You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மம்தா பானர்ஜி ஏன் தர்ணாவில் அமர்ந்தார்? யார் இந்த ராஜீவ் குமார்?
- எழுதியவர், அமிதாப் பட்டாசாலி
- பதவி, பிபிசி செய்தியாளர்
மேற்கு வங்க காவல்துறை மற்றும் சி.பி.ஐ இடையேயான சச்சரவு நேற்றைய பின்மாலை பொழுதின் தலைப்புச் செய்திகள் ஆகின.
வழக்கமான ஞாயிற்றுக்கிழமையாக இருந்திருக்க வேண்டிய நாள், இந்த சச்சரவால் அரசியல் வரலாற்றில் முக்கிய நாளாக ஆகிபோனது.
என்ன நடந்தது?
சாரதா நிதி நிறுவன மோசடி மற்றும் ரோஸ் வேலி ஆகிய வழக்குகளில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்திற்கு சி.பி.ஐ அதிகாரிகள் நேற்று மாலை சென்றனர். அங்கு, சி.பி.ஐ அதிகாரிகளை கொல்கத்தா போலீசார் தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர், சி.பி.ஐ அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர்.
இதனையடுத்து, காவல் ஆணையர் ராஜீவ் குமார் வீட்டில் ஆலோசனை நடத்திய முதல்வர் மம்தா , கூட்டாட்சி முறையை பாதுகாக்க வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். உடனடியாக, கொல்கத்தா மெட்ரோ சாலைப் பகுதியில் தர்ணாவையும் தொடங்கினார். அவருடன் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் உள்ளிட்டோர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
கொல்கத்தாவில் பாஜக அரசுக்கு எதிராக தர்ணாவில் ஈடுபட்டு வரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி "நாட்டை காப்பாற்றும் வரை தனது தர்ணா தொடரும்" என தெரிவித்துள்ளார்.
இதை கூர்ந்து கவனித்தோமானால் இந்த தர்ணா, இந்த அரசியல் பரபரப்பு அனைத்தும் ராஜிவ் குமார் எனும் ஒற்றை மனிதரிடமிருந்துதான் தொடங்கி இருக்கிறது.
சரி. யார் இந்த ராஜிவ் குமார்?
ராஜிவ் குமார் 1989ஆம் ஆண்டு, மேற்கு வங்க பிரிவை சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி. அவர் தற்சமயம் கொல்கத்தா போலீஸ் ஆணையராக பணியாற்றுகிறார்.
ராஜிவ் குமார் உத்தர பிரதேச மாநில அஜாம்கார்க் மாவட்டத்தில் பிறந்தவர். ஐ.ஐ.டி கான்பூரில் கணினி துறையில் பொறியியல் படித்தவர்.
இந்த தொழிற்நுட்ப அறிவை அவர் தனது போலீஸ் பணியில் பெரிதும் பயன்படுத்தி இருக்கிறார். தொழில்நுட்பத்தை திறமையாக பயன்படுத்தி கண்காணிப்பு பணியை மேற்கொண்டவராகவே அவர் மேற்கு வங்கத்தில் அறியப்படுகிறார்.
நிலக்கரி சுரங்க மாஃபியாக்களுக்கு எதிராக 90களில் அவர் மிகத்திறமையாக பணியாற்றினார். அவர் பிர்பும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்தபோது சுரங்க மாஃபியாக்களுக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டிருக்கிறார்.
அவர் பல சுரங்க மாஃபியாக்களை கைது செய்திருக்கிறார். அந்த சமயத்தில் அதிகாரிகள் யாரும் நிலக்கரி சுரங்க மாஃபியாக்களுக்கு எதிராக செயல்பட்டதில்லை.
மம்தா பானர்ஜி மற்றும் ராஜிவ் குமார்
தனது புத்திசாலிதனத்தால் இந்த அரசாங்கத்திற்கு நெருக்கமானவர் ராஜிவ் குமார்.
என்ன முரண் என்றால், மம்தா எதிர்க்கட்சியாக இருந்த போது, இதே ராஜிவ் குமார் மீது தான் தன் தொலைப்பேசி அழைப்புகளை ஒட்டுகேட்பதாக மம்தா குற்றஞ்சாட்டினார்.
ஆனால், மம்தா ஆட்சிக்கு வந்தப் பின், அவர் மம்தா அரசாங்கத்திற்கு நெருக்கமான அதிகாரி ஆனார்.
2016ஆம் ஆண்டு, கொல்கத்தா ஆணையராக அவர் நியமிக்கப்பட்டார்.
முன்பே அவர் பிதான் நகர் ஆணையராக இருந்திருக்கிறார். இதனையெல்லாம் கடந்து, கொல்கத்தா காவல்துறையின் சிறப்புப் படையின் தலைவராகவும் இருந்திருக்கிறார்.
சாரதா நிதி நிறுவன மோசடி மற்றும் ரோஸ் வேலி ஆகிய வழக்குகளை விசாரிப்பதற்காக சிறப்பு விசாரணை பிரிவை 2013ஆம் ஆண்டு மாநில அரசு உண்டாக்கியபோது, அதனை வழிநடத்தினார் ராஜிவ்.
2014ஆம் ஆண்டு இந்த இரண்டு வழக்குகளையும் சி.பி.ஐயிடம் ஒப்படைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
பல ஆவணங்கள், மடிக்கணினிகள், பென் டிரைவ், கைப்பேசிகளை ராஜிவ் குமார் தங்களிடம் ஒப்படைக்கவில்லை என சி.பி.ஐ குற்றஞ்சாட்டியது.
இந்த வழக்கில் சி.பி.ஐ பல சம்மன்களை ராஜிவ் குமாருக்கு அனுப்பியது. ஆனால், அவர் இதுவரை ஆஜாராகவில்லை என்கிறது சி.பி.ஐ.
இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்கதான் ராஜிவ் குமார் இல்லத்திற்கு சென்றதாக சி.பி.ஐ கூறி உள்ளது.
சாரதா நிதி மோசடி வழக்கு?
சாரதா நிறுவனம் 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
சிறிது காலத்திலேயே அந்த நிறுவனத்தின் மதிப்பு பல்லாயிரம் கோடி ரூபாய் உயர்ந்தது.
இந்த நிறுவனம் பொது மக்களிடமிருந்து பெரும் முதலீட்டை பெற்றது. ஆனால், அது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் அது நிறைவேற்றவில்லை.
இந்த நிறுவனத்தின் உரிமையாளர் சுதிப்தோ, அரசியல் ரீதியாக வலி மற்றும் புகழ் பெற, பெரும்பணத்தை ஊடகத்திற்காக செலவிட்டார்.
சில ஆண்டுகளில் பெரும் கோடீஸ்வரரானார் அவர்.
சாரதா நிறுவனத்திற்கு எதிரான முதல் வழக்கு ஏப்ரல் 16, 2013இல் பதியப்பட்டது.
சுதிப்தோ மேற்கு வங்கத்திலிருந்து தப்பி, தலைமறைவானார். பின்னர் அவர் காஷ்மீரில் கைது செய்யப்பட்டார். அவர் கைதானபின், அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் நின்றன.
உச்சநீதிமன்றம் 2014ஆம் ஆண்டு இந்த வழக்கை சி.பி.ஐயிடம் அளிக்க உத்தரவிட்டது. அப்போதிலிருந்தே இதற்கு மேற்கு வங்க அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :