பின்னர், ஜோவின் அசாதாரணமான உடல்நிலைக்கு அவரது மரபணுவில் ஏற்பட்டுள்ள பிறழ்வே காரணமென்பது கண்டறியப்பட்டது.
ஸ்காட்லாந்திலுள்ள இன்வெர்ன்ஸ் நகரத்தை சேர்ந்த ஜோ, தனக்கு அறுவை சிகிச்சை நடந்த பிறகு அதற்குரிய வலி நிவாரணி மாத்திரைகளே தேவைப்படவில்லை என்று தான் மருத்துவர்களிடம் கூறியபோது அவர்கள் நம்பவே இல்லை என்று கூறுகிறார்.
"என்னுடைய மருத்துவ சிகிச்சை வரலாற்றை ஆராய்ந்த மருத்துவர், இதுவரை நான் வலி நிவாரணிகளையே பயன்படுத்தவில்லை என்பதை கண்டறிந்தார்."
இதன் பிறகே, ஜோவை பிரிட்டனிலுள்ள சிறப்பு மருத்துவர்களை சென்று சந்திக்குமாறு அந்த மருத்துவர் கூறினார்.
அந்த சமயத்தில், தான் 'மிகவும் ஆரோக்கியமானவர்' என்று மட்டும் நினைக்கவில்லை என்று கூறுகிறார் ஜோ.
"என்னுடைய சென்ற கால நினைவுகளை மீட்டெடுக்கும்போது, நான் வலி நிவாரணிகளை பயன்படுத்தவே இல்லை என்பது தெரியவந்தது. நம்மை பற்றிய வித்தியாசமான ஒன்றை யாராவது ஒருவர் சுட்டிக்காட்டும்வரை அதுகுறித்து நமக்கு தெரியவதில்லை."
"நான் சற்று வித்தியாசமாக உணர்ந்தேன், அவ்வளவுதான். அதை தவிர்த்து நான் வலியை உணரவில்லை. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், நான் அந்த தருணத்தில் உற்சாகமாக இருந்தேன்" என்று தனது பிரசவ வலி குறித்து கூறுகிறார் ஜோ.
தனக்கு ஏற்பட்டுள்ள வித்தியாசமான உடல்நிலை தொடர்பாக சிகிச்சை ஒன்றும் பெற விரும்பாத ஜோ, "ஒருவருக்கு வலி என்பது காரணத்தோடுதான் இருக்கிறது. நமது இயக்கத்தில் அசாதாரணமான செயல்பாடு இருக்கும்போது அது நம்மை எச்சரிக்கிறது" என்று அவர் கூறுகிறார்.
மேலும், ஜோவால் மற்றவர்களைவிட விரைவிலேயே நோய்களிலிருந்து தீர்வு பெற முடியுமென்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த குறிப்பிட்ட மரபணு பிறழ்வு, ஜோவிற்கு மறதியை ஏற்படுத்துகிறது.
"இதற்கு மகிழ்ச்சி மரபணு அல்லது மறதி மரபணு என்று பெயர். இதன் மூலம் எனது வாழ்க்கையின் பல எதிர்மறையான நினைவுகளை மறப்பதால் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது. இது தங்களுக்கு எரிச்சலூட்டுவதாக என்னுடைய நண்பர்கள் தெரிவிக்கின்றனர்."
ஜோவின் மரபணுவை கொண்டு மற்றவருக்கு உதவ முடியுமா?
ஜோவின் கார் சமீபத்தில் விபத்தொன்றில் சிக்கியது. அந்த சூழ்நிலையில், ஒருவருக்கு இயல்பாக ஏற்படும் அதிர்ச்சி, பயம், கோபம் உள்ளிட்ட எவ்வித உணர்வும் இன்றி அங்கிருந்து கடந்து சென்றார் ஜோ.
"எனக்கு அட்ரினலின் சுரப்பதில்லை. ஒரு அசாதாரணமான சூழ்நிலை குறித்து உடலும், மனதும் எச்சரிக்கை விடுப்பது மனிதர்களுக்கு அத்தியாவசியமானது. ஆனால், என்னால் அதனை அனுபவிக்க முடியாதது வருந்தத்தக்க ஒன்றே" என்று அவர் மேலும் கூறுகிறார்.
"எங்களது கார்கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும்போது ஏற்பட்ட அதிர்ச்சியின் போதும் அவர் அமைதியாக காணப்பட்டது எனக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது" என்று அந்த விபத்தில் சிக்கிய மற்றொருவர் கூறுகிறார்.
ஜோவை போன்ற உடல்நிலையை கொண்ட பலர் உலகில் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
"அறுவை சிகிச்சைகளின்போது, வலி நிவாரணிகளை அளித்தாலும், இரண்டில் ஒருவர் மிதமானது முதல் கடுமையான வலியை உணருகின்றனர். எனவே, எங்களது ஆராய்ச்சி முடிவுகளை முதலாக கொண்டு புதிய மருத்துவ முறைகளை மேம்படுத்த இயலுமா என்று யோசித்து வருகிறோம்" என்று ஸ்ரீவஸ்தவா கூறுகிறார்.
"அறுவை சிகிச்சைக்கு பிந்தைய வலியை ஒவ்வொரு ஆண்டும் எதிர்கொள்ளும் 330 மில்லியன் நோயாளிகளுக்கு இது மிகவும் உதவிகரமாக அமையும்" என்று அவர் மேலும் கூறுகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்