You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நேபாளத்தில் 'மாதவிடாய்' காரணமாக தனிக்குடிசையில் வைக்கப்பட்ட பெண் மூச்சுத்திணறி மரணம்
21 வயது நேபாள பெண் ஒருவர் மாதவிடாய் காரணமாக தனிக்குடிசையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், குளிருக்காக தீ மூட்டியதால் மூச்சுத்திணறி இறந்துள்ளார் என நேபாள நாட்டின் காவல்துறை தெரிவித்துள்ளது.
பார்வதி போகதியை பார்க்க வந்தபோது குடிசையில் பார்வதி இறந்து கிடந்தது தெரியவந்ததாக அவரது மாமியார் தெரிவிக்கிறார்.
நாளை தனது மாதவிடாய் முடிந்துவிடும் மீண்டும் வீட்டுக்குத் திரும்பிவிடலாம் என அவர் உற்சாகமாக இருந்திருக்கிறார். ஆனால் அவருக்கு சோகமான முடிவு கிடைத்துள்ளது. '' பாவம், அவள் நிரந்தரமாக கண்ணை மூடிவிட்டாள்'' என காத்மண்டு போஸ்டுக்கு லட்சுமி போகதி தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் இதே போன்றதொரு சம்பவத்தில் ஒரு தாய் தனது இரண்டு ஆண் குழந்தைகளோடு இறந்தநிலையில், மாதவிடாய் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட லட்சுமி இறந்துள்ளார்.
உள்ளூர் காவல்துறை அதிகாரி லால் பகதூர் தமி ஏ எஃப் பியிடம் இந்த விவகாரம் குறித்து பேசியபோது '' ஜன்னல்களற்ற தனி குடிசையில் வைக்கப்பட்டிருந்த அப்பெண், குடிசையின் கதவுகள் மூடப்பட்டிருந்த நிலையில், இரவு நேரத்தில் குளிர் தாங்கமுடியாமல் நெருப்பு மூட்டிய பின்னர் மூச்சு திணறி நெருப்பு புகை காரணமாக இறந்திருக்கலாம் என நாங்கள் சந்தேகப்படுகிறோம்'' எனக் கூறியுள்ளார்.
பழமையான நடைமுறையான சாவுபடி எனும் வழக்கத்தின்படி பெண்கள் மாதவிடாய் காலகட்டத்தில் இருந்தாலோ அல்லது குழந்தையை பிரசவித்த அடுத்த சில தினங்களிலோ அசுத்தமானவர்களாக பார்க்கப்படுவர். மேலும் துரதிருஷ்டத்தை கொண்டவர்களாக கருதப்படுவர்.
அவர்கள் தனி குடிசையில் அல்லது மாட்டு பண்ணைகளில் சென்று உறங்க வேண்டும். இந்நாள்களில் சில உணவுகளை தொடுவதற்கோ அல்லது சில மதம் சார்ந்த சின்னங்களை தொடுவதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆண்களையும் தொடக்கூடாது.
அந்த குடிசைக்குள் மிகவும் அதிகளவு குளிர் நிலவும் மேலும் குடிசைக்குள் இருப்பவர்களை குற்றவியல் சம்பவங்களில் ஈடுபடுபவர்களின் தாக்குதல்களுக்கும் உள்ளாகின்றனர். மூச்சுத் திணறி இறந்தது போன்ற பல சம்பவங்கள் கடந்த காலங்களில் நடந்துள்ளன. பதின்வயது பெண் ஒருவர் பாம்பு கடித்து மரணமடைந்தார்.
மாதவிடாய் உள்ள பெண்களை தீட்டாக பார்ப்பது இந்து மதத்தின் பழங்கால வழக்கம். நேபாளத்தில் மத சடங்காக கருதி இதனை மக்கள் நடைமுறைப்படுத்தி வந்தநிலையில், மாதவிடாயின் போது பெண்களையும், பதின் பருவ இளம் பெண்களையும் வீட்டை விட்டு தனி குடிசையில் வைக்கும் வழக்கத்தை நேபாளம் தடை செய்திருந்தது.
மேலும் கடந்த 2017-ம் ஆண்டு இந்நடைமுறையை குற்றம் என கூறி சட்டப்படி தடை செய்தது. ஆனால் இன்னமும் கிராம பகுதியில் இந்த வழக்கம் இருக்கிறது.
கடந்த மாதம் நேபாளத்தில் ஒரு தாயும் அவரது இரு மகன்களும் இந்த நடைமுறையின் விளைவால் இறந்த நிலையில், பஜுரா மாவட்ட கிராமங்களில் இது போன்ற தனி குடிசைகளை அகற்ற அதிகாரிகள் முயற்சி எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
நேபாளத்தில் சட்டவிரோதமான இந்த செயலில் ஈடுபடும் நபர்களுக்கு மூன்று மாத சிறை தண்டனை மற்றும் 30 டாலர்கள் அபராதம் விதிக்கப்படும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :