You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மம்தா பானர்ஜி தர்ணா- காவல் ஆணையர் சிபிஐக்கு ஒத்துழைக்க வேண்டும்
கொல்கத்தா காவல் ஆணையரை சிபிஐ விசாரிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், காவல் ஆணையர் சிபிஐக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றம், கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் மேற்கு வங்க அரசுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது.
ராஜீவ் குமார் சிபிஐக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும், ஷிலாங்கில் உள்ள சிபிஐ அலவலகத்தில் அஜராக வேண்டும் என்றும் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம் காவல் ஆணையரை கைது செய்ய இயலாது என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த வழக்கு பிப்ரவரி 20ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சாரதா நிதி நிறுவன மோசடி
சாரதா நிதி நிறுவன மோசடி மற்றும் ரோஸ் வேலி ஆகிய வழக்குகளில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்திற்கு சி.பி.ஐ அதிகாரிகள் கடந்த ஞாயிறு மாலை சென்றனர். அங்கு, சி.பி.ஐ அதிகாரிகளை கொல்கத்தா போலீசார் தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர், சி.பி.ஐ அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர்.
இதனையடுத்து, காவல் ஆணையர் ராஜீவ் குமார் வீட்டில் ஆலோசனை நடத்திய முதல்வர் மம்தா , கூட்டாட்சி முறையை பாதுகாக்க வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். உடனடியாக, கொல்கத்தா மெட்ரோ சாலைப் பகுதியில் தர்ணாவையும் தொடங்கினார். அவருடன் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் உள்ளிட்டோர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து உடனடியாக விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மனு தொடுத்தது.
மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மேற்கு வங்காள போலிஸ் ஆணையர் ராஜீவ் குமார் சாட்சியங்களை அழிக்க முயற்சிக்கிறார் என்ற சிபிஐயின் கூற்றிற்கு ஆதாரங்களை சேர்க்குமாறு சிபிஐயிடம் கோரியது.
மம்தா பானர்ஜியின் தர்ணாவுக்கு ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :