You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
OCEANS 11 பட பாணியில் வங்கியில் களவாடுவதற்கு பாதாள சாக்கடையை பயன்படுத்திய கொள்ளையர்கள்
பெல்ஜியத்தில் ஆன்ட்வெர்ப்பின் வைர வர்த்தக மாவட்டத்தில் ஒரு வங்கியில் கொள்ளையடிப்பதற்கு பாதாள சாக்கடை வழியாக சுரங்கம் அமைத்துள்ளனர் கொள்ளையர்கள்.
கொள்ளை நடந்திருப்பதற்கான சாத்தியம் அறிந்து ஞாயிற்று கிழமை காவல்துறை வங்கிக்குச் சென்றது. அப்போது வங்கியின் கதவுகள் பூட்டப்பட்டிருந்தபோதும் அதினுள்ளே இருந்த 30 டெபாசிட் பெட்டிகள் காலியாக இருந்தன.
பாதாள சாக்கடை குழாய்களின் அகலம் 40 செ.மீ தான். கொள்ளையர்கள் அந்த குறுகிய குழாய் வழியாக நெருக்கிக்கொண்டு சென்று இன்னொரு சுரங்கம் தோண்டி வங்கியை அடைந்திருக்கின்றனர்.
வங்கியில் எவ்வளவு பணம் திருடுபோனது என்பதைப் பற்றி காவல்துறை இன்னமும் அறிவிக்கவில்லை.
தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த பொறியியலாளர் எல்ஸ் லீகின்ஸ் இது குறித்து கூறுகையில், இந்த திருட்டு மிகவும் சிக்கல் வாய்ந்தது என்றார்.
'' முதலில் பாதாள சாக்கடையை நோக்கி சுரங்கம் தோண்ட வேண்டும். இது திருடர்களுக்கு மிகவும் அபாயகரமானது. ஏனெனில் நில அடுக்கு கீழ் நோக்கி நகரக்கூடும். பாதாள சாக்கடைக்குள் பல்வேறு வகையான அபாயம் உண்டு. கழிவு நீரில் இருந்து செறிவுமிக்க வாயுக்கள் வெளியே வரும். இதில் இருந்து திருடர்கள் எப்படி உயிருடன் தப்பினார்கள் என்பதே தெரியவில்லை'' என்றார்.
வங்கியிடம் இருந்து சரியான தகவல் கிடைக்காததால் வங்கி பயனாளர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள். சிலர் தங்களது டெபாசிட் பெட்டகத்தில் தங்களது வாழ்நாள் சேமிப்புகள் இருந்ததாக தெரிவிக்கின்றனர்.
வெறும் பணம் அல்லது நகை மட்டும் மக்கள் அப்பெட்டகத்தில் வைக்கவில்லை. குடும்ப சொத்துக்களும் அதில் இருந்தன என்கிறார் ஒருவர்.
இதே போன்ற கொள்ளை 1976-ல் பிரெஞ்சு நகரமான நைசில் நடந்தது. ஒரு கொள்ளை கூட்டம் பல மாதங்கள் செலவழித்து பாதாள சாக்கடை வழியாக சுரங்கம் தோண்டி ஒரு வங்கியின் 200 பாதுகாப்பு பெட்டகங்களையும் கொள்ளையடித்தனர். இதில் மில்லியன் கணக்கிலான டாலர்கள் கொள்ளை போனது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :