You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
#CBIVsMamta 'நீயா நானா' போட்டியில் மம்தா - சிபிஐ: யார் மீது தவறு?
- எழுதியவர், அபர்ணா ராமமூர்த்தி
- பதவி, பிபிசி தமிழ்
மேற்கு வங்கத்தில் மாநில அரசு மற்றும் சிபிஐ இடையே நடைபெறும் மோதல் நாட்டிற்கு நிச்சயம் நல்லதல்ல என்கிறார் பிபிசி தமிழடம் பேசிய முன்னாள் சிபிஐ சிறப்பு இயக்குநரான டி ஆர் கார்த்திகேயன்.
"இது மிகவும் வருந்தத்தக்க சம்பவம். இதனை நடக்காமல் தவிர்த்திருக்கலாம்" என்று அவர் கூறுகிறார்.
சாரதா நிதி நிறுவன மோசடி மற்றும் ரோஸ் வேலி ஆகிய வழக்குகளில் கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்திற்கு சி.பி.ஐ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை மாலை சென்றனர். அங்கு, சி.பி.ஐ அதிகாரிகளை கொல்கத்தா போலீசார் தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர், சி.பி.ஐ அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், மேற்கு வங்க அரசு மற்றும் சிபிஐ இடையேயான விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாதி போன்ற கட்சிகள், இந்தியாவின் மத்திய புலனாய்வு அமைப்பை (சிபிஐ) மோதி அரசாங்கம் தவறாக பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டின.
இவ்விவகாரம் தொடர்பாக பேசிய முன்னாள் சிபிஐ இயக்குநரான கார்த்திகேயன், "இது ஒன்றும் புதிய வழக்கமல்ல. அனைத்து சட்டங்களுக்கும் உட்பட்டே சிபிஐ நடந்து கொண்டிருக்கிறது. என்னைக் கேட்டால், ஞாயிற்றுக்கிழமையன்று காவல்துறை ஆணையர் வீட்டிற்கு அப்படி சென்றிருக்க வேண்டுமா? என்பதுதான். அவர்கள் செய்தது சரிதான் என்றாலும், வேறு நடைமுறையை பயன்படுத்திருக்கலாம். புத்திசாலித்தனமாக அணுகியிருக்க வேண்டும். வேலை நாட்களில் பணியிடத்திற்கு சென்று இருக்கலாம். அல்லது நீதிமன்றம் வழியாக உத்தரவு பெற்ற பின்பு சென்று இருக்கலாம். ஆனால், சிபிஐ செய்தது சட்டப்படி தவறில்லை" என்று தெரிவித்தார்.
மம்தா பானர்ஜியின் போராட்டம் அரசியல் சார்ந்தது என்றும் அதுகுறித்து கருத்துக்கூற விரும்பவில்லை என்றும் கார்த்திகேயன் கூறினார்.
சட்டம் என்ன சொல்கிறது?
The Delhi Police Establsihment (DSPE)Act, 1946படி, ஒரு மாநிலத்தில் உள்ள குற்றங்களை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றால், அதற்கு அந்த குறிப்பிட்ட மாநில அரசின் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால், முதலில் ஒப்புதல் அளித்து பின்னர் அதனை விலக்கிக் கொண்டால், அந்த சூழலில் சிபிஐ விசாரிக்க முடியாது என்கிறார் பிபிசி தமிழிடம் பேசிய சட்ட விவகார செய்தியாளர் ஜெ. வெங்கடேசன்.
"ஆனால், இதற்கு விதிவிலக்கு உண்டு. நீதிமன்றம் தலையிட்டு விசாரிக்க அனுமதி அளித்தால், மாநில அரசு தலையிட முடியாது."
உதாரணமாக தமிழகத்தில் குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க மாநில அரசு ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால், உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது.
சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதால், மாநில அரசு அதனை தடுக்க முடியாது என்று வெங்கடேசன் கூறுகிறார்.
"கூட்டாட்சி அமைப்புக்கு விழுந்த பெரிய அடி"
இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிரபல வழக்கறிஞரும், அரசமைப்பு வல்லுநருமான இந்திரா ஜெய்சிங், "இது கூட்டாட்சி அமைப்புக்கு விழுந்த பெரிய அடி" என்று தெரிவித்துள்ளார்.
"குற்றங்களை விசாரிக்க சிபிஐ-க்கு அளித்த ஒப்புதலை மேற்குவங்க அரசு விலக்கிக் கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை மத்திய அரசால் கூட்டாட்சி முறை மீது நடத்தப்பட்ட நேரடி தாக்குதல்" என்று ட்வீட் செய்துள்ளார்.
உச்சநீதிமன்ற வழக்கறிஞரும், அரசமைப்பு வல்லுநரான சூரத் சிங் பிபிசி இந்தியிடம் பேசுகையில், "சிபிஐ இன்று உச்சநீதிமன்றம் சென்றுள்ளது. மேற்கு வங்க போலீஸார் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று முன்னதாகவே நீதிமன்றம் சென்றிருக்கலாமே. மூத்த அதிகாரியை ஒரு கிரிமினல் போல நடத்தினால், அது எப்படி சட்டப்படி சிரியாகும்? சிபிஐ ஒரு தன்னிச்சையான அமைப்பு என்பதை முதலில் மத்திய அரசும் சிபிஐ-யு ம் தெரிந்து கொள்ள வேண்டும்" என்று கூறுகிறார்.
சிபிஐ-க்கு புதிய இயக்குநர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் விரைவில் பொறுப்பேற்க உள்ளார். அதற்குள் என்ன அவசரம்? என்று கேள்வி எழுப்புகிறார் பிபிசி இந்தி சேவையிடம் பேசிய சிபிஐ முன்னாள் கூடுதல் இயக்குநர் என் கே சிங்.
நீதிமன்றத்தில் துஷர் மேதா வாதாடுகையில், கொல்கத்தா காவல் ஆணையர் ராஜிவ் குமாருக்கு இந்த விசாரணைக்காக 4 முறை சம்மன் அனுப்பப்பட்டும், எந்த பதிலும் இல்லை என்று குறிப்பிட்டார்.
மேலும், ராஜீவ் குமார் இது தொடர்பான ஆதாரங்களை அழித்துவிடுவார் என சிபிஐ அஞ்சுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
செவ்வாயன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இந்த விசாரணை தொடங்க உள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :