You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திருச்சி வங்கிக் கொள்ளை நடந்தது எப்படி? என்ன ஆனது சிசிடிவி கேமரா பதிவிற்கு?
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினமணி: 'வங்கி சுவரில் துளையிட்டு நகைகள், ரொக்கம் கொள்ளை'
திருச்சி மாவட்டம், சமயபுரம் டோல்கேட் பகுதியில் உள்ள தேசிய வங்கியின் சுவரில் துளையிட்டு லாக்கர்களில் இருந்த சுமார் 500 பவுன் தங்க நகைகள், ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு கொள்ளையடித்துச் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.
சமயபுரம் டோல்கேட்டை அடுத்த பிச்சாண்டார் கோயில் பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி அலுவலர்கள் வழக்கம்போல், திங்கள்கிழமை காலை வங்கியைத் திறக்க வந்தனர். அப்போது, வங்கியின் லாக்கர்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த தங்க நகைகள், பணம் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, வங்கி அலுவலர்கள் போலீஸாருக்குத் தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்து போலீஸார் பார்வையிட்டு ஆய்வு செய்ததில், வங்கியின் பின்பக்க சுவரில் கேஸ் சிலிண்டர், வெல்டிங் மிஷின் கொண்டு துளையிட்டு உள்ளே நுழைந்த மர்மநபர்கள் லாக்கர்களை கேஸ் வெல்டிங் மிஷின் கொண்டு அறுத்து சுமார் 500 பவுன் மதிப்பிலான தங்கநகைகள், ரொக்கம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. சம்பவ இடத்தில் கேஸ் சிலிண்டர், சுத்தியல், கடப்பாரை, முகமூடி ஆகியவற்றை விட்டுச் சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளை குறித்து தகவலறிந்த வங்கி வாடிக்கையாளர்கள் வங்கி முன்பு குவிந்தனர். வங்கிக் கொள்ளை குறித்து சமயபுரம் போலீஸார் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குவந்த திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக், திருச்சி சரக டிஐஜி லலிதா லட்சுமி ஆகியோர் வங்கி அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் தற்போதைய நிலையில், சுமார் 5 லாக்கர்களில் இருந்த சுமார் 500 பவுன் தங்கநகைகள், ஒரு கோடி ரூபாய் ரொக்கம் ஆகியவை திருடு போயுள்ளது. வங்கி லாக்கர்களின் உரிமையாளர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொள்ளைச் சம்பவம் நடைபெற்ற வங்கியில் காவலாளிகள் இல்லை. வங்கி சிசிடிவி கேமரா பதிவுகளையும் கொள்ளையர்கள் உடன் எடுத்துச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர் என்கிறது அந்தச் செய்தி.
இந்து தமிழ்: 'இளையராஜா பாராட்டு விழா வழக்கு'
திரைப்பட தயாரிப்பாளர்களான ஜே.எஸ்.கே.சதிஷ்குமார், ராதாகிருஷ்ணன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ''பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் இளையராஜாவுக்காக 'இளையராஜா-75' என்ற பெயரில் பாராட்டு விழா நடத்த தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
ஆனால் இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுவைக் கூட்டி முடிவு எடுக்கவில்லை. தயாரிப்பாளர் சங்கத் தலைவரான நடிகர் விஷால் உள்ளிட்ட சிலர் தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளனர். ஏற்கெனவே சங்கத்தில் பல கோடி ரூபாய்க்கு நிதிமுறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. தற்போதும் ரூ.7.53 கோடி அளவுக்கு முறையான கணக்குகளைக் காட்டவில்லை.
இந்தச் சூழலில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்தி ரூ.3.5 கோடி வழங்குவது ஏற்புடையதல்ல. இதிலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளது. தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் கூட்ட உத்தரவிட வேண்டும். முறையான கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்யாமல், இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்தக்கூடாது என தடை விதிக்க வேண்டும்" என்று கோரியிருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு நடந்தது. அப்போது நீதிபதி, "இந்தப் பாராட்டு விழாவை ஏன் 2 வாரங்களுக்கு தள்ளிப்போடக்கூடாது" என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், "ஏற்கெனவே இந்த நிகழ்ச்சிக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டோம். சுமார் 3,500 பேர் இந்த நிகழ்ச்சியை கண்டுகளிக்கவுள்ளனர்.வெளிநாடுகளில் இருந்தும் பார்வையாளர்கள் வருகின்றனர். மனுதாரர்கள் மட்டும்தான் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்" என்று தெரிவித்தனர்.
அதையடுத்து நீதிபதி, ''இளையராஜாவுக்கு நடத்தப்படும் பாராட்டு விழா தொடர்பான நிகழ்ச்சிக்காக செலவிடப்பட்டுள்ள மற்றும் வசூலிக்கப்பட்டுள்ள தொகை குறித்த கணக்கு விவரங்களை புதன்கிழமைக்குள் (ஜன. 30) அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளிவைத்தார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'கடலில் கொட்டிய எண்ணெய் என்ன ஆனது?'
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் சென்னை கடற்பகுதியில் கப்பல்கள் விபத்துக்குள்ளாகி பெருமளவிலான எண்ணெய் சிந்தியது. பலர் களத்தில் இறங்கி கடுமையாக பணி செய்ததன் விளைவாக, அந்தப் பகுதியில் 300 டன் அளவிற்கான எண்ணெய் சகதி சுத்திகரிக்க்கப்பட்டது என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ். 150 டன் அளவிற்கான எண்ணெய் சகதி காமராஜர் துறைமுகத்தில் வைக்கப்பட்டிருப்பதாகவும், அவை பயோரெமிடியேஷன் செய்ய வைக்கப்பட்டிருப்பதாகவும் விவரிக்கிறது அந்த நாளிதழ்.
தினத்தந்தி: 'அனந்தகுமார் ஹெக்டேவை நீக்க வேண்டும்: ராகுல் காந்தி'
மத்திய திறன் மேம்பாட்டு இணை அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே நேற்று முன்தினம் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், "இந்து பெண்ணை தொட்டவரின் கை, உடம்பில் இருக்கக்கூடாது" என்றார். இது, சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் கண்டனம் தெரிவித்தார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
அதற்கு அனந்தகுமார் ஹெக்டே தனது 'டுவிட்டர்' பக்கத்தில் "தினேஷ் குண்டுராவ், ஒரு முஸ்லிம் பெண்மணியின் பின்னால் ஓடியவர் என்று மட்டுமே எனக்கு தெரியும்" என்று கூறி இருந்தார்.
இந்நிலையில், ஹெக்டேவின் கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆட்சேபனை தெரிவித்துள்ளார். "இந்த மனிதர் ஒவ்வொரு இந்தியரையும் தர்மசங்கடப்படுத்துகிறார். அவர் மத்திய அமைச்சராக இருக்கத் தகுதியற்றவர். எனவே, அவரை நீக்க வேண்டும்" என்று ராகுல் காந்தி கூறியுள்ளதாக தெரிவிக்கிறது தினத்தந்தி நாளிதழ்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :