'பாசிசம்' பெர்ஃப்யூம் - சமூக வலைதளங்களில் புயலை கிளப்பிய இஸ்ரேலிய விளம்பரம் மற்றும் பிற செய்திகள்

இஸ்ரேலில் வரும் ஏப்ரல் 9-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் வலது சாரி சட்ட அமைச்சர் ஒருவர் நடித்த புதிய விளம்பரம் அந்நாட்டில் சமூக வலைதள பயனர்களிடையே முக்கிய விவாத பொருளாகியிருக்கிறது.
அந்த விளம்பரத்தில் 'அதிக விலை' கொண்டது போல தோற்றமளிக்கும் ஒரு நறுமண திரவியத்தை சட்ட அமைச்சர் அயெலெட் ஷாகித் உடலில் ஸ்ப்ரே அடித்துக் கொள்கிறார். அந்த நறுமண திரவிய புட்டிக்கு 'ஃபாசிசம்' எனப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.
ஷாகெத் இது ஒரு சேட்டைத்தனமான விளம்பரம் என்கிறார் ஆனால் இது ஃபாசிசத்தை வலியுறுத்தும் விதமான விளம்பரமாக இருக்கிறது என விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.
தேர்தலை ஒட்டி சமூக வலைதளத்தில் இக்கட்சியில் பிரசாரம் செய்வதில் ஒருவரை ஒருவர் முந்தப் பார்க்கின்றனர்.
வாக்குப்பதிவுக்கு முந்தைய இரு வாரங்களுக்கு தொலைக்காட்சியில் பிரசார விளம்பரங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. ஆகவே பல்வேறு கட்சியினரும் சமூக வலைதளங்களில் தங்களது பிரசார காணொளிகளை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த காணொளியில் அப்படி என்ன தான் இருக்கிறது?
கருப்பு வெள்ளையில் தோன்றும் அந்த பிரசார காணொளியில் ஷாகித் ஒரு நறுமண திரவிய பிராண்ட் மாடலாக நடித்துள்ளார். ஒரு வசதியான வீட்டில் நடந்து வரும் அவருக்கு பின்னணியில் மெல்லிதாக பியானோ இசை ஒலிக்கிறது.
ஹீப்ரூ மொழியில் ஒரு பெண் முணுமுணுக்கிறார். நீதித்துறை சீர்திருத்தம், அதிகாரங்களை பிரித்தல், உச்சநீதிமன்றத்தை கட்டுப்படுத்துதல் போன்ற சொற்றொடர்களை அவர் முணுமுணுக்கிறார்.
பின்னர் ''ஃபாசிசம்'' என எழுதப்பட்டிருக்கும் நறுமண திரவியத்தை அடித்துக்கொள்ளும் ஷாகெத் '' எனக்கு, இது மக்களாட்சி போல வாசனை வருகிறது'' என அந்த விளம்பரத்தில் கூறுகிறார்.
அவரது தீவிர தேசியவாத அரசியலை சற்று கேலி செய்யும் விதமாக 'பரிகாச' விளம்பரம் அமைந்துள்ளது.
இதுவொரு பரிகாச விளம்பரம் எனத் தெரியாதவர்களுக்கு குறிப்பாக இஸ்ரேலுக்கு வெளியே இருப்பவர்களுக்கு இது பாசிச விளம்பரமாகவே அமையும் என்கின்றனர் விமர்சகர்கள் . சமீபத்தில் இவரும், கல்வி அமைச்சரும் ஒரு புதிய கட்சியை துவங்கியுள்ளனர்.
உலகின் செலவு மிகுந்த நகரம் எது?
உலகின் விலைவாசி மிகுந்த நகரங்களின் பட்டியலின் முப்பதாண்டுகால வரலாற்றில் முதலாவது இடத்தை மூன்று நகரங்கள் ஒருசேர பிடிப்பது இதுவே முதல் முறை.

பட மூலாதாரம், Getty Images
உலகிலுள்ள 133 நகரங்களில் வாழ்க்கைச் செலவினங்களை அடிப்படியாக கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
உலகிலுள்ள 133 முக்கிய நகரங்களில் பிரட் உள்ளிட்ட சாதாரண உணவுப்பொருட்களின் விலைவாசி உயர்வை, அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரத்தின் வருடாந்திர ஏற்ற-இறக்கத்தை அடிப்படையாக கொண்டு, அதை மற்ற நகரங்களுடன் ஒப்பிட்டு இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
சகோதரர் சிறைக்கு செல்வதை தடுக்க உதவிய உலகின் முக்கிய பணக்காரர்
தனது தம்பி அனில் அம்பானியின் கடன் தொகையை செலுத்தி, அவர் சிறை தண்டனையை தவிர்க்க உதவியுள்ளார் இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி.
தொலைத் தொடர்பு பெரு நிறுவனமான எரிக்சனோடு, ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனம் உருவாக்கிய ஒப்பந்தம் ஒன்று முறிந்த பின்னர் அது தொடர்பான குற்றச்சாட்டை அனில் அம்பானி எதிர்கொண்டார்.

பட மூலாதாரம், Getty Images
எரிக்சன் நிறுவனத்திற்கு 5.5 பில்லியன் ரூபாய் வழங்க வேண்டியதை நீதிமன்ற காலக்கெடு முடிவதற்கு முன்னால், ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனத்தால் கொடுக்க முடியவில்லை.
தனது சகோதரர் அனில் அம்பானிக்கு முகேஷ் அம்பானி உதவியிருப்பது இவ்விரு சகோதரர்களுக்கு இடையில் நிலவி வந்த நீண்டகால சண்டைகளின் புதிய திருப்பமாக வந்துள்ளது.
திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு
2019 மக்களவை தேர்தலையொட்டி திராவிட முன்னேற்ற கழகத்தில் தேர்தல் அறிக்கையை ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை அறிவித்தார். அதில் உள்ள சில அம்சங்களை வாசகர்களுக்கு தொகுத்து வழங்குகிறோம்.

பட மூலாதாரம், M K stalin/fb
- தமிழ்நாட்டில் இயங்கும் மத்திய அரசு அலுவலகங்கள் தமிழில் செயல்படும் வகையில் தமிழ் மொழியை இணை ஆட்சி மொழியாக அறிவிக்க சட்டத்திருத்தங்கள் செய்யப்படும்.
- வேளாண் துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
- மத்திய அரசின் வரி வருவாயில் 60% மாநில அரசுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும். வளர்ந்து வரும் மாநிலங்களுக்கு பாரபட்சமின்றி நிதி பங்கீடு செய்யப்பட வேண்டும்.
- மத்திய நிதிக்குழுவின் அமைப்பும் அந்த பணிகளும் மாநிலங்கள் மன்றங்களால் வரையறுக்கப்பட வேண்டும்.
- மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படும்.
அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு
மக்களவை தேர்தலையொட்டி தமிழகத்தில் அதிமுக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்னர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

பட மூலாதாரம், AIADMK/FB
அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சில அம்சங்களை இங்கே பட்டியலிடுகிறோம்.
1. மக்கள் எதிர்ப்பார்ப்பை நிவர்த்தி செய்யும் வகையில் கேபிள்/DTH கட்டணங்களை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய அரசை வலியுறுத்துவோம்.
2. வருமான வரி விலக்கு வரம்பை 8 லட்சமாக உயர்த்த வேண்டும். நிலையான கழிவை ஒரு லட்சமாக உயர்த்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தும்
3. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கூவம் ஆற்றை மேம்படுத்தவும், தேம்ஸ் நதி போல கூவம் நதியில் போக்குவரத்து மற்றும் மகிழ்ச்சி சுற்றுலா மையம் அமைத்து அழகுபடுத்த மத்திய அரசிடம் நிதி ஒதுக்க வலியுறுத்துவோம்..
4. உச்சநீதிமன்றத்தின் மண்டல அளவினை கிளை ஒன்றை தமிழகத்தில் அமைக்க வேண்டுமென மத்திய அரசிடம் கேட்டுக்கொள்வோம்.
5. சேலத்துக்கு இரவு நேர விமான சேவை ஏற்படுத்த மத்திய அரசை அதிமுக வலியுறுத்தும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












