You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இரண்டு தந்தையர், ஒரு தாய், இரட்டை குழந்தைகள்: எப்படி சாத்தியமானது?
அலெக்ஸாண்டிரியா மற்றும் கால்டர் 19 மாத இரட்டை குழந்தைகள். ஒரு தாயின் வயிற்றில் பிறந்த இவர்கள் இருவருக்கும் வெவ்வேறு தந்தையர். இது எப்படி முடியும்?
சைமன் மற்றும் கிரெமி பெர்னி-எட்வர்ட்ஸ் இருவரும், குழந்தை பெற்றெடுத்து தந்தையாக மாற வேண்டுமென முடிவு செய்தார்கள்.
இந்த முடிவை நிறைவேற்ற பெரியதொரு கடமை அவர்கள் முன்னிருந்தது.
இருவரும் தங்களின் விந்தை எடுத்து தனித்தனி பெண் கருவோடு சேர்த்து கருத்தரிக்க செய்தனர்.
அவ்வாறு, செயற்கை கருத்தரிப்பு மூலம் கருத்தரித்த கரு முட்டைகள் இரண்டையும் ஒரு வாடகை தாயின் கருப்பையில் ஒரே நேரத்தில் வைத்து வளர செய்தனர்.
இந்த செயல்முறையை தொடங்குவதற்கு முன்னால், நீண்ட, சிக்கலான வழிமுறையை அவர்கள் எதிர்கொண்டனர்.
தொடக்கத்தில், இரு வேறு மகபேறு வழியாக, தங்களுக்கு இரண்டு குழந்தைகளை பெற்றெடுக்கலாம் என்று இவர்கள் எண்ணினர்.
ஆனால், இவர்களுக்கு கரு முட்டை வழங்குகின்ற கொடையாளியை கண்டறிய உதவிய நிறுவனம், ஒரே நேரத்தில் ஒரே வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளை பெற்றெடுப்பது சாத்தியமே என்று தெரிவித்தது.
சைமன் மற்றும் கிரெமி இருவரும் பிரிட்டனை சேர்ந்தவர்களாக இருந்தாலும், இதற்கான உதவி பெற வெளிநாடு சென்றனர்.
"நல்ல வேளையாக, பெயர் தெரியாத ஒருவரின் கரு முட்டையை தானமாக பெற்றோம்" என்று தெரிவிக்கும் சைமன், "லாஸ் வேகாஸில் எங்களின் கருவள சிகிச்சை நடைபெற்றதே இதற்கு காரணமாகும்" என்கிறார்.
தானமாக பெற்று கொண்ட கரு முட்டைகளை இரண்டு குழுக்களாக பிரித்தனர். பாதி சைமனின் விந்தணுவை கொண்டு கருத்தரிக்க செய்யப்பட்டன.
இன்னொரு பாதி கரு முட்டைகள் கிரெமியின் விந்தணுவை பயன்படுத்தி கருத்தரிக்க செய்யப்பட்டன.
இந்த கரு முட்டைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் அனைத்தும் பரிசோதனை செய்யப்பட்டன. அதன் பின்னர் உறைநிலையில் வைக்கப்பட்டன.
இந்த இரண்டு பகுதிகளிலும் கருத்தரித்த கருவில் இருந்து, மிகவும் வலிமையான ஒவ்வொன்றை எடுத்து கனடா நாட்டை சோந்த வாடகை தாயின் கருப்பையில் வைத்து மருத்துவர்கள் வளர செய்தனர்.
கனடா வாடகை தாய்
இவ்வாறு, கருத்தரித்த இரண்டு கரு முட்டைகளும் ஒரே தாயின் கருப்பையில் வளர்ந்தன. ஆனால், அவை இரண்டுக்கும் வெவ்வேறு தந்தையர்.
சைமன் மற்றும் கிரெமிக்கு வாடகை தாயாக இருந்து மகபேற்றுக்கு ஒப்புக்கொண்ட கனடா நாட்டை சேர்ந்த மென் ஸ்டோன் என்பவரின் கருப்பையில் இந்த இரு கருக்களும் வளர்ந்தன.
"நாங்கள் இந்த நாட்டின் சட்ட கட்டமைப்பை விரும்பியதால், கனடா நாட்டை தேர்ந்தெடுத்தோம். பிரிட்டனிலுள்ள நிலைமையை போன்றுதான் இங்குள்ளது. பொதுநலம் மிக்கது. வணிகமானதாக இது இல்லை" என்று சைமன் தெரிவிக்கிறார்.
பின்னர், இந்த தந்தையர் இருவரும் பிரிட்டன் சென்றுவிட்டனர். கனடாவில் இருந்து நல்ல செய்திக்காக காத்திருந்தனர். இந்த மகப்பேறு வெற்றிகரமாக அமையுமா?
கடைசியில், அவர்கள் காத்திருந்த செய்தி தொலைபேசி வழியாக வந்தது.
"நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம். மிகவும் சந்தோஷபட்டோம். வானில் மிதப்பதுபோல இருந்தது" என்கிறார் கிரெமி.
பிரிட்டனில் இருந்து கொண்டே இந்த மகப்பேற்றை பற்றி தகவல் அறிந்து வந்த சைமனும், கிரெமியும், குழந்தைகள் பிறப்பதற்கு ஆறு வாரங்களுக்கு முன்னர் மீண்டும் கனடாவுக்கு சென்றனர்.
கரு முட்டையை தானமாக கொடுத்தவரிடம் குழந்தைகள் இணைய முடியாது என்பதால், வாடகை தாயோடு நல்லுறவை பராமரித்து கொள்வதில் இந்த இரு தந்தையரும் மிகவும் உறுதியாக இருந்தனர்.
சரி, இதற்கு மேல் குழந்தைகள் பெற்று கொள்ள இவர்கள் விரும்புவார்களா?
ஒவ்வொருக்கும் தலா ஒரு குழந்தை கிடைத்து விட்டதே சைமனையும், கிரெமியையும் மிகவும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திவிட்டதால், இது பற்றி யோசிக்காமல் இருக்கலாம்.
ஆனால், "ஒருபோதும் வேண்டாம் என்று ஒருபோதும் சொல்ல வேண்டாம்" என்று சொல்லி புன்னகைக்கிறார் சைமன்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்