சீன மொழி பேச டியூக் பல்கலைக்கழகத்தில் தடை: மின்னஞ்சல் அனுப்பிய பேராசிரியர் நீக்கம்

    • எழுதியவர், ஹிலியர் சங்
    • பதவி, பிபிசி

அமெரிக்க வட கரோலினாவில் உள்ள டியூக் பல்கலைக்கழகத்தில் இளநிலை படிப்புக்களுக்கான இயக்குநராக இருந்த பேராசிரியர், சீன மொழியில் பேசக் கூடாது என்று மின்னஞ்சல் அனுப்பிய விவகாரத்தில் நீக்கப்பட்டார்.

டியூக் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார் மெகன் நீலி. இவர் மாணவர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், "உயிரி புள்ளியியல் துறையில் பணிபுரியும் இரு பேராசிரியர்கள், தங்கள் துறையில் மாணவர்கள் சிலர் சீன மொழியில் உரையாடுவதாக என்னிடம் கூறினர். ஆங்கிலத்தில் பேசாமல் இவ்வாறாக பேசுவது விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இவரின் இந்த மின்னஞ்சல் ட்விட்டர் மற்றும் சீன சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.

மெகன் நீலியை பலர் இனவெறியர் என்று குற்றஞ்சாட்டினர். அதுமட்டுமல்லாமல், பல்வேறு நாடுகளிலிருந்து அங்கு வந்து படிக்கும் மாணவர்களை பாகுபாட்டுடன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் நடத்துகிறார்களோ என்று கவலை தெரிவித்திருந்தனர்.

அதே நேரம் பிபிசியிடம் பேசிய இனச் சிறுபான்மை மாணவர்கள் சிலர், அந்த பேராசிரியருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தனர்.

அவர் இனவெறியர் அல்லர், மாணவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் ஒரு பேராசிரியர் என குறிப்பிட்டனர்.

என்ன நடந்தது?

கடந்த வார இறுதியில் மெகன் நீலி மாணவர்களுக்கு சீன மொழியில் பேசக்கூடாது என்று குறிப்பிட்டு மின்னஞ்சல் அனுப்பியதாக ஒரு ஸ்க்ரீன்ஷாட் சமூக ஊடகங்களில் பரவியது.

அது உண்மையா அல்லது பொய்யா என்று ஐயம் நிலவிய சூழலில், அமெரிக்க ஊடகங்கள் அது உண்மையானதுதான் என்று உறுதிபடுத்தின.

"சில மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசாமல் சீன மொழியில் பேசுகிறார்கள். அனைவருக்கும் தெரிந்த மொழியில் பேசாமல் தங்களுக்குள் சீன மொழியில் சத்தமாக பேசுகிறார்கள். அவர்களுக்கு ஆங்கிலம் அந்நிய மொழியாக இருக்கலாம். ஆனால், ஆங்கில மொழி பேசும் திறனை மேம்படுத்திக் கொள்ள நாங்கள் வழங்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. அவர்களின் பெயர்களை குறிப்பெடுத்துக்கொள்ள விரும்புகிறோம், பயிற்சிக்காக அவர்கள் விண்ணப்பிக்கும் போது அவர்களை நினைவு வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்" என்று இரு ஆசிரியர்கள் தம்மிடம் கேட்டுகொண்டனர் என்கிறது மெகன் நீலி அனுப்பிய அந்த மின்னஞ்சல்.

தயவு செய்து மாணவர்கள் யாரும் சீன மொழியில் பேச வேண்டாம். ஆங்கிலம் உங்களுக்கு அந்நிய மொழிதான் என்பது எனக்கு புரிகிறது. ஆனால், அதனை மேம்படுத்திக் கொள்ள முயலுங்கள். தேவையற்ற விளைவுகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள் என்று மாணவர்களிடம் நீலி கேட்டுகொள்வதுபோல இருக்கிறது அந்த மின்னஞ்சல்.

மோசமான விளைவுகள்

அக்கறையுள்ள டியூக் மாணவர்கள் என்று தங்களை அழைத்து கொள்ளும் ஒரு குழு இது தொடர்பாக ஒரு மனுவை பல்கலைக்கழக நிர்வாகத்திடம் அளித்தது.

அதில், "பல்வேறு நாடுகளிலிருந்து இங்கு வந்து படிக்கும் மாணவர்கள் வகுப்பறைகளுக்கு வெளியே தங்கள் தாய் மொழியில் பேசினால் தண்டிக்கப்படுவார்கள் என்பது எங்களுக்கு மிகுந்த கவலை அளிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளனர்.

பிபிசியிடம் பேசிய அவர்கள், "இந்த மனுவில் டியூக் பல்கலைக்கழகத்தில் இப்போது படிக்கும் மாணவர்கள் மற்றும் பிற கல்வி நிலையங்களை சேர்ந்த 2000-க்கும் அதிகமான மாணவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்." என்றனர்.

அச்சம் தேவையில்லை

இதனை தொடர்ந்து அந்த கல்விநிலையத்தின் கல்வி புலத்தலைவர் மாணவர்களுக்கு கடிதம் எழுதினார்.

அதில், "இந்த மொழிதான் பேச வேண்டும், இந்த மொழி பேச கூடாது என்பது போல எந்த தடையும் இங்கு இல்லை. உங்களுக்கு விருப்பமான மொழியில் நீங்கள் பேசலாம். இதனால் உங்களது எந்த வாய்ப்பும் பறிபோகாது." என்று குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடக சர்ச்சை

சமூக ஊடகத்தில் இதனை கடுமையாக விமர்சித்து பதிவுகளை பலர் பகிர்ந்துள்ளனர்.

சிலர் அவரை இனவெறியர் என விமர்சித்துள்ளனர்.

சிலர் நீலி இனவெறியர் அல்ல. நீலியிடம் அந்த மாணவர்கள் குறித்து குற்றஞ்சாட்டிய பேராசிரியர்கள்தான் இனவெறியர் என்று குறிப்பிட்டுள்ளனர்.

அதே நேரம் சீன மாணவர்கள் சிலர் நீலிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

அவர் நல்ல பேராசிரியர். இனவெறியர் அல்லர் என்று சீல மாணவர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

நீலிக்கு ஆதரவாக வெளிப்படையாக கருத்து தெரிவிக்க சீன மாணவர்கள் அஞ்சுகிறார்கள். அவ்வாறு கருத்து தெரிவித்தால், தாங்கள் தேச துரோகி என்று கருதப்படுவோமோ என்பதுதான் அவர்கள் அச்சம் என்கிறனர் சில மாணவர்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :