You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சுற்றுச்சூழல் பாதிப்பு: மனித குல வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவு அழிவு
- எழுதியவர், ரோஜர் அராபின்
- பதவி, பிபிசியின் சுற்றுச்சூழல் ஆய்வாளர்
பிபிசி தமிழில் 2018 பிப்ரவரி மாதம் வெளியான கட்டுரை இது. இப்போது மீண்டும் இதனை பகிர்கிறோம்.
இந்தப் புவியை நோக்கி வரும் சுற்றுச்சூழல் ஆபத்தின் தீவிரத்தை அரசியல்வாதிகளும், அதிகாரத்தில் உள்ளவர்களும் பார்க்கத் தவறிவிட்டதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
பொது கொள்கைக்கான ஆராய்ச்சி நிறுவனமான ஐபிபிஆர்-இன் அறிக்கை, மனிதர்களின் தாக்கம், சமூதாயத்தையும், உலகப் பொருளாதாரத்தையும் சீர்குலைக்கும் அளவுக்கு ஆபத்தில் உள்ளதாகத் தெரிவிக்கிறது.
இதற்குப் பலவிதமான காரணங்களை அடுக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
பருவநிலை மாற்றம், பலவகையான உயிரினங்கள் அழிந்து போதல், மண் அரிப்பு, பெருங்கடல்களில் அமிலத் தன்மை அதிகரித்தல், மற்றும் காடுகள் அழிப்பு ஆகியவை குறித்து பெரும் எச்சரிக்கைகளை விடுக்கின்றனர் விஞ்ஞானிகள்.
இந்தக் காரணங்கள் சுற்றுச்சூழலை பெரும் சீரழிவுக்கு இட்டு வருவதாகவும், அது ஆபத்தான நிலைக்கு சென்றுவிட்டதாகவும், ஐபிபிஆர் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தச் சுற்றுச்சூழல் சீரழிவு மனித வரலாற்றில் முன்னேப்போதும் இல்லாத அளவுக்கு ஏற்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
என்ன செய்யவேண்டும் நாம்?
"இந்தப் பேரழிவுகளைத் தடுப்பதற்கான வாய்ப்புகள் அதிவேகமாக மங்கிவருகிறது" என்கிறது ஐபிபிஆர் அறிக்கை.
2005ஆம் ஆண்டிலிருந்து இந்த உலகில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு 15 மடங்காகவும், தீவிரமான வெப்பநிலை 20 மடங்கும், காட்டுத்தீ சம்பவங்கள் ஏழு மடங்கும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர் விஞ்ஞானிகள்.
பருவநிலை மாற்றம் குறித்து கொள்கை உருவாக்கத்தின்போது விவாதிக்கப்படுகிறது. ஆனால் வேறு சில காரணங்கள் பெரிதும் கருத்தில் கொள்ளப்படுவதில்லை.
கருத்தில் கொள்ளப்படாத விஷயங்கள் என்னென்ன?
நிலத்தில் உள்ள மண் மிக வேகமாக அதாவது 10-40 மடங்கு வேகமாக அழிக்கப்படுகிறது. ஆனால் இது இயற்கையான முறையில் மீண்டும் உருவாக்கப்படும் அளவைக் காட்டிலும் மிக அதிகம்.
20ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதிகளிலிருந்து இந்த மண் அரிப்புகளால் 30 சதவீத பயிர் நிலங்கள் பயிர் செய்ய ஏதுவான நிலையை இழந்துள்ளன.
2050ஆம் ஆண்டிற்குள், புவியில் உள்ள 95 சதவீத நிலப்பகுதியின் தரம் குறைந்து விடும்.
மூன்று விஷயங்கள் குறித்தான புரிதலுக்கு நாம் வரவேண்டும்
1.சுற்றுச்சூழல் பாதிப்பின் அளவு மற்றும் வேகம்
2.சமூகத்தில் ஏற்படும் தாக்கங்கள்
3.மாற்றத்திற்கான தேவை
உலகில் உள்ள பல விஞ்ஞானிகள், நாம் ஒரு புதிய சுற்றுச்சூழல் மாற்றத்தில் நுழைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
மனிதர்களின் செயல்களால் ஏற்பட்டு வரும் சுற்றுச்சூழல் பேரழிவின் அளவு, வேகம் ஆகியவற்றின் தீவிரத்தன்மையை கோடிட்டுகாட்ட இந்த யுகத்தை சுற்றுச்சூழல் பேரழிவின் யுகம் என்று ஐபிபிஆரின் அறிக்கை எச்சரிக்கிறது.
சுற்றுச்சூழல் மாற்றம் முந்தைய காலத்தைக் காட்டிலும் மிக வேகமாக ஏற்படுகிறது என்றும், அது சமூதாயத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது என்றும் ஐபிபிஆர் கூறுவது சரியே என லண்டன் பல்கலைக்கழக்கத்தின், க்ளோபல் சேஞ் சயின்ஸ் பேராசிரியர் சைமன் லீவிஸ் தெரிவிக்கிறார்.
"உணவுப் பொருள்களில் விலையேற்றம் அதனால் மக்கள் மத்தியில் பதற்றம் என எதிர்காலத்தில் பிரச்சனைகள் ஏற்படும். மேலும் மக்கள் இடம் பெயர்தல் அதிகமாக நடைபெறும் அதனால் சமூகத்தில் சச்சரவுகள் ஏற்படும்."
"இவை அரசியல் ரீதியாகவும் பதற்றங்களை ஏற்படுத்தும்," என்கிறார் சைமன்.
இந்த நூற்றாண்டில் அதிவேகமான சமூக மற்றும் சுற்றுச்சூழல் மாற்றம் ஏற்படுகிறது என்பதில் மாற்றம் இல்லை. ஆனால் இந்தப் பேரழிவுகளைத் தடுக்க அரசியல் ரீதியான தீர்வுகள் எடுக்கப்படுமா என்பதுதான் தெளிவாக இல்லை.
துர்ஹம் பல்கலைக்கழகத்தின் புவியியல் பேராசிரியரான ஹாரியட் பல்கேலி, "தற்போதைய சூழ்நிலை பாதிப்பை இந்த அறிக்கை காட்டுகிறது," என்கிறார்.
"பல சமயங்களில் நாம் நிறைய நல்ல விஷயங்களை செய்ய வேண்டும் என நினைக்கிறோம். ஆனால், அரசு கொள்கைகள் ஆதாரங்களை கொண்டு அமைக்கப்பட வேண்டியுள்ளது."
"எனவே அரசியல் ரீதியான கொள்கைகள் மேற்கொள்ள இது ஒரு சாக்காக கூறப்படுகிறது. அரசியல் ரீதியான கொள்கைகளில் மாற்றங்களை கொண்டுவர இன்னும் எந்த மாதிரியான ஆதாரம் தேவை என்பதே எனது கேள்வி," என்கிறார் ஹாரியட்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :