"இந்திய நீர்மூழ்கிக் கப்பலின் ஊடுருவல் முயற்சியை முறியடித்தது பாகிஸ்தான்"

Indian Submarine இந்திய நீர் மூழ்கி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய நீர் மூழ்கிக் கப்பல் (கோப்புப் படம்)

பாகிஸ்தான் கடல் எல்லையில் நுழைவதற்கு திங்கள்கிழமை இரவு இந்திய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டதாக பாகிஸ்தான் கடற்படை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் கடற்படை செய்தித் தொடர்பாளரை மேற்கோள்காட்டி அந்நாட்டு அரசு வானொலியான ரேடியோ பாகிஸ்தான் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

அமைதியின் மீதான பாகிஸ்தானின் நாட்டம் காரணமாக அந்த இந்திய நீர்மூழ்கியைத் தாங்கள் தாக்கவில்லை என்றும் அந்த செய்தித் தொடர்பாளர் கூறியதாக ரேடியோ பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

மேலும், தங்கள் நாட்டின் கடல் எல்லையை பாதுகாப்பதில் பாகிஸ்தான் கடற்படைக்கு உள்ள வலிமையைக் காட்டுவதாக இது அமைந்துள்ளது என்றும் அந்த செய்தித் தொடர்பாளர் கூறினார் என்கிறது ரேடியோ பாகிஸ்தான்.

இந்தியாவும் பாகிஸ்தானும் மாற்றி மாற்றி எல்லையைத் தாண்டி விமானத் தாக்குதல் நடத்திய ஒரு வார காலத்தில் இந்திய நீர்மூழ்கிக் கப்பல் எல்லை தாண்ட முயன்றதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.

மேலும், இந்திய நீர்மூழ்கிக் கப்பல் தங்கள் கடல் ஊடுருவ முயல்வதைக் காட்டும் காட்சி என்று கூறி ஒரு காணொளியையும் பாகிஸ்தான் பகிர்ந்துள்ளது. இந்த காணொளியின் உண்மைத்தன்மையை பிபிசி உறுதி செய்யவில்லை.

இந்தியா மறுப்பு

பாகிஸ்தான் கூறுவது பற்றி இந்திய கடற்படையின் கருத்தை அறிய முயன்றபோது உடனடியாக பதில் ஏதும் கிடைக்கவில்லை.

ஆனால், பிறகு இந்த தகவலை பாகிஸ்தான் மேற்கொள்ளும் பொய்ப் பிரசாரம் என்று கூறி இந்திய கடற்படை மறுத்தது. இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

கடந்த சில வாரங்களில் நடந்தது என்ன?

கடந்த மாதம் (பிப்ரவரி) 14-ம் தேதி இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரின் புல்வாமாவில் இந்தியாவின் மத்திய ரிசர்வ் போலீஸ் படை அணி ஒன்றின் மீது தற்கொலை கார் குண்டு ஒன்று மோதியதில் குறைந்தது 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த அமைப்பு தங்கள் எல்லையில் இருந்து செயல்பட பாகிஸ்தான் அனுமதிப்பதாக இந்தியா குற்றஞ்சாட்டியது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி.

இதையடுத்து, பிப்ரவரி 26-ம் தேதி இந்திய - பாகிஸ்தான் கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டைத் தாண்டிச் சென்று இந்தியப் போர் விமானங்கள் குண்டு வீசின.

பாகிஸ்தான் தரப்பில் உள்ள பாலாகோட் என்ற பகுதியில் உள்ள ஜெய்ஷ்-இ-முகம்மது முகாம் மீது தாக்குதல் நடத்தியதாக இந்தியா கூறியது. ஆனால், எல்லையை மீறி வந்த இந்திய விமானங்களை பாகிஸ்தான் போர் விமானங்கள் விரட்டியடித்ததாகவும், போகிற போக்கில் இந்திய விமானங்கள் ஆங்காங்கே குண்டுகளை வீசிச் சென்றதாகவும் பாகிஸ்தான் கூறியது. அத்துடன் இந்த தாக்குதலில் யாரும் உயிரிழக்கவில்லை என்றும் அது கூறியது.

தொடக்கத்தில் இந்தத் தாக்குதலில் 400 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியத் தரப்பில் செய்திகள் வெளியானாலும், எத்தனை பேர் இறந்தார்கள் என்பதை தங்களால் கூற இயலாது என்று கூறியது இந்திய விமானப்படை.

இதற்கிடையே பதிலடியாக அடுத்த நாளே (பிப்ரவரி 27) பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தின. இந்த விமானங்களை இந்திய விமானங்கள் விரட்டிச் சென்றன. அப்போது இந்தியப் போர் விமானங்கள் இரண்டு சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் கூறியது.

ஆனால், தாங்கள் ஒரு விமானத்தையே இழந்ததாகவும், பாகிஸ்தானின் F16 ரகப் போர் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாகவும் இந்தியா கூறியது. இந்த மோதலில் சுட்டு வீழ்த்தப்பட்ட இந்திய விமானத்தில் இருந்து எஜக்ட் சாதனத்தின் உதவியோடு தம்மை விடுவித்துக்கொண்ட இந்திய விமானி விங் கமாண்டர் அபிநந்தன், பாகிஸ்தான் எல்லையில் தரையில் வீழ்ந்தார். பாகிஸ்தான் அவரை உடனடியாக தம் பிடியில் எடுத்தது.

செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் கூறிய இந்திய பாதுகாப்புப் படை தளபதிகள்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியா - பாகிஸ்தான் இரண்டும் அடுத்தடுத்த நாள்களில் எல்லை தாண்டி விமானத் தாக்குதல் நடத்தியதை அடுத்தி புது டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து இந்தியத் தரப்பின் விளக்கங்களை அளித்த, (இடமிருந்து) இந்திய ராணுவ மேஜர் ஜெனரல் சுரீந்தர் சிங் மஹால், கடற்படை ரியர் அட்மிரல் தல்பீர் சிங் குஜ்ரால், விமானப்படையின் ஏர் வைஸ் மார்ஷல் ஆர்.ஜி.கே.கபூர்.

ஆனால், அமைதியை விரும்புவதன் அடையாளமாக அவரை விடுவிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இதையடுத்து அபிநந்தன் மறுநாளே அட்டாரி - வாகா எல்லை வாயில் வழியாக இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

ஆனால், பாகிஸ்தானின் இந்த செயலை அமைதியை விரும்புவதற்கான அதன் அடையாளமாக இந்தியா ஏற்கவில்லை. போர்க் கைதிகளை நடத்தவேண்டிய விதம் தொடர்பான ஜெனீவா ஒப்பந்தத்தின் ஷரத்துப்படியே பாகிஸ்தான் நடந்துகொண்டது என்று இந்தியா கூறியது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :