You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அலுவலக கூட்டங்கள் குறித்து உங்களுக்கு மாற்று கருத்து உள்ளதா? - இந்த கட்டுரை உங்களுக்காகதான் #MondayMotivation
"ஆஃபிஸ்ல வேலை செய்யலாம்னு உட்கார்ந்தா மீட்டிங்னு அழைச்சிட்டு போயிடுறாங்க. மீட்டிங்ல என்ன வேலை செஞ்சீங்கன்னு கேட்கிறாங்க" - இது தமிழக ஐ.டி ஊழியர்கள் வாட்ஸ் ஆப் குழுக்களில் உலவும் மிகவும் பிரபலமான வசனம்.
தரவுகளை ஆராய்ந்து பார்த்தால் தமிழகத்தில் மட்டுமல்ல சர்வதேச அளவில் 'மீட்டிங்' குறித்து சொல்லாடல்கள் ஏராளமான உலவுகின்றன.
ஊழியர்களுக்கு மட்டும் இந்த கூட்டங்கள் ஒரு பிரச்சனையாக இல்லை. உண்மையில் அவை உற்பத்தியையும் குறைக்கிறது என்கிறார்கள் இது குறித்து ஆய்வு செய்பவர்கள்.
'உற்பத்தியை குறைக்கிறதா?'
முதலில் பிரிட்டன் சூழலை பார்ப்போம்.
பணியிடசூழல் குறித்து ஆய்வுசெய்து விமர்சிக்கும் ஸ்டிஃபைன் ஹாரி, "ஒவ்வொரு முறை பிரிட்டனின் உற்பத்தி குறைவை சந்திக்கும் போதும், ஏன் இவ்வாறு குறைந்தது என பொருளாதார அறிஞர்கள் வியப்பார்கள். ஆனால், அவர்களுக்கு நான் எப்படி சொல்வேன்? இதற்கு காரணம் 'மீட்டிங்' என்று" என்கிறார் அவர்.
குறிப்பாக 'வீடியோ கான்ஃபரன்சிங்' மற்றும் 'கான்ஃபரன்ஸ் கால்' குறித்த அவரது பார்வை மிகவும் கடுமையானதாக இருக்கிறது. இந்த கூட்டங்களில் முதல் சில நிமிடங்கள் தொழில்நுட்ப ரீதியான விஷயங்களை சரி செய்வதிலேயே போய்விடும் என்கிறார்.
எந்த செயல் திட்டமும் இல்லாமல் நடக்கும் கூட்டங்கள், எந்த முடிவும் எடுக்காமல் முற்றுபெறும் கூட்டம் ஆகியவை குறித்து தனது கவலையை வெளிப்படுத்துகிறார் ஹாரி.
வாழ்க்கையில் இனி எப்போதும் திரும்ப வராத தருணங்கள் அவை என்கிறார்.
ஹாரி மட்டுமல்ல எலான் முஸ்க்கும் இந்த கூட்டங்கள் குறித்து தன் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்.
'வெளிநடப்பு செய்யுங்கள்'
உற்பத்தியை மேம்படுத்த தேவையற்ற அலைபேசி அழைப்புகளையும், கூட்டங்களையும் குறையுங்கள் என கடந்தாண்டு எலான் முஸ்க் வலியுறுத்தி இருந்தார்.
உற்பத்தியை மேம்படுத்த அவர் சில ஆலோசனைகளையும் பட்டியலிட்டு இருந்தார்.
அவை,
- நீண்ட கூட்டங்களை ரத்து செய்யுங்கள் அல்லது அவற்றை சிறிய கூட்டங்களாக மாற்ற முயற்சி செய்யுங்கள்.
- அலுவலக கூட்டங்கள் பயனற்றவையாக இருந்தால், அதிலிருந்து வெளிநடப்பு செய்யுங்கள்.
- சில சட்டத் திட்டங்களை பின் பற்றுவது முட்டாள்தனமானது என்று நீங்கள் நம்பினால், அவற்றை கைவிடுங்கள் என்கிறார்.
இது அவர் தன் நிறுவன ஊழியர்களுக்கு சொல்லியது என்றாலும் இது அனைவருக்கும் பொருந்தும்.
'அமேசான் நிறுவன தலைவர்'
இந்தக் கூட்டங்கள் தொடர்பாக அமேசான் நிறுவன தலைவர் ஜெஃப்பின் கருத்து வேறு விதமாக இருக்கிறது.
- ஜெஃப் காலை பத்து மணிக்கு முன்பு கூட்டங்கள் நடத்துவது இல்லை.
- அவர் நடத்தும் கூட்டத்தின் நேர அளவு குறைவானதாக இருக்கும்.
- அவர் பவர்பாயின்டையும் தனது கூட்டங்களில் தடை செய்திருக்கிறார்.
இவர்கள் சொல்வதை எல்லாம் கடந்து இன்னொரு விஷயம் இருப்பதாக சுட்டி காட்டுகிறார் ஹாரி.
பெரும்பாலும் கூட்டங்களில் பெண்களின் கருத்துகளுக்கு உரிய இடமளிக்கப்படுவதில்லை என்கிறார்.
'கூட்டங்களை சிறப்பாக நடத்துவது எப்படி?'
கூட்டங்கள் சிறப்பாக நடத்துவது எப்படி என்பது குறித்து சில ஆலோசனைகளையும் வழங்கிறார் ஹாரி.
- பெண்கள் தங்கள் கருத்துகளை பகிர்வதற்கு ஏதுவாக கூட்டத்தினை நடத்துங்கள்.
- சிலருக்குக்கு சொல்வதற்கான கருத்துகள் நிறைய இருக்கும். ஆனால், அவர்களால் பேச முடியாது. அவர்களுக்கான சூழலை ஏற்படுத்தி தாருங்கள்.
- இதற்கெல்லாம் மேலாக இந்த கூட்டம் அவசியமா என்று சக ஊழியர்களுடன் ஆலோசனை நடத்துங்கள்.
இறுதியாக ஒன்று, உண்மையில் ஒருவர் கூட்டம் பிடிக்காமல் வெளியேறினால், அதனை தனிப்பட்ட முறையில் எடுத்து கொள்ளாதீர்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்